வெளியிடப்பட்ட நேரம்: 06:54 (07/02/2018)

கடைசி தொடர்பு:06:54 (07/02/2018)

தெருவில் கிடந்தவர் வீட்டு அதிபரான கதை! - வாழ்க்கையை மாற்றிப்போட்ட 3 பவுண்ட் உதவி! #MotivationStory

கதை

வீடற்றவர்களின் உலகம் கடினமானது. அதே நேரத்தில் சுவாரஸ்யமானது’ என்கிறார் அமெரிக்க நடிகர் பால் டேனோ (Paul Dano). மிகவும் அர்த்தம் பொருந்திய வாசகம் இது. கொஞ்சம் வசதியான குடும்பச் சூழலில் வாழ்கிறவர்களின் மேலோட்டமான பார்வைக்கு வேண்டுமானால் வீடில்லாமல் தெருவோரத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கை சுவாரஸ்யமாகத் தெரியலாம். உண்மையில், அதைப்போல சிக்கல் நிறைந்த, துன்பமயமான வாழ்க்கை வேறொன்று இருக்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல, உலகின் வளர்ந்த நாடுகளிலேயேகூட சாலையோரங்களில் வாழ்க்கையை நடத்துபவர்கள் ஏராளம். வேலையின்மை, அதன் காரணமாக எழும் வறுமைச் சூழல், நாட்டின் பொருளாதாரத் தேக்கநிலை, அரசியல் மாற்றம்... என ஏழ்மைக்குப் பல காரணங்கள். ஏழையாகப் பிறப்பதுகூட ஒரு காரணம். ஆனால், அவர்களிலும் இதயத்தில் ஈரம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். சத்தமில்லாமல், தங்களால் முடிந்த உதவியைப் (!) பிறருக்கு செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இரக்க குணம், ஒருவரை எப்படியெல்லாம் உயர்த்தும் என்பதை உணர்த்தும் கதை இது.

பிரிஸ்டன் (Preston) ... வடமேற்கு இங்கிலாந்திலுள்ள ஒரு நகரம். இரவு நேரம். அது ஒரு குளிர்கால மாதம். கடுமையான பனி நகரை நனைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் பெயர், டொமினிக் ஹாரிஸன் பென்ட்ஸென் (Dominique Harrison Bentzen)... 22 வயது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி. அன்றைக்கு ஒரு நிகழ்வுக்குப் போய்விட்டு வந்திருந்தார். வீடு திரும்ப வேண்டும். அதற்கு டாக்ஸி வேண்டும். டாக்ஸிக்குக் கொடுக்கப் பணம் வேண்டும். அது மட்டும்தான் அவரிடம் இல்லை.

பெண்

அவருடைய வங்கிக் கணக்கில் பணம் இருந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு ஏ.டி.எம்-மின் முன்பாகத்தான் நின்றுகொண்டிருந்தார். ஆனால், அவர் பர்ஸில் வைத்திருந்த ஏ.டி.எம் கார்டைக் காணவில்லை. `இப்போது, இந்த இரவில் எப்படி வீட்டுக்குத் திரும்புவது... யாரிடம் உதவி கேட்பது?’ ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஒருவர் அவரருகே வந்தார்.

``என்னம்மா... தனியா நின்னுக்கிட்டிருக்கே... ஏதாவது பிரச்னையா?’’

பென்ட்ஸென் கேள்வி கேட்டவரின் தோற்றத்தைப் பார்த்தார். கிழிந்து, அழுக்கேறிய உடை. எண்ணெய் காணாத தலை. சோர்ந்து, பரிதவித்துப் போயிருக்கும் முகம். `இவரிடம் எப்படி நம் பிரச்னையைச் சொல்வது... அப்படியே சொன்னாலும், இவர் மூலமாக உதவி கிடைக்குமா?’ என்று யோசித்தார்.

``சொல்லும்மா... என்ன பிரச்னை?’’ அவர் இப்போது அழுத்தமாகக் கேட்டார்.

இப்போது பென்ட்ஸெனுக்கு பதில் சொல்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை... ``ஒண்ணுமில்லை. இங்கே ஒரு இடத்துக்கு வந்தேன். திரும்ப வீட்டுக்குப் போகணும். ஏ.டி.எம்-ல பணம் எடுக்கலாம். ஆனா, ஏ.டி.எம் கார்டை எங்கேயோ மிஸ் பண்ணிட்டேன்...’’

``அவ்வளவுதானே... சரி... நீ வீட்டுக்கு டாக்ஸியில போக எவ்வளவு ஆகும்?’’

``ஒரு... ஒரு... மூணு பவுண்ட் இருந்தா போயிடலாம்...’’

பண உதவி

அவர் தன் கையிலிருந்த டப்பாவை எடுத்து, அதிலிருந்த நாணயங்களை எண்ணிப் பார்த்தார். சரியாக மூன்று பவுண்ட் இருந்தன. சிரித்த முகத்தோடு, அவற்றை அப்படியே எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். பென்ட்ஸெனுக்கு அந்தப் பணத்தை வாங்க மனமேயில்லை. ஆனால், கொடுத்தவரின் குரலும் அவரின் உடல்மொழியும் வாங்கவைத்துவிட்டன. அந்த நபரே, அந்த வழியில் வந்த ஒரு டாக்ஸியை நிறுத்தி, பத்திரமாக அவரை ஏற்றியும்வைத்தார்.

பென்ட்ஸென் கிளம்புவதற்கு முன்பாக அவரிடம் கேட்டார்... ``உங்களை எங்கே பார்க்கலாம்?’’

அந்த மனிதர் சிரித்தபடியே சொன்னார்... `எனக்கென்ன... இந்த மாதிரி தெருவுலதான் சுத்திக்கிட்டு இருப்பேன். இந்தத் தெரு இல்லைன்னா, அடுத்த தெரு. ஈஸியா என்னைக் கண்டுபிடிச்சிடலாம்.’’

பென்ட்ஸென் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்தார். ஆனால், மனம் அடித்துக்கொண்டே இருந்தது. `சே... தெருவோரம் வசிக்கும் ஒருவருக்கு இத்தனை தயாள குணமா? இவருக்கு எப்படிக் கைமாறு செய்வது?’ இந்த யோசனையிலேயே அன்றைய இரவைக் கழித்தார். அடுத்த நாள் தன் நண்பர்களுடன் தனக்கு உதவி செய்த நபரைத் தேடிப் போனார். முதல் நாள் பார்த்த தெருவில் அந்த மனிதரை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அன்றைக்கு முழுக்க அலைந்து திரிந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவழியாக நான்கு நாள்களுக்குப் பிறகு அந்த நல்ல மனிதரைக் கண்டுபிடித்தார். அவருக்குப் பல மாதங்களாக வேலையில்லை என்பதையும், அதனால் தெருவோரத்தில்கிடக்கிறார் என்பதையும் அறிந்துகொண்டார்.

ரோட்டில் உறங்கும் மனிதர்

இணையதளத்தில், ஃபேஸ்புக், ட்விட்டர் என எல்லாப் பக்கங்களிலும் கதையைச் சொல்லி உதவி கேட்டார் பென்ட்ஸென். உதவி குவிந்தது... அவர் எதிர்பார்த்ததைவிட! கிட்டத்தட்ட 20,000 பவுண்டுகளுக்கு மேலாக, கதையைக் கேட்டவர்கள் கொடுத்திருந்தார்கள். இப்போது, தெருவில் கிடந்த அந்த மனிதர் ஒரு வீட்டின் உரிமையாளர்... அவருக்குப் பொருத்தமான ஒரு வேலையும் கிடைத்தது. அவர் உதவி செய்த 3 பவுண்ட் அவர் வாழ்க்கையையே மாற்றிப்போட்டுவிட்டது. தன் கையிலிருந்த கடைசிக் காசையும் செலவழித்தவருக்குக் கிடைத்த உரிய மரியாதை அது!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்