அமெரிக்க ராணுவத்தில் ரோபோக்கள்... நிஜமாகிறதா 'எந்திரன்' க்ளைமாக்ஸ்?! | AI in Future : American armed forces to use robots in Future ?

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (10/02/2018)

கடைசி தொடர்பு:11:10 (10/02/2018)

அமெரிக்க ராணுவத்தில் ரோபோக்கள்... நிஜமாகிறதா 'எந்திரன்' க்ளைமாக்ஸ்?!

ராணுவத்தில் ரோபோக்கள்

உலகம் முழுவதும் இருக்கும் கடினமான பணிகளில் ஒன்று ராணுவம். ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான பாதுகாப்பை அளிப்பதுதான் ராணுவத்தின் வேலை. அது பாலைவனமோ, பனிப்பிரதேசமோ உலகத்தின் எந்த மூலையாக இருந்தாலும் பாதுகாப்பு என்று வந்துவிட்டால் அங்கே ராணுவம் செயல்பட்டாக வேண்டும். அதற்கு ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகள் ராணுவ வீரர்களுக்குக் கடினமான பயிற்சிகளை அளிக்கின்றன. உலக நாடுகளோடு ஒப்பிடும்போது அமெரிக்கா தனது ராணுவத்தைப் பலமாக வைத்திருக்கிறது.பட்ஜெட்டில் அதிக தொகையை ராணுவத்திற்கு ஒதுக்கும் நாடுகளில் முதலிடம் அமெரிக்காவுக்குத்தான். கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர்களை ஒவ்வோர் ஆண்டும் ராணுவத்திற்காகவே ஒதுக்குகிறது.

மற்ற நாடுகளில் எப்படியோ அமெரிக்காவில் ராணுவத்தினருக்கான பயிற்சிகள் சற்று கடினம்தான். ராணுவத்தில் சேர்ந்துவிட்டால் போதும் உடலைப் பிழிந்து எடுத்துவிடுவார்கள். கடினமான பயிற்சிகள் இருக்கும், அந்தப் பயிற்சிகள் எல்லாம் முடிந்த பின்னர் உயிர்பிழைக்கவே கடினம் என்ற சூழ்நிலைகளைக் கூட சமாளிக்கும் திறனை ராணுவ வீரர்கள் பெற்று விடுவார்கள். தரைப்படை, கப்பற்படை, வான்படை சில ரகசியப் படைகள் எனப் பல பிரிவுகளைக் கொண்ட அமெரிக்க ராணுவத்தில் இன்னும் சில காலத்தில் ரோபோ படைப்பிரிவு இடம்பெறலாம்.

ராணுவமும் ரோபோக்களும்

ரோபோ

 
எவ்வளவுதான் கடினமான பயிற்சியளித்தாலும் போரின்போது மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியவில்லை. அதற்கு மாற்றுத் தீர்வாக முன்வைக்கப்படுவது ரோபோக்கள்தாம். திரைப்படங்களில் காட்டுவது போல ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்தலாம் என்ற யோசனை பல காலமாகவே இருந்து வருகிறது. தற்பொழுது இராணுவத்தைப் பொறுத்தவரை வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது மற்றும் அதைச் செயலிழக்க வைப்பது, மீட்புப்பணிகள் போன்றவற்றில் ரோபோக்கள் செயல்படுகின்றன. போரிடுவதற்காகவோ திருப்பித் தாக்கும் வகையிலோ இன்னும் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் ரோபோக்களுக்குக் கட்டளை இடுவதில் இருப்பதில் இருக்கும் சிரமம்தான். ஒரே ஒரு ரோபோ என்றால் அதை எளிதில் கட்டுப்படுத்த முடியும். ஆனால் ஒரு பெரும் கூட்டமாக இருக்கும் ரோபோக்களுக்குக் கட்டளை இடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதுவும் போர் நடக்கும்பொழுது சமயத்திற்கு தகுந்தவாறு செயல்படவேண்டியிருக்கும் என்பதால் தனித்தனியாக வெவ்வேறு வேலைகளைச் செய்யச் சொல்லி ரோபோக்களுக்குக் கட்டளை இடுவது சாத்தியமில்லாதது. இதற்கு தீர்வு என்பது இரண்டே இரண்டுதான். ஒன்று ரோபோக்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும் அல்லது சுயமாகச் சிந்திக்கும் திறன் படைத்த ஏதாவது ஒன்று ரோபோக்களுக்குக் கட்டளையிட வேண்டும். 

செயற்கை நுண்ணறிவுத் திறன்

இப்படிப்பட்ட வேளையில்தான் கைகொடுக்கிறது செயற்கை நுண்ணறிவுத் திறன். சமீப காலமாக அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் திறன் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்தி ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ரோபோக்களை பயிற்றுவிக்க முடியும் என்பதை அமெரிக்க ராணுவத்தின் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் குழுவினரும் இணைந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர்கள் கண்டறிந்துள்ள TAMER என்ற புதிய அல்காரிதம் மூலமாக ரோபோக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்த முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள். செல்லப்பிராணிகளுக்குக் கொடுக்கப்படும் எளிமையான கட்டளைகளைப் போலவே ரோபோக்களுக்கு 'இது சரி' 'இது தவறு' என்று இதன் மூலமாக உணர்த்த முடியும். ரோபோக்களில் இருக்கும் மெஷின் லேர்னிங் மற்றும் AI தொழில்நுட்பம் அதை பதிவு செய்துகொள்ளும் அடுத்த முறை அதே கட்டளை பிறப்பிக்கப்படும் பொழுது முன்பை விட அதிவேகமாகக் கட்டளையைச் செயல்படுத்தும். இதன் விளைவாக எதிர்காலத்தில் களத்தில் போரிடும் ராணுவ வீரர்களுக்குப் பக்க பலமாக ரோபோக்கள் செயல்படும் வாய்ப்பை இந்தத் தொழில்நுட்பம் அதிகப்படுத்தியிருப்பதாகக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிட்டி ரோபோ தனக்காகப் போரிட ரோபோ படையையே உருவாக்கும். ரோபோக்களுக்கான கட்டளையையே சிட்டியே வழங்கும். அந்தக் காட்சி விரைவில் நிஜமாகலாம்.

அமெரிக்காவிற்கு முன்னரே உலகில் மற்றொரு வல்லரசாகத் திகழும் ரஷ்யாவும் இந்தத் தொழில்நுட்பத்தை ஏற்கெனவே பரிசோதித்துப் பார்த்துள்ளது. ராணுவத்தில் ரோபோக்களைப் பயன்படுத்தும் திட்டத்தில் புதிதாக இணைந்திருக்கும் நாடு இந்தியாதான். செயற்கை நுண்ணறிவுத்திறன் பயன்பாட்டை அதிகரிக்கவும் ரோபோக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் ஜப்பானோடு இணைந்து செயல்பட இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்காலத்தில் போரின்பொழுது ராணுவ வீரர்களுக்கு நிகராக ரோபோக்களும் களத்தில் போரிடக்கூடும்.

 


டிரெண்டிங் @ விகடன்