வெளியிடப்பட்ட நேரம்: 08:07 (06/02/2018)

கடைசி தொடர்பு:08:07 (06/02/2018)

738 நாள்கள் மரத்தின் மேல் வாழ்ந்த பெண்! - ஒரு போராளியின் துணிச்சல் கதை! #MotivationStory

கதை

‘நம்முடைய எல்லாக் கனவுகளையும் நனவாக்க முடியும், அவற்றை விடாமல் பின்தொடரும் துணிவு நம்மிடம் இருந்தால்...’ என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார் அமெரிக்கத் தொழிலதிபரும், திரைப்படத் தயாரிப்பாளருமான வால்ட் டிஸ்னி (Walt Disney). எதையும் எதிர்கொள்ளும் தைரியம் வந்துவிட்டால், வெற்றி என்பது கிட்டத்தட்ட கிடைத்த மாதிரிதான். பல உலக சாதனையாளர்களை உலகம் திரும்பிப் பார்த்தது அவர்களின் துணிச்சலான செயல்களால்தான். அந்தத் தைரியமும் எளிதில் வந்துவிடாது. மனம் பழக்கப்பட வேண்டும்; தளராத உறுதி வேண்டும். அப்படிப்பட்ட துணிச்சல் மிகுந்தவர்களில் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த ஜூலியா பட்டர்ஃப்ளை ஹில் (Julia Butterfly Hill). அவரின் வாழ்க்கை ஒரு பாடம்!

உலகின் மிக உயரமான மரங்களில் ஒன்று `ரெட்வுட்.’ சில நாடுகளில் `செம்மரம்’, `ஊசியிலை மரம்’ என்றும் இதைச் சொல்கிறார்கள். அமெரிக்காவில், `ரெட்வுட்’ (Redwood) என அழைக்கப்படும் இந்த மரம் அதிகக் காலம் வாழும் மரங்களில் ஒன்று. நம் நாட்டில் வளர்வதைவிட அமெரிக்காவில் இதன் வளர்ச்சி அபாரமானது. 100 மீட்டருக்கும் மேல் உயரமாக வளரக்கூடியது. 7 மீட்டருக்கும் மேல் பருமனாகச் செழித்து வளர்வது. விலை மதிப்புள்ள மரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இது போதாதா? பல பேராசைக்கார நிறுவனங்கள், பெரும் பரப்பளவில் இருந்த, செழித்து வளர்ந்த ஆயிரக்கணக்கான மரங்களை, பல ஆண்டுகளாக வெட்டி விற்பனை செய்துவந்தன. 1,000 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடித்து நிமிர்ந்து நிற்கும் ரெட்வுட் என்றால், அது பழங்குடியினருக்கு புனிதமான தெய்வம்! ஆனால், அமெரிக்காவில் அவ்வளவு வயதான மரங்கள் அருகிப்போய்விட்டன. அவற்றையெல்லாம் மரத்தை வெட்டி விற்கும் நிறுவனங்கள் வெட்டிக் கொண்டுபோய்விட்டன.

ஜூலியா ஹில்

( PC: Wkimedia)

இந்த வன அழிப்பை எதிர்த்துப் போராடும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அமெரிக்காவிலும் இருந்தார்கள். ஒருநாள் அவர்களுக்கு கலிஃபோர்னியாவிலிருக்கும் ஹம்போல்ட் கவுன்ட்டியில் (Humboldt County), மலையோரமாக இருக்கும் ஒரு பகுதியிலுள்ள மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து, ஒட்டுமொத்தமாக அவற்றைத் துடைத்தழிக்கப் போகிறார்கள்; அதற்கு பிரமாண்டமான மரம் அறுக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்கிற செய்தி வருகிறது. உடனே அந்த இடத்துக்குக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஓடினார்கள். மரங்களை அறுக்கப் போவது `பசிபிக் லம்பர் கம்பெனி’ (Pacific Lumber Co) என்ற பெரிய நிறுவனம். செல்வம், செல்வாக்கு எல்லாம் உள்ள நிறுவனம். அதை எதிர்த்து எப்படிப் போராடுவது? கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்... மரங்களை அழிவிலிருந்து காக்க ஒருவர் மரங்களின் மேல் போய் அமர்ந்துகொள்வது. ' மர கம்பெனி, மரம் அறுப்பதை நிறுத்த வேண்டும். அதற்காக குறைந்தது ஒரு வாரத்துக்காவது மரத்தின் மேலேயே குடியிருந்து, அறவழியில் போராடுவது...’ இந்த முடிவு எல்லோருக்கும் பிடித்துப்போனது.

`ஆனால், ஒரு வார காலம்... மரத்தின் மேல் போய் வாழ்வதா? இது சாத்தியமில்லை’ என்றே அவர்களில் பலருக்குத் தோன்றியது. சிலருக்கு ஆர்வமிருந்தாலும், தைரியமில்லை. இதைக் கேள்விப்பட்ட ஒரு பெண் மட்டும் அந்த அசாதாரணமான காரியத்துக்கு முன்வந்தார்... அவர், ஜூலியா ஹில். இத்தனைக்கும் எந்தச் சுற்றுச்சூழல் அமைப்பிலும் அவர் உறுப்பினர்கூட இல்லை. அப்போது அவருக்கு 23 வயது. ஒரு வருடத்துக்கு முன்னர்தான் ஒரு கார் விபத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டிருந்தார். ஒரு நண்பருடன் காரில் சென்றுகொண்டிருந்தவரைக் குடித்துவிட்டு கார் ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன் பின்னாலிருந்து மோதியிருந்தான். ஸ்டீயரிங் ஜூலியாவின் தலையைத் தாக்கி, அவருடைய மண்டை ஒடுவரை ஊடுருவியிருந்தது. ஓராண்டுத் தீவிர சிகிச்சைக்குப் பின்னர், இப்போதுதான் சாதாரணமாகப் பேசவும் நடக்கவும் ஆரம்பித்திருந்தார். ஜூலியாவுக்கு, தான் வாழும் வாழ்க்கைக்கு புது அர்த்தம் தேவைப்பட்டது. விபத்துக்கு முன்னர், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சியங்களே அவருக்கு இருந்தன. விபத்துக்குப் பின்னர் அடியோடு போய்விட்டன. மரங்களைக் காக்க நடக்கும் அந்தப் போராட்டம் அவருடைய வாழ்க்கைக்கு ஒரு நல்ல அறிகுறியாகத் தோன்றியது. அதனால்தான் அவர்களோடு இணைந்திருந்தார் ஜூலியா.

மரம்

1997, டிசம்பர் 10. ஜூலியா சுமார் 180 அடி (55 மீட்டர்) உயரமுள்ள மரத்தில் ஏறினார். மரத்தின் பெரிய கிளைகளில் ஒரு தற்காலிகக் கூடாரத்தைத் தார்ப்பாயால் சக தோழர்கள் வடிவமைத்துக் கொடுத்தார்கள். அவருக்குத் தேவையான சில பொருள்களையும் கொண்டுவந்து கொடுத்தார்கள். போராட்டம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நமக்கெல்லாம் கிடைக்கும் சொகுசான வாழ்க்கை ஜூலியாவுக்கு இல்லை. மரத்தின் மேல் புரண்டு படுக்க முடியாது, நினைத்ததையெல்லாம் செய்ய முடியாது. அவருடைய சக நண்பர்கள் கயிறு வழியாகக் கொடுத்தனுப்பும் உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும். அவருடைய டிரங்க் பெட்டிதான், அவர் நடையை மறந்துவிடாமலிருக்க உதவும், நடை பழகும் ட்ரெட்மில். உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள ஒரு போர்வையைப் போத்திக்கொள்வார். மரக்கிளைகளுக்கு நடுவே ஒரு ஸ்டவ்கூட வைத்திருந்தார்.

ஜூலியா, தான் தங்கியிருந்த அந்த மரத்துக்கு `லூனா’ (Luna) என்று பெயர்வைத்திருந்தார். காற்று, மழை, புயல், வெயில் என அனைத்தையும் எதிர்கொண்டபடி அந்த மரத்தோடு வாழும் திறமைகளை வளர்த்துக்கொண்டார். இயற்கையோடு போராடி வாழ்வது அவருக்குப் பெரிய விஷயமாகப்படவில்லை. அதைவிட பெரிய எதிரியை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது, பசிபிக் லம்பர் கம்பெனி. ஜூலியாவின் போராட்டம் மெள்ள மெள்ள வெளியுலகின் கவனத்துக்கு வந்தது. ஜூலியா, சோலார் சக்தியால் இயங்கும் மொபைல்போன்களைப் பயன்படுத்தி, பல வானொலிகளுக்குப் பேட்டி கொடுத்தார்; சில தொலைக்காட்சி சேனல்களும் ஒரு லட்சியத்தோடு மரத்தில் வாழும் அந்தப் பெண்ணைப் பேட்டியெடுத்தன. அந்த மரத்தில் ஜூலியா வசித்தது கிட்டத்தட்ட 738 நாள்கள்.

பசிபிக் லம்பர் கம்பெனி, பல வகைகளில் அவருக்குக் குடைச்சல் கொடுத்தது. ஆட்களைவிட்டு மிரட்டிப் பார்த்தது. ஹெலிகாப்டரில் சிலர் வந்து அவரை மோதி வீழ்த்துவதுபோல மிரட்டிவிட்டுப் போனார்கள். ஒருநாள் மரம் வெட்டவில்லையென்றாலும், இழப்பு கம்பெனிக்குத்தானே! ஆனால், ஜூலியா குறித்த செய்திகள் வெளியே பரவ ஆரம்பித்த பிறகு மரம் வெட்டும் நிறுவனத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரெட்வுட் மரங்களைக் காப்பாற்றக் களமிறங்கியிருந்த அந்தப் பெண்ணின் துணிச்சல் அமெரிக்காவையே திரும்பிப் பார்க்கச் செய்தது. கடைசியில், பசிபிக் லம்பர் கம்பெனி மனம் இறங்கிவந்தது. ஜூலியாவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது... `லூனாவைப்போல் மிக உயரமான மரங்களை, குறிப்பிட்ட அந்தப் பகுதியில் வெட்டுவதில்லை’ என்பது ஒப்பந்தம்.

ஜூலியா ஹில்

738 நாள்களுக்குப் பிறகு ஜூலியா, `லூனா’-விலிருந்து கீழே இறங்கினார். இயற்கை மேல் இதுபோன்ற ஆபத்துகள் நேரும்போது, தனி மனிதப் போராட்டமும் வெற்றியைத் தரும் என்பதற்கு ஜூலியாவின் வாழ்க்கை ஓர் உதாரணம். துணிச்சலும், மரங்களை எப்படியும் தன்னால் காப்பாற்றிவிட முடியும் என்கிற நம்பிக்கைதான் அவருக்கு அந்த வெற்றியைப் பெற்றுத்தந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்