வெளியிடப்பட்ட நேரம்: 09:08 (09/02/2018)

கடைசி தொடர்பு:09:08 (09/02/2018)

இரு கால்களும் இல்லாமல், விளையாட்டுத் துறையில் ஜொலித்தவரின் வெற்றிக் கதை! - #MotivationStory

கதை

`முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?’ - மிகச் சாதாரணமாக ஒரு காலத்தில் நம்மூரில் புழங்கிய பழமொழி இது. கால்கள் இல்லாத ஒரு மாற்றுத்திறனாளியால் மரம் ஏற முடியாது... அவனால், விரும்பிய தேனை எடுக்க முடியாது, ருசிக்க முடியாது என்பது இதன் பொருள்.  சரி... நடப்புக் காலத்துக்கு வருவோம். இரண்டு கால்களையும் இழந்த ஒருவரால் தடகள வீரராக முடியுமா? அதாவது, ஆங்கிலத்தில் `Athlete’ என்று சொல்வார்கள். அது சாத்தியமா? சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கிறது ஜெரால்டு மெட்ரோஸ்-ன் (Gérald Métroz) கதை. 

ஸ்விட்சர்லாந்திலிருக்கும் சின்னஞ்சிறிய கிராமம் செம்பிராஞ்சர் ( Sembrancher). அந்த கிராமத்தில், 1962-ம் ஆண்டு பிறந்தார் ஜெரால்டு மெட்ரோஸ். வீட்டுக்குப் பக்கத்திலேயே ரயில்வே ஸ்டேஷன். ஜெரால்டுக்கு அப்போது இரண்டு வயது. தத்தித் தத்தி நடக்கும் வயது. எதையும் மோதிப் பார்த்துவிடுகிற, அறிந்துகொள்ளத் துடிக்கிற பச்சை மண் பருவம். நெருப்பைத் தொட்டால் சுடும், பனிக்கட்டியைத் தொட்டால் விரல்கள் சில்லிடும்... என அறிந்துகொள்கிற பருவம். ரயிலும் அந்தக் குழந்தைக்கு ஒரு விளையாட்டாகிப் போனது; அதுவே வினையாகவும் ஆனது. வீட்டில் பெற்றோரும் மற்றோரும் கண்டுகொள்ளாத ஒரு தருணத்தில் குழந்தை ஜெரால்டு அருகிலிருக்கும் தண்டவாளத்துக்கு அருகே போனது; சரியாக அதே நேரத்தில் வந்தது ரயில். 

ஜெரால்ட்

Pic Courtesy : GeraldMetroz

தண்டவாளத்துக்கு நடுவே மாட்டிக்கொண்ட குழந்தை ஜெரால்டின் இரண்டு கால்களும் துண்டாகிப்போனது; கிட்டத்தட்ட இடுப்புக்குக் கீழே வெட்டிப்போட்டுவிட்டது ரயில். அதே நேரத்தில், குழந்தையின் உயிருக்கு எதுவும் ஆபத்து நேரவில்லை. ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றுவிட்டது ரயில். விபத்தில் சிக்கிய ஜெரால்டை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனார்கள். எப்படியோ உயிரைக் காப்பாற்றிவிட்டார்கள்; கால்கள் போனது, போனதுதான்.   

கொஞ்சம் வளர்ந்ததும் ஜெரால்டு மரக்கால்களைப் பொருத்திக்கொண்டு நடக்கப் பழகினார். சின்ன வயதிலிருந்தே, தன் சக சிறுவர்களைப்போல் ஆடி, ஓடி விளையாட வேண்டும் என்கிற தீராத ஆர்வம் ஜெரால்டுக்கு. விளையாட்டு... அதன் மேல் அவருக்கு அப்படி ஓர் ஈர்ப்பு, பிரியம், வெறி.. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த அளவுக்கு விளையாட்டை நேசித்தார் ஜெரால்டு. கால்கள் இல்லையென்றால், விளையாட முடியாதா என்ன? இந்த எண்ணமே அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. செயலிலும் இறங்கினார். 
அவருடைய பத்தாவது வயதில் தன் செயற்கைக் கால்களுடன் ஹாக்கி விளையாட்டில் ஒரு கோல்கீப்பராகக் களமிறங்கினார். அதேபோல் `வீல்சேர் பேஸ்கெட்பால்’ (Wheelchair basketball) என்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டில் கலந்துகொண்டு சாதனை படைத்தார். சுவிட்சர்லாந்து அணி வெற்றிபெற முக்கியக் காரணமாகவும் இருந்தார். கடினமான வாழ்க்கையை நிர்வகிக்கப் பழகிக்கொண்டார் ஜெரால்டு. தனக்குக் கால்கள் இல்லை, தான் உடல் ஊனமானவன் என்பதை மறக்கக் கடுமையாக முயற்சி செய்தார். 

பேஸ்ட்கட் பால்

அப்போது ஜெரால்டுக்கு 25 வயது. கனடாவுக்குக் கிளம்பினார்... மன உறுதியோடு. வீல்சேர் டென்னிஸில் (Wheelchair Tennis) விளையாடக் கடுமையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவருடைய உழைப்பு வீண் போகவில்லை. நான்கு முறை `சுவிட்சர்லாந்து சாம்பியன்’ பட்டம்; 1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த பாரா ஒலிம்பிக் விளையாடுகளில் விளையாடத் தேர்வு. இரு கால்களையும் இழந்த ஒரு மனிதர் தடகள விளையாட்டுகளில் இவ்வளவு சாதனைகளைப் படைப்பதென்பது அபூர்வம். 

ஜெரால்டு ஒரு வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் மேனேஜராகப் பின்னாளில் வலம்வந்தார். சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். தன் வாழ்க்கையைப் பற்றி அவரே ஒரு புத்தகம் எழுதினார். தான் ஒரு மாற்றுத்திறனாளி என்கிற எண்ணம் அவருக்கு இல்லவே இல்லை. பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்தார். பிரமாதமான உரைகளை நிகழ்த்தினார். 

டென்னிஸ்

தன் உடல் குறைபாட்டை முழுவதுமாக உணர்ந்து, அதை அப்படியே ஏற்றுக்கொண்டும் இருந்தார். அதே நேரம், தடகளத்தில் தன் முத்திரையைப் பதிக்க வேண்டும் என்றும் விரும்பினார். அதை செய்தும் காட்டிவிட்டார். உற்சாகம், ஊக்கம், தன்னம்பிக்கை இருந்துவிட்டால் யாரும், எந்தச் சாதனையையும் புரியலாம் என்பதற்கு ஜெரால்டு மெட்ரோஸின் கதை மிகச் சிறந்த உதாரணம்!

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்