“நம்புங்க… பூமி தட்டையானதுதான்!” - சீரியஸாக சொல்கிறார்கள் இவர்கள்

சென்ற வார இறுதியில் (பிப்ரவரி 3) நடந்த கூத்து இது. "மேட்" மைக் ஹ்யுக்ஸ் ("Mad" Mike Hughes) என்று அழைக்கப்படும் அந்த மனிதர் கலிஃபோர்னியா பாலைவனத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் அவரைத் தூக்கி கொண்டு செல்ல ராக்கெட் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அட, உண்மைதான்! அவரின் லட்சியமே பூமி தட்டையானது என்பதை நிரூபிப்பதுதான். இதற்காக அவர் எந்த எல்லைக்கும் போக தயார். உதாரணமாக, அன்றைக்கு, ராக்கெட் ஒன்றில் தன் உடலைக் கட்டிக்கொண்டு விண்ணில் பறந்து கீழே இருக்கும் பூமியை படம் பிடிக்கும் முயற்சியில்தான் அவர் இறங்கியிருந்தார். அவரின் இந்தச் சாகசத்தை நேரடியாக ஒளிபரப்ப ஓர் இணையத் தொலைக்காட்சியும் தயார் நிலையில் காத்திருக்கிறது. எண்கள் தலைகீழாக எண்ணப்படுவது முடிந்து, பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் ராக்கெட் புறப்படுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. "மேட்" மைக் ஹ்யுக்ஸ் “இதோ இப்ப ரெடி ஆயிடும்!” என்று ஏதோ ‘ஸ்டார்டிங் ட்ரபிள்’ உள்ள ஸ்கூட்டர் போல அந்த ராக்கெட்டை டீல் செய்தார். எந்த முன்னேற்றமும் இல்லை. முயற்சி கைவிடப்பட்டது.

"மேட்" மைக் ஹ்யுக்ஸ்

Photo Courtesy: Gene Blevins/Los Angeles Daily News/SCNG/Zuma

இது அவரின் முதல் முயற்சியல்ல. இதற்கு முன்னரே பல முறை இப்படிச் செய்ய போகிறேன் என்று களமிறங்கி இதே போல தோல்வியைத்தான் சந்தித்திருக்கிறார். அந்தத் தோல்விகளை கூடத் தாங்கி கொள்ளலாம். இந்த ராக்கெட் கொண்டு பூமி தட்டையானதுதான் என்று அவர் நிரூபிக்க முயல்வதையும் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்காக இவர் தயார் செய்திருக்கும் இந்த ராக்கெட் எத்தனை அடி வரை மேலே போகும் என்று கேட்டால் 1800 அடிகள் (550 மீட்டர்) என்று கூலாக சொல்கிறார். அவ்வளவு அடிகள் மட்டுமே மேலே போய் படம் எடுக்க எதற்கு இந்த ராக்கெட் அலப்பறைகள் எல்லாம்? ஒரு உயரமான கட்டடத்தில் ஏறினால் போதாதா? இந்தக் கேள்விக்கு எல்லாம் "மேட்" மைக் ஹ்யுக்ஸ் அவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. அவரிடம் மட்டுமல்ல, அவர் இருக்கும் அமைப்பான ‘ஃபிளேட் எர்த் சொசைட்டி’யிடமும் (Flat Earth Society) பதில் இல்லை. அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் பூமியின் வடிவம் குறித்து முன் வைக்கப்படும் கேள்விகளை அவர்கள் தவிர்க்கவே நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பூமி தட்டையானதுதான். கோள வடிவம் கிடையாது.தட்டையான பூமி

நாம் நடக்கும் போது பூமி சமப்பரப்பாகதானே இருக்கிறது? நிலத்தை ஒரு சமமான இடமாகத்தானே நாம் எப்போதும் உணர்கிறோம்? அப்போது பூமி என்ற நம் வாழ்விடமும் தட்டையானதுதானே? இதுதான் அவர்களின் வாதம். இதற்கு எதிர்வாதமாக நாசா போன்ற விண்வெளி நிறுவனங்கள், பல்வேறு நாடுகளின் அரசு சார்ந்த நிறுவனங்கள் வெளியிடும் பூமியின் படங்களை முன்வைத்தால், அதை ஏற்க இவர்கள் தயாராக இல்லை. இது விண்வெளியில் இருந்து எடுத்த படம். அங்கே இருந்து பார்க்கும் போது நம் பூமி பூகோள வடிவம்தான் என்றால், “எங்கே போட்டோஷாப் செய்தீர்கள்?” என்பார்கள். இது இன்று நேற்று தொடங்கிய நம்பிக்கை இல்லை. 1800களின் மத்தியில் சாமுவேல் ரோபோதம் என்ற ஆங்கில எழுத்தாளர், பூமியின் வடிவம் இப்படியெல்லாம் இருக்கலாம் என்று சில படைப்பு விளக்கங்களை முன்வைத்தார். அவர் கூறியதில் ஒரு வடிவம்தான் இந்தத் தட்டையான பூமி. ஆனால், 1950களில்தான் இந்த ‘ஃப்ளாட் எர்த் சொசைட்டி’ ஒரு சங்கமாக நிறுவப்பட்டு, உறுப்பினர்கள் இணைந்தனர். இன்றும் சமூக வலைதளங்கள் மூலம் இவர்களின் கருத்துக்கள் பரப்பப்பட்டு மக்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தச் சங்கத்தின் கணக்குப்படி, 2009ம் ஆண்டு முதல் வருடத்திற்கு 200 புதிய உறுப்பினர்கள் விடாமல் இணைந்து வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டனை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

via GIPHY

சரி, அறிவியல் அறிவு வளராத காலகட்டத்தில் இப்படி ஒரு கூட்டம் இருந்திருக்கலாம். இப்போதுமா இப்படி இருப்பார்கள்? ஒருவேளை இவர்கள் வேண்டுமென்றே இதைச் செய்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இதற்கென்று ஒரு பிரத்தியேக இணையதளம், ஆராய்ச்சிக் கட்டுரைகள், விளக்கப்படங்கள் என்று முழு வீச்சுடன் இப்போதும் செயல்படுவதை பார்த்தால், இவர்கள் மிகவும் சீரியஸான மனிதர்களாகத்தான் உணரப்படுகிறார்கள்.

அப்படியென்றால், இவர்களைப் பொறுத்தவரை பூமி என்பது எப்படி இருக்கிறது?

பூமி என்பது ஒரு வட்டமான வில்லை. அதன் நடுவில் ஆர்டிக் பிரதேசம் இருக்க, ஓரங்களில் அன்டார்டிகா மற்றும் அதன் 150 அடி உயர மலைகள் இருக்கின்றன. இந்த மலைகள்தான் நம்மைப் பூமியின் ஓரத்திலிருந்து கீழே விழாமல் தடுக்கின்றன. இந்த மலைகளை ஏறி இறங்கினால், நாம் பூமியிலிருந்து கீழே விழுந்து விடுவோம். இதை தடுக்கத்தான் நாசா போன்ற நிறுவனங்கள் வேலை செய்கின்றன. நாதன் தாம்சன் என்ற ‘ஃபிளேட் எர்த் சொசைட்டி’ ஆதரவாளர் ஒருவர், கடந்த மே மாதம், ஸ்டார்பக்ஸ் ஒன்றில், நாசா விஞ்ஞானி ஒருவரைச் சந்தித்ததாகவும், போதையில் அவர் நிறைய உண்மைகளைக் கசியவிட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். சில நாட்களில் அந்த வீடியோ யூட்யூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

ஃபிளேட் எர்த் சொசைட்டி புத்தாண்டு வாழ்த்து

Photo Courtesy: tfes.org

இரவு, பகல் என்பது வில்லை வடிவில் இருக்கும் பூமிக்கு எப்படி நிகழ்கிறது?

வில்லை வடிவில் இருக்கும் பூமியின் மேல், சூரியன் மற்றும் சந்திரன் கோள வடிவில் இருக்கின்றன. பூமியிலிருந்து 4,828 கிலோமீட்டர்கள் உயரத்தில் இவை இரண்டும் இருப்பதாகவும், 5000 கிலோமீட்டர்களுக்கு மேலே நட்சத்திரக் கூட்டங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். 24 மணி நேரங்களை அட்டவணை போட்டு பிரித்து பூமிக்கு இவையெல்லாம் வெளிச்சம் கொடுப்பதாக கூறுகின்றனர். சரி, கிரகணங்கள் எப்படி ஏற்படுகின்றன என்றால், Anti-Moon என்று ஒன்று இருப்பதாகவும், அதுதான் கிரகணத்தின் போது, சூரியன் மற்றும் சந்திரனையும் மறைப்பதாகவும் விளக்கம் கூறி தலை சுற்ற வைக்கின்றனர்.

தட்டையான பூமி

இதை விடக் கொடூரமான நம்பிக்கை என்னவென்றால், புவியீர்ப்பு விசை என்ற ஒன்று இல்லை என்றும், வில்லை வடிவ பூமி ஒரு நொடிக்கு 32 கிலோமீட்டர்கள் தொடர்ந்து மேலே பறந்து கொண்டிருப்பதாகவும் கூறி சிரிப்பை வரவழைக்கின்றனர். அப்படியென்றால், விமானங்களை நேர்கோட்டில் செலுத்தி இலக்கை அடைவதைப் பற்றி கேட்டால், நம்மிடம் இருக்கும் GPS கருவிகள் அனைத்தும் போலி என்றும், அதை வைத்து விமான ஓட்டிகளை ஏமாற்றுகிறார்கள் என்று கூறி எதிர்வாதம் செய்பவர்களை டயர்டு ஆக்குகின்றனர். அதைவிட, ஐக்கிய நாடுகள் சபையின் லோகோவை சுட்டிக்காட்டி, அதில் பூமி வில்லை வடிவில் தட்டையாக இருப்பதாகவும், அவர்களுக்கு அந்த உண்மை தெரியும் என்றும் கூறுகின்றனர். இது வெறும் சாம்பிள்தான். நீங்கள் அறிவியல் ரீதியாக என்ன கேள்வி வைத்தாலும், அதற்கு விடையாகப் பல புதிய விஷயங்களை, தங்களுக்குச் சாதகமான கணக்குகளைக் கண் முன்னே நிறுத்துகிறார்கள். இவர்களின் கருத்தை பரப்ப வேறு, ஓர் இணையதளம், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் என்று  நிறுவி தினமும் போஸ்ட் போடுகிறார்கள். அவர்கள் கூறும் மேலும் பல சுவாரஸ்ய கோட்பாடுகளை நீங்கள் அங்கே தெரிந்து கொள்ளலாம்.

இவர்களின் சொசைட்டிக்கு நம் தமிழகத்தில் இருந்து யாரேனும் உறுப்பினர்கள் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!