யானைத் தந்தம் கடத்தலுக்கு எதிராகப் போராடிய பிராட்லி மார்ட்டின்... கடத்தல்காரர்களால் படுகொலை!

யானைத் தந்தத்திற்காகக் கொல்லப்பட்ட யானைகள் ஒருபக்கம். அந்தக் கடத்தலில் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையே பல ஆயிரங்களைத் தாண்டும். கோடிகளில் புரளும் யானைத் தந்தம், காண்டாமிருக கொம்பு வர்த்தகம் தடைபடும்போதெல்லாம் அதற்கு ஆதரவாகச் செயல்படுகிற மனிதர்கள் பல நாடுகளிலும் கொல்லப்படுகிறார்கள். 

வனவிலங்கு வர்த்தகத்தில் முக்கிய ஆராய்ச்சி நடத்திய அமெரிக்கப் புலனாய்வு நபர் பிராட்லி மார்ட்டின் (Bradley Martin). கென்யா நாட்டின் நைரோபியில் வசித்து வந்தார். 1970 களிலிருந்து, பிராட்லி மார்ட்டின் சர்வதேச யானைத் தந்தம் மற்றும் காண்டாமிருக கொம்புகளுக்கு எதிரான கறுப்புச்சந்தை குறித்த தகவல்களைச் சேகரித்தார். காண்டாமிருகங்கள் மற்றும் யானைகளின் தந்தங்கள் கடத்தல் குறித்த நிகழ்வுகளில் அவர் ஆபத்தான விசாரணைகளை மேற்கொண்டார், கறுப்புச் சந்தை மையங்கள், மற்றும் விலையை நிர்ணயிக்கிற டீலர்கள், சட்டவிரோதப் பொருள்களை வாங்குபவர்கள் பலரையும் அவர் உலகிற்கு அடையாளம் காட்டினார். பிராட்லி மார்டின் சில நேரங்களில் இரகசியமாகவும், தனிப்பட்ட ஆபத்துடனும் உலகின் தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணித்தார். வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து பல அதிர்ச்சிகர செய்திகளையும் தகவல்களையும் சேகரித்தார். பிராட்லி மார்டினின் மிக சமீபத்திய அறிக்கை, 2017 -ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

தந்தம்

ஆப்பிரிக்காவில் யானை, காண்டாமிருகம் மற்றும் வன அதிகாரிகள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த நிழல் உலக வர்த்தகத்தின் செயல்பாடுகளை விவரிக்கும் பல அறிக்கைகளை பிராட்லி மார்ட்டின் தயாரித்தார். 2008 ல், ஏமனில் காண்டாமிருக கொம்புகளுக்காக அதிகரித்து வரும் கொலைகள் குறித்து ஆவணமாகச் சமர்ப்பித்தார். மிகவும் ரகசியமாக கடத்தல்காரர்களுடன் பயணித்து அந்த அறிக்கையை அவர் தயார் செய்திருந்தார். 2010 ல், ஹாங்காங்கில் வளர்ந்து வரும் யானைத் தந்த சந்தையைப் பற்றிய ஆவணங்களைத் தயாரித்து சர்வதேச விலங்குகள் நல அமைப்பிடம் வழங்கியிருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் சீனா கடந்த ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி யானைத் தந்த வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அவரது அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை  “ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்”  நிறுவனத்தாலும் மிகப்பெரிய வனவிலங்கு அறக்கட்டளைகளாலும், ஐக்கிய நாடுகள் சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டது. மார்ட்டின் சர்வதேச காண்டாமிருக பாதுகாப்பு சிறப்பு தூதராகப் பணியாற்றினார். பிராட்லி மார்ட்டின் தரவுகளை அடிப்படையாக வைத்து சட்டம் மற்றும் சட்டவிரோத தந்த பரிமாற்றங்களை பல நாடுகளிலும் தடை செய்தன. 

இந்த நிலையில் கடந்த 4 ம் தேதி நைரோபியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது கழுத்தில் பட்டையால் நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அடையாளம் இருப்பதாக நைரோபி காவல்துறை தெரிவித்துள்ளது. பிராட்லி மார்ட்டின் மரணம் உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. மார்ட்டின் மரணம் தந்தத்தின் விற்பனை மீதான தடையை பல நாடுகளும் அமல்படுத்திய பிறகு நடந்திருக்கிறது. குறிப்பாகச் சீனா தடை செய்தது கறுப்புச் சந்தையில் மிகப் பெரிய பின்னடைவாக இருந்து வந்தது. உலகம் முழுவதிலும் அமெரிக்கா, காங்கோ, நைஜீரியா, அங்கோலா, சீனா, ஹாங்காங், வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளில் உயிரைப் பணயம்  வைத்து விலங்குகள் கடத்தல் குறித்த தகவல்களை திரட்டியிருந்தார். அவர் கொல்லப்பட்டபோது மியான்மார் நாடுகளில் நடக்கும் கடத்தல் குறித்த ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். 

யானை தந்தம் பிராட்லி மார்ட்டின்

வன விலங்கு ஆர்வலர்களையும், ரேஞ்சர்களையும், பாதுகாப்பாளர்களையும் கொலை செய்வது சமீபத்தில் அதிகரித்துள்ளது. பிராட்லி மார்ட்டின் அறிக்கையின்படி கடந்த ஆண்டு197 பேர் யானை மற்றும் காண்டாமிருக வேட்டையின் போது கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்தது. கடந்த ஆண்டு விலங்குகளுக்கு எதிரான மொத்த தாக்குதல்கள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இரட்டிப்பாக இருந்தது என அந்த அறிக்கை கூறியது. 

மார்ட்டின் கொலைக்குப் பின்னால் உள்ள நோக்கம் இன்னமும் தெரியாத நிலையில், உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்வாதிகள் கடந்த காலத்தில் தங்கள் பணிக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வன அதிகாரிகள், பாதுகாவலர்கள், சமூக ஆர்வலர்கள் எனக் கொல்லப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் யானைகள் கொல்லப்படுவது சர்வ சாதாரணம். வேட்டையாடப்படும் இந்த யானைகளைக் காக்க பலரும் போராடி வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் வைன் லாட்டர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 புதன்கிழமை டார் எஸ் -  சலாம் விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு காரில் பயணம் செய்த போது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  

யானை தந்தம்

விலங்குகள் கடத்தலில் மனிதர்கள் கொல்லப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. வெளியே தெரியாத பல படுகொலைகளையும் கடத்தல்காரர்கள் அரங்கேற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 

பணம் பத்தும் செய்யும்.. அந்தப் பணத்திற்காக கடத்தல்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!