தமிழ் உலகின் முதல் செம்மொழி... தேவநேய பாவாணரின் ஆய்வை சிலாகிக்கும் பெ. மணியரசன்! | Tamil Leader and Scholar Thevaneya paavanar Birthday special

வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (07/02/2018)

கடைசி தொடர்பு:19:36 (07/02/2018)

தமிழ் உலகின் முதல் செம்மொழி... தேவநேய பாவாணரின் ஆய்வை சிலாகிக்கும் பெ. மணியரசன்!

``தமிழ் மொழி, உலகிலேயே மிகத் தொன்மையான மொழி; திராவிடத்துக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் விளங்கும் மொழி'' என வாதிட்ட தேவநேய பாவாணர் பிறந்த தினம், இன்று.

தமிழ் மொழியின் சிறப்பைப் போற்றி வளர்த்த பெருமக்கள் பலரில், தேவநேய பாவாணர் குறிப்பிடத்தக்கவர். ஞானமுத்து - பரிபூரணம்தேவநேய பாவாணர் அம்மையார் தம்பதியின் பத்தாவது குழந்தையாக, 1902-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் நாள் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார். கிறிஸ்தவப் பின்னணியில்தான் இவரது வாழ்க்கை நகர்ந்தது. இவரின் தந்தையும் தாயும் அடுத்தடுத்து இறந்துபோகவே, யங்துரை என்கிற பள்ளித் தாளாளரின் உதவியுடன்  தொடக்கக் கல்வியைப் பயின்றார். அதன் பிறகு, வட ஆற்காட்டில் உள்ள தன் சகோதரியின் வீட்டில் தங்கிப் படித்தார். வாழ்க்கை சிரமமாக இருந்தாலும், பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லட் உயர்நிலைப் பள்ளி, சென்னை கிறிஸ்தவப் பள்ளி உள்ளிட்டவற்றில் தனது படிப்பைத் தொடர்ந்தார். இப்படி பல்வேறு பகுதிகளில் கல்வி பயின்ற தேவநேய பாவாணர், திருநெல்வேலியில் தென்னிந்திய தமிழ்ச்சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் கலந்துகொண்டார். அந்தத் தேர்வில் இவர் மட்டுமே வெற்றி பெற்றார்!

தமிழ்மொழி குறித்த சொல் ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டுள்ளார். தமிழ்மொழி மட்டுமல்லாமல், பதினெட்டுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றறிந்தவர். அந்த மொழிகளின் கூறுகளை ஆராய்ந்த பிறகே, தமிழ்மொழி மிகவும் தொன்மையானது என்ற கருத்தை முன்வைத்தவர். `தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை' எனப் போற்றப்படும் மறைமலை அடிகளாருக்கு, மிகவும் உறுதுணையாகச் செயல்பட்டவர் தேவநேய பாவாணர்.

கோயில்களில் தமிழ் வழிபாடு முறைதான் பின்பற்றப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியவர். ஆலயங்களின் மத வழிபாடு மட்டுமின்றி, பிறப்பு-இறப்பு குறித்த சம்பிரதாய முறைகளைக்கூட தமிழ்மொழியில்தான் பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறியவர். மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் `மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை, மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வாகக் கவனிக்கப்படுகிறது.   தேவநேய பாவாணர்

`தமிழ்த் தேசியத்தின் தந்தை' என அழைக்கப்படும் `பாவலரேறு பெருஞ்சித்திரனார்', `தென்மொழி இயக்கம்' என்ற அமைப்பை நடத்திவந்தார். அந்த இயக்கம் தேவநேய பாவாணரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. அந்த இயக்கம்தான் பாவாணருக்கு `மொழி ஞாயிறு' என்ற பட்டம் வழங்கி கௌரவித்தது. இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி, தபால்தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது மலேசிய அரசு. 

தேவநேய பாவாணர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசனிடம் கேட்டோம்...

பாவாணர்``மறைமலை அடிகளின் தமிழர் மறுமலர்ச்சி சிந்தனையின் ஒரு தொடர்ச்சிதான் தேவநேய பாவாணர். இவரின் `சொற்பிறப்பியல்' நூலைப் பாராட்டி, முன்னுரை எழுதிக் கொடுத்துள்ளார் மறைமலை அடிகளார். பாவாணரின் ஆய்வில் குறிப்பிடத்தக்கது, `தமிழ்தான் உலகிலேயே தோன்றிய முதல் செம்மொழி' என்ற ஆய்வுதான். மேலும், சம்ஸ்கிருதம் என்பது தமிழ் மொழியிலிருந்து சொற்களை எடுத்துதான் செம்மைத்தன்மை அடைந்தது என்றும் அவர் கண்டறிந்தார்.

அவரின் மிக முக்கியமான இன்னொரு பங்களிப்பு, தமிழர் தோன்றிய இடமான லெமூரியா கண்டத்தைப் பற்றியது. இந்தியப் பெருங்கடலில் மூழ்கிப்போன லெமூரியாதான், தமிழன் தோன்றிய முதல் இடம் என்பதைச் சொன்னது. இதன் காரணமாகத்தான், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு `குமரி' என்ற பெயர்வந்தது. `The Primary Classical Language Of The World' என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதினார். தமிழ் மொழியிலிருந்து சொற்கள் எப்படி பிறமொழிகளுக்குச் சென்று புதிய சொற்கள் உருவானது என்பதைப் பற்றி அந்தப் புத்தகத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். `செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி' என்ற திட்டம் தொடங்கப்பட்டு, அதற்கு இயக்குநராக பாவாணரை நியமித்தனர். அது இன்றும் செயல்பட்டுவருகிறது.  இது அவரின் மிக முக்கியமான பங்களிப்பு. அவரின் தமிழ்த் தொண்டு போற்றக்கூடியது'' என்றார்.

தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து பல்வேறு கட்டுரைத் திரட்டுகள், வேர்ச்சொல் குறித்த அகராதிகள் உள்ளிட்ட பலவும் எழுதியுள்ளார் பாவாணர். தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய பாவாணரின் நினைவாக, பல நூலகங்களுக்கு அவரின் பெயரை சூட்டி மரியாதை செய்துள்ளது தமிழக அரசு. நம் மொழி குறித்த பல்வேறு தாக்குதல்கள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், பாவாணர் பற்றித் தெரிந்துகொள்வது பெருமைக்குரியது!


டிரெண்டிங் @ விகடன்