வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (09/02/2018)

கடைசி தொடர்பு:11:37 (09/02/2018)

ரோஸ் டே, ப்ரபோசல் டே, கலர் கோட்ஸ்... வேலன்டைன்ஸ் டே வெரைட்டி! #ValentinesDay

'ஃபீல் மை லவ்'னு எப்போதும் தனிமையிலேயே லவ்விக்கொண்டிருக்கும் ஒன் சைடு லவ், 'நீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம்'னு தூங்காம லவ் புராணம் பாடும் புது லவ் ஜோடி, 'போடா போடி'னு ஓயாம சண்டை போட்டுக்கொள்ளும் ஃபைட்டர் ஃபிஷ் லவ் ஜோடி, '60 ஆகிடுச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு. ஆனாலும், லவ் ஜோடிதான்' என என்றும் பதினாறு நினைப்பில் மிதக்கும் வயதான கப்புள், இப்படி லவ் ஜோடிகள்ல பலவிதம் இருக்கு. அனைத்துக் காதல் ஜோடிகளும் ஆரவாரமா கொண்டாடும் 'காதலர் தினம்' வரப்போகுது.  #ValentinesDay

ரோஸ் டே, ப்ரபோசல் டே, கலர் கோட்ஸ் இப்படி ஏகப்பட்ட கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும் காதலர் தினத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் காதலர்களைவிட, குறிப்பிட்ட சில தொழில் முனைவோருக்குதான் டபுள் கொண்டாட்டம். ஃபிளாஷ் மாப், சர்ப்ரைஸ் ப்லான்னர்ஸ், கேண்டில் லைட் டின்னர் என தற்போது ட்ரெண்டாகிக்கொண்டிருக்கும் காதலர் தின ஸ்பெஷல் ஐட்டம்களும் ஏராளம். இப்படிச் செய்வதெல்லாம் என்னவோ இப்பொழுது ரூல்ஸாகவே மாறிவிட்டது. 'எவ்ளோ விலை ஏத்தினாலும், காதலிக்கு பிடிச்சதை வாங்கிக் கொடுக்க நம்மகிட்டதான வரணும்'னு சர்ர்ர்ர்ருனு விலை ஏத்திக் காசு பார்க்கும் பிசினஸ் பட்டியல் இதோ.

Valentines Day


பொக்கே:
காதலின் சின்னமாக ரோஜா மலரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத குறை ஒன்றுதான். மற்றபடி காதலர் தினம் என்றாலே ரோஜா மலர்கள் கட்டாயம் இருக்கும். அதிலும் ஒவ்வொரு நிறத்துக்குப் பின்னால் விதவிதமான கதைகளும் உண்டு. சிவப்பு ரோஜா ஆழமான காதலை உணர்த்துவதற்கு, பிங்க் ரோஜா நன்றியைக் கூறுவதற்கு என்று அனைத்து நிற ரோஜாக்களுக்கும் வெவ்வேறு கதைகளைக் கட்டி விற்பனையைச் சூடு பிடிக்க வைத்திருக்கிறார்கள் வியாபாரிகள். 'என்ன பாஸ் நீங்க! உங்க அன்பான காதலிக்கு ஒரு ரோஸ் மட்டும் போதுமா? இந்தாங்க பாஸ் இந்த பொக்கேவைக் கொண்டுபோய் கொடுங்க. அசந்துடுவாங்க அண்ணி'னு தொழிலாளியின் சர்க்கரை சொற்களில் மயங்கி கை நிறைய பூங்கொத்தை வாங்கிக்கொண்டு போவான் காதலன். அதுசரி, மலருக்கு மயங்காத பெண்கள் இருக்கலாம். ஆனால், இதனால் லாபம் ஈட்டாத வியாபாரிகள் இல்லை.

Roses


கார்ட்ஸ் :
புறாக்கள் மூலம் காதலைத் தெரிவித்த காலம் முதல் வாட்ஸ்அப்பில் GIF படங்களை அனுப்பிக் காதலை வெளிப்படுத்தும் காலம் வரை, காதலை நேரில் சொல்லத் தயங்குபவர்களின் எண்ணிக்கை அதிகம். இப்படிப்பட்டவர்களுக்காகவே 'நாங்க இருக்கோம்'னு கைகளைக் கூப்பி கூப்பிடுகிறது 'கிரீட்டிங் கார்ட்ஸ்'. லவ் ப்ரபோசல் கார்ட், மெகா சைஸ் கார்ட், மியூசிக் கார்ட், பாப் அப் கார்ட்ஸ் என்று ஏராளமான டிசைன்களில் கிரீட்டிங் கார்ட்ஸ் சந்தையில் கொட்டிக்கிடக்கிறது. e - cards போல நவீன ரக கார்டுகள் வந்தாலும், நம் கைப்பட எழுதிக் கொடுக்கும் கார்டுக்கு என்னிக்குமே தனி ரெஸ்பான்ஸ்தான். இதனால் தொழில்முனைவோர்களின் ரெஸ்பான்ஸும் ஆஹா ரகம். கூலான ரொமான்டிக் வரிகளுடன் சமகால வடிவமைப்புகளில் அன்பைப் பொழிய வைக்கும் கிரீட்டிங் கார்ட்ஸ் வாழும் காலம் பிப்ரவரி.

Greeting Cards


கேக்ஸ், சாக்லேட்ஸ் :
பிறந்தநாள், திருமண நாள், பதவி உயர்வுன்னு தொட்டதுக்கெல்லாம் கேக் சாக்லேட்னு மேற்கத்திய வழக்கங்களைத் தீவிரமாகப் பின்பற்றி வரும் நாம், காதலர் தினத்தை மட்டும் விட்டுவைப்போமா? இதற்கும் கேக், சாக்லேட்ஸ் என்று பட்ஜெட் நீளும். அதிலும் ஐசிங் கேக், லேயர் கேக், சீஸ் கேக்னு ஏகப்பட்ட வெரைட்டி. காதலியை இம்ப்ரஸ் பண்ண நம்ம பையனும் 'அண்ணே! இங்க இருக்கிறதுலயே பெஸ்ட் கேக் வேணும். எவ்ளோ காஸ்ட்லியா இருந்தாலும் பரவாயில்ல' எனக் காதல் வேகத்தில் சொல்ல, அதே வேகத்தில் விலையும் ஏறும். 'சோ ஸ்வீட்! சோ க்யூட்!'னு நாலு வார்த்தைக்காக நாலாயிரம் ரூபாய் தொலைந்த கதை.

Cakes and Chocolates


டெடி பியர் :
7 இல்லை 70 கழுதை வயசானாலும் இந்த டெடி பியரை கட்டிப்பிடிச்சுத் தூங்கும் பழக்கம் பெண்களை விட்டுப் போகிற வரைக்கும் டெடி பியர் வியாபாரம் பிச்சிக்கும். அதுலயும் விதவிதமான சைஸ், மெட்டிரியல், கலர்ஸ்ன்னு எத்தனை வெரைட்டிஸ்னு யாராலும் சொல்லவே முடியாத அளவுக்குக் குவிந்துள்ளன. காதலியை மகிழ்விக்க காதலன் எடுக்கும் முயற்சிதான் எத்தனை. கடைகடையாய் ஏறி இறங்கி, இறுதியில் 'காதலர் தினத்துக்குனு ஸ்பெஷலா இறக்குமதியான டெடி பியர் சார்'னு சொன்ன அடுத்த நொடி பில்லிங் செக்‌ஷன்ல பக்கா பாக்கிங்ல உட்கார்ந்திருக்கும், காதலியின் உயரம் அளவு நீண்டிருக்கும் டெடி பியர்.

Teddy Bear


ரெட் டிரஸ் :
விண்டோ ஷாப்பிங்னு நெனச்சுட்டுப் போனாலே கை நிறைய பேக்குடன் வீடு திரும்பும் பெண்களுக்கு, 'காதலனை வசீகரிக்க ஸ்பெஷல் டிரஸ் டிஸ்கவுன்ட்டில்' என்ற விளம்பர அறிவிப்பைப் பார்த்தால் சும்மா விடுவார்களா. புடவையிலிருந்து மேற்கத்திய பால் டிரஸ் வரை அனைத்திலும் சிவப்பு மற்றும் பிங்க் நிறங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் உடைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும் மாதம் இது.

Red Dress

இதுவே காதலர் தினத்தின் சிறந்த உடையென நம் மனதில் பதித்து விடுகிறார்கள் வியாபாரிகள். நாமும் சற்றும் யோசிக்காமல் பட்டென்று இரண்டு டிரெஸ் பார்சல் செய்துவிடுகிறோம். ஆடைகளின் மீது உள்ள ஆசையோ... காதலனைக் கவர்வதற்காக முயற்சியோ! ஆக மொத்தத்தில் இதனால் கடைக்காரர்களுக்கு இல்லை வீழ்ச்சி!

 


டிரெண்டிங் @ விகடன்