வெளியிடப்பட்ட நேரம்: 06:12 (07/02/2018)

கடைசி தொடர்பு:06:12 (07/02/2018)

பசுக்களுக்கு ஆதார் அட்டை மட்டும் போதுமா... சுவிட்சர்லாந்தில் இன்பச் சுற்றுலா வேண்டாமா?!

மத்தியில் மோடியின் ஆட்சி வந்ததிலிருந்தே பசுக்களுக்குக் கொண்டாட்டம்தான்! பசுக்களை மையப்படுத்தி பசுவதை உள்ளிட்ட பல்வேறு அரசியல், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்துகொண்டிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக, பசுக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காகப் பசுக்களைப் புகைப்படம் எடுக்கவும், ரேகையை ஸ்கேனிங் செய்யவும் முடிவெடுத்துள்ளார்கள். முதல்கட்டமாக 50 கோடி ரூபாய் செலவில் 4 கோடி பசுக்களுக்கு ஆதார் அட்டை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பசுக்களுக்கு ஆதார் அட்டை மட்டும் கொண்டுவந்தால் எப்படி? இதுமட்டுமே பசுக்களுக்கு மரியாதையைக் கொடுத்துவிடுமா? இன்னும் என்னென்னவெல்லாம் செய்யலாம் என, நாமும் நம் பங்குக்கு அவர்களுக்கு ஐடியா கொடுக்கலாமே!

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, இலவச கழிவறைத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளதைப்போல, இனி இந்தப் பசுக்களுக்கும் கழிவறைகள் கட்டித்தர வேண்டும். பசுக்களின் நீள அகலத்துக்கு ஏற்ப கழிவறை கட்டுவது சற்று செலவுபிடித்த வேலைதான் என்றாலும், பசுக்களாயிற்றே! இந்தச் செலவுக்கெல்லாம் கணக்குபார்த்தால் எப்படி?

பசுக்களுக்கு கழிவறை கட்டிவிட்டால் போதுமா? அந்தக் கழிவறையை எப்படிப் பயன்படுத்துவது என்ற பயிற்சியையும் பசுக்களுக்குக் கொடுக்க வேண்டும். தற்போது எது எதுக்கோ கோச்சிங் சென்டர்கள் நடத்தி கல்லா கட்டும் கல்வி வள்ளல்கள் பெருத்துள்ள சூழலில், `பசு கக்கூஸ் கோச்சிங் சென்டர்' என்ற பெயரில் மிகப்பெரிய தொழில்வாய்ப்பும் பெருகக்கூடும்! பக்கோடா வியாபாரத்தைவிட இந்த கோச்சிங் சென்டர் பந்தாவான விஷயம்தானே!

ஆதார்

கழிவறைகளுக்குக் கட்டுப்படாமல், தங்கள் இஷ்டப்படி சாணி போட்டுத் திரியும் பசுக்களைக் கட்டுப்படுத்த, குழந்தைகள் பயன்படுத்தும் `டயபர்' போன்ற ஒன்றைத் தயாரித்து பசுக்களுக்கும் ஜட்டிபோன்று மாட்டிவிடவேண்டியதுதான்! இதுவும் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு `பெரிய அளவிலான' தொழில்வாய்ப்புதான்! இதைப் புழக்கத்துக்குக் கொண்டுவந்துவிட்டால், கிராமங்களில் `சாணி ஃப்ரீ' தெருக்களைப் பார்க்கலாம்!

கோயில் வாசலில் சலாம்போட்டு பிச்சையெடுக்கும் யானைகளுக்கே புத்துணர்வு முகாம் நடத்தும்போது, நம் கோமாதாக்களுக்கு நடத்தாமல்விட்டால் எப்படி? எனவே, ஆண்டுக்கு ஒருமுறை இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும்! சும்மா முதுமலைக்கும் மூணாறுக்கும் அழைத்துச் செல்லாமல், மாலத்தீவு, சுவிட்சர்லாந்து, கனடா போன்ற நாடுகளுக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச்சென்று புத்துணர்வூட்டி அழைத்து வர வேண்டும்! அந்தப் பசுக்களோடு, அவற்றை வளர்க்கும் உரிமையாளரின் குடும்பத்தையும் அழைத்துச்செல்ல வேண்டும்! (*Conditions Appy: ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே!)

பால் கறக்கும் மெஷின்களைப் பயன்படுத்துவதால் பசுக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றன. எனவே, `பேச்சி பேச்சி... நீ அருமையுள்ள பேச்சி!' என்பது போன்ற நிறைய பாடல்களை உருவாக்க வேண்டும்! அந்தப் பாடல்களுக்கு, பசுக்கள் தானாகவே பால் கறக்கும்படி பழக்கிவிட்டால் மிகச் சுலபமாக வேலை முடிந்துவிடும். இதற்கு முன்பாக, `பாலேலேலே தந்திடு! பாலேலேலே தந்திடு! கோமாதா வணக்கம்! கோமாதா வணக்கம்!' என்ற பல்லவியோடு ஒரு பசு வணக்கப் பாடலை இயற்ற வேண்டும். தேவைப்பட்டால், அந்தப் பாடலையும் தியேட்டர்களில் படம் தொடங்கும் முன் ஒளிபரப்பி அனைவரையும் எழுந்து நிற்கும்படி செய்யலாம்! கோமாதான்னா சும்மாவா பாஸ்?!

ஆதார்

பசுக்களுக்கு இன்னும் பல இடங்களில் வெறும் இலைதழைகளையும், ஊறல்தண்ணியையும், பருத்திக்கொட்டையையுமே உணவாகத் தருகிறார்கள். இதனால் போதிய ஊட்டச்சத்து இல்லாமலேயே பசுக்கள் வளர்கின்றன. இந்தக் குறையைக் களைய, பசுக்களுக்கும் சத்துணவுத் திட்டம் கொண்டு வர வேண்டும். அனைத்து கிராமங்களிலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்றவற்றை சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் ஊறவைத்து வழங்க வேண்டும். இதற்கென தனியாக சத்துணவுக்கூடம் அனைத்து கிராமங்களிலும் கட்டப்பட வேண்டும். அதேபோல கர்ப்பமாக இருக்கும் பசுக்களுக்கு சிவப்பான கண்ணுக்குட்டி பிறப்பதற்காக குங்குமப்பூ கலந்த சத்துமாவுக் கஞ்சி வழங்க வேண்டும்.

இன்னும் சில உதிரித் திட்டங்கள்...

 

பசுக்களின் கால்களுக்கு கொலுசும், காதுகளுக்குக் கம்மலும், கழுத்தில் தங்கச்சலங்கையும் அணிவிக்க வேண்டும். (ஒட்டியாணம் போடுவது உரிமையாளர்களின் வசதியைப் பொறுத்தது!)

இந்தத் திட்டத்துக்கு 'மாதார்' என பெயர் வைக்கலாம்.

ஆதார்

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, பசுக்களுக்கு ஏசி வசதியுடன் போதிய காற்று வசதி இருக்கும்விதத்தில் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும். குளிர்காலங்களில் ஹீட்டர் வசதியும் செய்துதரப்பட வேண்டும். பசுக்கள் கட்டப்படாமல் சுதந்திரமாகத் திரியவிட வேண்டும். `பசுக்களுக்கு மட்டும் இம்புட்டு செய்றீங்களே, அப்போ காளை மாடுகள் மட்டும் என்ன தொக்கா?' என நீங்கள் கேட்பது புரிகிறது! காளை மாடுகளுக்கு மட்டுமல்லாமல், கறுப்புக் கோமாதாக்களான எருமைகளுக்கும் அடுத்தடுத்த பட்ஜெட்டில் திட்டங்கள் தீட்டப்படும்! 

 


டிரெண்டிங் @ விகடன்