வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (10/02/2018)

கடைசி தொடர்பு:11:57 (10/02/2018)

நாப்கினைப் பயன்படுத்தாத அந்த 82% பெண்களுக்கு இந்தத் திரைப்படம் அவசியம்! #Padman

பேட்மேன்

வ்வொரு மாதமும் பெண்களுக்கு இயற்கையாக நிகழும் ஓர் உடல்நிலை மாற்றம்...மாதவிடாய்! அதை காலங்காலமாக, சாஸ்திரம், சம்பிரதாயம், தீட்டு என நமக்கு நாமே கட்டிப்போட்டுக்கொண்ட பழக்கவழக்கங்களில் பின்னிப் பிணைந்து, நம் சமூகத்தில் ‘அந்த நாள்களை’ பற்றி பேசுவதையே புறக்கணித்துவருகிறோம்; அதைப் பற்றி பேசுபவர்களை குற்றவாளிகளாகவே பார்க்கிறோம். ’பீரியட்ஸ்’ பற்றி வெளிப்படையாகப் பேசும் சமூகம் இணையத்தில் இருக்கலாம். நகரங்களில் இருக்கலாம். ஆனால், அந்த ஐந்து நாள்களில், தனியறையில்... ஏதோ ஓர் ஒதுக்கப்பட்ட உயிரினம் போல்  வாழும் பெண்கள்தாம் இந்தியாவில் பெரும்பாலான பகுதியில் இருக்கிறார்கள் என்பது இந்த இருபத்தியோறாம் நூற்றாண்டின் கசப்பான உண்மை! 

இதைவிடவும் வேதனையான விஷயம்.. பெண்கள் மாதவிடாய் நாள்களில் மேற்கொள்ளும் சுகாதாரமற்ற முறைகள்! அழுக்குத் துணிகள், சாம்பல், மண் என மாதவிடாய் நாள்களில் பயன்படுத்தபடும் பொருள்கள் தன் உடல்நலத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என உணராத பெண்களும்,  மாதவிடாய் பற்றிய அறிமுகமே இல்லாத ஆண்களும் பார்க்கவேண்டிய திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியிருக்கும் ‘பேட்மேன்’!

குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் மெஷினை கண்டுப்பிடித்து, இரண்டு ருபாய்க்கு நாப்கின்கள் விற்ற தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம், மாதவிடாய் பற்றி சமூகத்தில் நிலவும் பிற்போக்கான சிந்தனைகள், சானிட்டரி  நாப்கின் பயன்படுவதன் நன்மை புரிந்தாலும் அதனை பயன்படுத்தமுடியாத பொருளாதார நெருக்கடி, சானிட்டரி நாப்கின் குறித்து வெளிப்படையாகப் பேசுவதை எவ்வளவு முட்டாள்தனமாக நம் சமூகம் அணுகுகிறது என மாதவிடாய் சுற்றியிருக்கும் கருத்தியல்களை உடைத்துப் பேசியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

“நான் அழுக்குத் துணி பயன்படுத்தி, அதனால் நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் பரவாயில்லை; உங்களால்  எனக்கு ஏற்படும் அவமானம்தான் தாங்கமுடியவில்லை”, என்று அக்‌ஷய் குமார் நாப்கினின் தேவை குறித்து பெண்களிடம் பேசுவதை கேட்டு அவரின் மனைவி ராதிகா ஆப்தே கதறி அழும் காட்சியும், மாதவிடாய் விஷயத்தில், ஓர் அண்ணன் தங்கைக்கு நாப்கின் பயன்படுத்துமாறு கூறுவது எவ்வளவு பூதாகரமான பிரச்னையாக மாறுகிறது என்பதை சுட்டிக்காட்டிய காட்சியும் இந்தச் சமூகம் பெண்ணிற்கு தன்னைப் பற்றி நிலைப்பாடுகளை கற்றுத்தந்திருக்கும் அறிவின் வெளிப்பாடு! ஓர் அடிப்படை தேவை எப்படி அவமானமாக மாறியது அல்லது மாற்றப்பட்டிருக்கிறது என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி!

பேட்மேன்

பெண்களின் மாதவிடாய் காலத்தை, ‘டெஸ்ட் மேட்ச்’ என்று  எள்ளிநகையாடும் வளர்இளம் பருவ சிறுவர்கள், பூப்பெய்திய  பெண்ணுக்கு நாப்கின் கொடுப்பதைக் கண்டு கொதிக்கும் அவளின் தாய், நாப்கின் பயன்படுத்தி அதற்கு கருத்துக்கூற மறுக்கும் மருத்துவம் படிக்கும் இளம்பெண்கள், அக்‌ஷய் குமார் நாப்கின் தயாரிப்பில் காட்டும் ஆர்வத்தை கண்டு அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நினைத்துக் கவலைகொள்ளும் அவரின் தாய்...இப்படிப் பல வடிவங்களில் மாதவிடாய் பற்றின சமூகப் பார்வையைப் பதிவுசெய்திருக்கும் இயக்குநர் பால்கிக்குப் பாராட்டுகள்.

ஓர் ஆண், பெண் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டினால், எத்தகைய அவமானங்களைச் சந்திக்கவேண்டியுள்ளது என்பதை அக்‌ஷய் குமாரின் நடிப்பில் காட்டியிருக்கும் விதம், ஆண்கள் ஏன் இதைப் பற்றி சிந்திக்க மறுக்கிறார்கள் என்பதையும் நமக்கு உணர்த்திருக்கிறது. “வெட்கம்..வெட்கம்..வெட்கம்”..என்று நாம் புறம்தள்ளும் மாதவிடாய் கால சுகாதாரம், பெண்ணுக்குப் பொருளாதார ரீதியாகவும் பயன்படும் என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறது.

“இந்தியாவில் வெறும் 18% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகிறார்கள்”, என்று அக்‌ஷய் குமார் கூறும் வசனம்தான், மீதமிருக்கும்  82%  பெண்கள் இந்தத் திரைப்படத்தை பார்ப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்துகிறது! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க