'பெண்களுக்கென்று தனி சிப்ஸா... எதுக்கு?'' - இந்திரா நூயியை வறுத்தெடுக்கும் பெண்கள்! #FoodSexism | ”Why do we need ladies-friendly chips?", women questions Indira Nooyi in social media

வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (09/02/2018)

கடைசி தொடர்பு:19:08 (09/02/2018)

'பெண்களுக்கென்று தனி சிப்ஸா... எதுக்கு?'' - இந்திரா நூயியை வறுத்தெடுக்கும் பெண்கள்! #FoodSexism

இந்திரா நூயி

”இளைஞர்கள் நாங்கள் தயாரிக்கும் சிப்ஸை, பாக்கெட்டிலிருந்து எடுத்துச் சாப்பிடும்போது, கையில் ஒட்டும் மசாலாவை ருசிக்க விரும்புவார்கள். உடைந்துகிடக்கும் சிப்ஸ்களை தூக்கிப்போடாமல், கடைசிவரை சாப்பிடுவார்கள். ஆனால், பொதுஇடங்களில் பெண்கள் இப்படிச் சாப்பிட முடியாது. பொதுஇடங்களில் சிப்ஸைக் கொறிக்கும்போது, சத்தம் வருவது அவர்களுக்குப் பிடிக்காது. அவர்களின் விரல்களில் ஒட்டியிருக்கும் மசாலாவை சப்பிச் சாப்பிட முடியாது. பாக்கெட் அடியில் உடைந்துகிடக்கும் சிப்ஸ்களை சாப்பிட விரும்ப மாட்டார்கள். எனவே, பெண்களுக்காக பிரத்யேகமாக சில சிப்ஸ் வகைகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். கொறிக்கும் சத்தம் அதிகம் வராமல், மசாலாக்கள் விரல்களில் ஒட்டாத வகையில், அவர்களின் மணிபர்ஸில் எடுத்துச்செல்லும் வகையில் சிப்ஸை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். பெண்கள், தங்களின் பையில் நொறுக்குத் தீனிகளை எடுத்துச்செல்ல விரும்புவார்கள். பெப்ஸிகோ அத்தகைய வடிவங்களைப் புதுமையாகச் செய்யப்போகிறது'' 

சமீபத்தில், பெப்ஸிகோ நிறுவனத்தின் சி.இ.ஒ இந்திரா நூயி, ஒரு பிரபல வானொலிப் பேட்டியில் கூறிய இந்தக் கருத்துகளுக்குச் சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்துள்ளனர். நம் சமூகத்தில், உணவுத் தொடர்பாகப் பெண்களுக்கு நிலவும் கட்டுப்பாடுகள் பற்றியும் பாரபட்சங்கள் பற்றியும் சமூக வலைதளத்தில் பல விவாதங்களை முன்னெடுத்துள்ளனர். இதனை #FoodSexism என்ற ஹெஷ்டேக்குடன் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. காலங்காலமாக, பெண்கள் தங்கள் வீடுகளிலேயே உணவு விஷயத்தில் புறக்கணிக்கப்படுவதையும், இரண்டாம்பட்சமாகக் கருதப்படுவதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர் பெண் நெட்டிசன்கள். 

ரித்துபர்னா சாட்டர்ஜி என்பவர், “பெரும்பாலான இந்திய வீடுகளில் பெண்கள், குறிப்பாக அம்மாக்கள், தனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை என உணவைத் தவிர்ப்பார்கள். உண்மையில், அவர்கள் சாப்பிடுவதற்கு எதுவும் இருக்காது. வீட்டிலுள்ள ஆண்களுக்கே உணவில் பெரும் பகுதியை வைப்பார்கள். மேலும், வீட்டிலுள்ள அனைவரும் சாப்பிட்ட பிறகே, பெண்கள் சாப்பிடுவார்கள். இன்னும் இந்தியாவின் சில பகுதிகளில், ஆண்களின் எதிரில் பெண்கள் சாப்பிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் சமையலறையில்தான் சாப்பிடுவார்கள். ஏனென்றால், அவர்கள் ஆட்டுக்கறி துண்டுகளை ஆண்கள் முன் கடித்துச் சாப்பிடுவது அழகற்றதாக நினைக்கின்றனர்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்திரா நூயி

மற்றொருவர், “பண்டிகை நாள்களிலும் மற்ற விசேஷத் தினங்களிலும் என் அம்மா நேரத்துக்குச் சாப்பிடாமல் உடம்பை எப்படிப் பாழாக்கிக்கொள்கிறார் என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

அலெக்ஸ் என்பவர் தனது ட்விட்டர் பதிவில், “பெண்கள் வேலைக்குச் சென்றாலும், ஆண்களைவிடவும் அதிக வீட்டு வேலைகளையும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதையும் செய்கிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இதே நிலைதான்’ என்கிறார். 

இந்திரா நூயி

பிரீனா என்பவர், “உணவுப் பழக்கவழக்கங்களில் ஆண்-பெண் வேறுபாடு இங்கே வேரூன்றியிருக்கிறது. அதனை யாரும் கேள்வி கேட்கவும் நினைப்பதில்லை. இதனை நான் எப்போதும் கேட்பேன்” என்று வேதனைப்பட்டுள்ளார். 

இந்த ட்விட்டர் பதிவுகளுக்கு, சில எதிர்வினை பதிவுகளும் வருகின்றன. பெண்களுக்கு இணையாக ஆண்களும் குடும்பத்துக்காக தியாகங்கள் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதில் ஒருவர், “என் அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். பெரும்பாலான நேரங்களில் என் அப்பாதான் வீட்டில் சமைப்பார். எனக்கும் என் தங்கைக்கும் ஊட்டிவிடுவார்” என்கிறார். 

மற்றொரு ட்விட்டர் பயன்பாட்டாளர், “அம்மாக்கள் மட்டும் தியாகம் செய்வதில்லை. அப்பாக்களும் ஒருநாளில் 14 மணி நேரம் உழைக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். 

சிப்ஸ் தயாரிப்பில் எதற்கு ஆண் - பெண் வேறுபாடு வேண்டியுள்ளது? இப்படியெல்லாமா மார்கெட்டிங் செய்வார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பெரும் நிறுவனங்கள், மக்களின் பழக்கவழக்கங்களில் ஊடுருவி, தங்களின் வியாபாரத்தைப் பெருக்க நினைக்கிறது. எந்தவோர் அறத்தையும் பின்பற்றுவதில்லை என்பதற்கு இந்திரா நூயின் கருத்துகள் உதாரணமாகியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்