தமிழ் இலக்கியவாதிகளின் மௌனமே `உயிர் எழுத்து' மரணத்துக்குக் காரணம்! | Tamil Literary Magazine 'Uyir Ezhuthu' has stopped functioning

வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (06/02/2018)

கடைசி தொடர்பு:20:01 (06/02/2018)

தமிழ் இலக்கியவாதிகளின் மௌனமே `உயிர் எழுத்து' மரணத்துக்குக் காரணம்!

சிறுபத்திரிகைகள், தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியப் பங்களிப்பைச் செலுத்துபவை. முழுக்க முழுக்க இலக்கியத்துக்கான, எழுத்தாளர்களுக்கான ஒரு தனிப் பிரபஞ்சமாக சிறுபத்திரிகைகள் உள்ளன. வெகுஜன இதழ்களில், பொழுதுபோக்கு அம்சமுள்ள எழுத்துகளும் நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கும். சிறுபத்திரிகைகளோ, இலக்கியம், அரசியல், சுற்றுச்சூழல் குறித்து தேவைப்படும் விவாதங்களை எழுப்பவல்லவை. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் சிறுபத்திரிகைகளில் இயங்கியவர்களே!

இலக்கியத்துக்குள் புதிதாக நுழையும் வாசகனுக்கு ஒரு வழிகாட்டியாக  சிறுபத்திரிகைகள் இருந்துள்ளன. பல புதிய எழுத்தாளர்களை, கோட்பாடுகளை உருவாக்கியதில் சிறுபத்திரிகைகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு. சமூக வலைதளங்கள் இன்று விவாதங்களுக்கான ஒரு களமாக இருந்தாலும், சிறுபத்திரிகைகளின் கொள்கை, படைப்புகள், கோட்பாடுகள் சார்ந்து பற்பல விவாதங்களுக்கு வகை செய்துள்ளன. தமிழில், குறிப்பிடத்தகுந்த பல சிறுபத்திரிகைகள் வெளிவருகின்றன. அவற்றில் ஒன்றான `உயிர் எழுத்து', மார்ச் மாத இதழுடன் தன் இலக்கியப் பங்களிப்பை நிறுத்தவுள்ளது. 

தனது இதழை நிறுத்திக்கொள்ளப்போவதாக அதன் ஆசிரியர் சுதீர் செந்தில், தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது, இலக்கிய வட்டாரத்திலும் `உயிர் எழுத்து' வாசகர்கள் மத்தியிலும் பெரும்திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதன் ஆசிரியர் சுதீர் செந்திலுடன் பேசினோம். கட்டடக் கலைப் பொறியாளரான இவர், தொடர்ந்து 11 வருடங்களுக்குமேலாக `உயிர் எழுத்து' பத்திரிகையை நடத்திவருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

 உயிர் எழுத்து

``அதுதான் 11 வருஷங்களா நடத்திவிட்டோமே... அதான் நிறுத்தப்போகிறேன்" என்ற அவரின் குரலில், விடைபெறுதலுக்கான கனத்த துயரம் வெளிப்பட்டது. ``பொருளாதார நெருக்கடிதான் காரணம். நூலகங்களின் தரப்பிலிருந்து எந்தவித ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் இதழைத் தொடர்வது என்பதே கடினமான ஒன்றாக உள்ளது. இதழ்களுக்கான விளம்பரங்களும் சரியான அளவில் கிடைப்பதில்லை. இதழ்கள் விற்பனையானாலும் அதற்கான பணமும் கிடைப்பதில்லை. இதையெல்லாம் தாண்டி பெரும் மனச்சோர்வு ஏற்படுகிறது. இன்றைய இலக்கியச் சூழலும் முன்புபோல இல்லை. பெரிய அளவில் விவாதங்களோ, வாய்ப்புகளோ ஏற்படுவதில்லை. நாம் இவ்வளவு சிரமப்பட்டு நடத்தி, நமக்கு என்ன கிடைக்கப்போகிறது என்றால், எதுவும் இல்லை. இத்தனை வருடங்களில் பெரும் பணத்தை இழந்திருக்கிறேன். இதற்கு மேலாவது எனது குடும்பத்தைப் பற்றி யோசிக்க விரும்புகிறேன். பல புதியவர்களின் பெயர்கூட தெரியாமல் அவர்களிடம் `டெக்ஸ்ட்' இருந்தால் போதும் என நினைத்து வாய்ப்பு கொடுத்துள்ளேன். அதுதான் எனக்கு திருப்தியளித்த விஷயம். இன்று எழுதிக்கொண்டிருக்கும் குறிப்பிடத்தகுந்த இளம் எழுத்தாளர்கள் பலர் `உயிர் எழுத்து' பத்திரிகையில் எழுதியவர்கள் என்பது மனதுக்கு நிறைவான ஒன்று" என்றவரிடம் ``இணைய இதழாகவாவது தொடரலாமே!''  என்றேன். 

உயிர் எழுத்து

அதற்கு ``இணைய இதழை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். அது இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கானதாக மட்டுமே மாறிவிடும். கிராமப்புறத்தில் சென்று சேர்க்கும் அளவுக்கான இதழை நடத்துவதுதானே முக்கியமான விஷயம். இதையெல்லாம் தாண்டி, இன்று இலக்கியவாதிகளுக்குள் நிலவும் மௌனம்தான் `உயிர் எழுத்து' பத்திரிகையை நிறுத்துவதற்கு மிக முக்கியக் காரணம். சந்தாக்கள் சரிவர செலுத்தாதவர்கள்கூட வருத்தமாக முகநூலில் பதிவிடுவது முரணாக உள்ளது'' என்றார்.

``முடிவை, கொஞ்சம் மறுபரிசிலனை செய்யுங்கள்'' என்றேன்.

``பார்க்கலாம்'' என்றார். 

பணத்தை ஒரு பெரும்பொருட்டாக நினைக்காமல், இலக்கியத்துக்குப் பங்களிப்பு செலுத்த நினைக்கும் பல சிறுபத்திரிகைகள், இதேபோன்று நிறுத்தப்பட்டுள்ளன. பல கனவுகளோடு தொடங்கப்படும் இதுபோன்ற சிறுபத்திரிகைகள் நிறுத்தப்படுவது என்பது துயரமான ஒன்று. பல்வேறு மாற்றுச் சிந்தனைகள், விவாதங்கள், உரையாடல்கள் அந்தப் பத்திரிகையின் வாயிலாக நடந்திருக்கும். அவை இந்த இலக்கியத் தளத்திலிருந்து வெளியேறுவது என்பது, புதிய சிந்தனைகளை இந்தச் சமூகம் அழித்தொழிப்பதைப் போன்றது. மொத்தத்தில், தமிழ் இலக்கியத்தைக் காக்க நினைப்பவர்கள் அனைவரும் இதுபோன்ற விஷயங்கள் நிகழாமல் இதழ் தொடர்ந்துவர துணை நிற்பதுதான் இலக்கியத்துக்கு அவர்கள் செய்யும் அறம்!


டிரெண்டிங் @ விகடன்