Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பாய் ஐஸ் க்ரீம்', 'ஜிகர்தண்டா' ஆன கதை! - மதுரை கார்னர் விளக்குத்தூண் கடை விசேஷம்

ளநீர், மோர், எலுமிச்சைச் சாறு, நீரா, பழச்சாறுகள், பதநீர்... என நம்ம ஊர் பானங்களின் மதிப்புக்கும் அவை அள்ளித்தரும் நன்மைகளுக்கும் அளவேயில்லை. அந்த வரிசையில் ஜிகர்தண்டாவுக்குத் தனித்துவமான சிறப்பு உண்டு. சுண்டக் காய்ச்சிய பாலில் கடற்பாசி, பாதாம் பிசின், நன்னாரி சர்பத் இவற்றுடன் பாலாடை, பாசந்தி ஐஸ் க்ரீம் என்ற சரியான கலவையில், பதத்தில் கிடைக்கிற மதுரை மண்ணின் மகத்தான பானம் ஜிகர்தண்டா. இது, குளிர்ச்சியையும் சுவையையும் தாண்டிய வைட்டமின்கள், புரோட்டீன்கள் நிறைந்த ஹெல்த் டிரிங்க். 

ஜிகர்தண்டா

மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், மல்லிகை... என்ற வரிசையில் மதுரையின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்று. நம்மூர்க்காரர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டவரும் சுவைக்க விரும்பும் உணவுப் பட்டியலில் ஜிகர்தண்டாவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.

மதுரையில் 'ஜிகர்தண்டா' விற்பனை செய்யும் கடைகள் நிறைய இருந்தாலும், `ஜிகர்தண்டான்னா அது 'பேமஸ் ஜிகர்தண்டா’தான் என்கிற பெரும்பாலான மக்களின் கருத்துக்குச் செவிசாய்த்து, `பேமஸ் ஜிகர்தண்டா’ கடைக்கு ஒரு விசிட் அடித்தோம்.

வெயில் தாளாத மதிய வேளையில் குளிர்ச்சியான ஜிகர்தண்டாவை நம் கையில் திணித்துப் பேசத் தொடங்குகிறார் சிந்தா மதார்... "எங்க சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அரம்பணை கிராமம். அப்பாவுக்கு நாங்க நாலு பசங்க. 55 வருடங்களுக்கு முன்னாடியே அப்பாவும் அம்மாவும் மதுரைக்கு வந்துட்டாங்க. ஆரம்பத்துல வீட்டுல ஐஸ் க்ரீம் செஞ்சு, சின்னப் பெட்டியில போட்டு, அப்பா வியாபாரத்துக்கு எடுத்துட்டுப் போவாரு. காலையில வீட்டைவிட்டுக் கிளம்பினா மாப்பாளையம், வடக்குமாசி வீதி, தெற்குவாசல்னு மதுரையோட முக்கிய வீதிகளில் நடந்தே போய் ஐஸ் க்ரீம் விற்பனை செஞ்சுட்டு வருவார். 

அப்பாவோட கைப்பக்குவம் அவருக்குப் பேரு வாங்கிக் கொடுத்தது. 'பாய் ஐஸ் க்ரீம்'-க்கு என்னை மாதிரி பல சின்னப் பசங்க ரசிகர்களாக இருந்தாங்க. ஐஸ் வியாபாரம் செய்யற நேரம் போக, மீதி நேரத்துல பால், சர்பத், பாதாம் பிசின் கலந்து அப்பா ஏதாவது செஞ்சு கொடுப்பாங்க. அந்த டேஸ்ட் எங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. அதையே வியாபாரத்துக்கும் கொண்டு போனோம். 1977-ம் வருஷம் முதன்முதலா இதே கார்னர்ல தள்ளுவண்டியில் இந்தக் கடையை ஆரம்பிச்சோம்.

சிந்தா மதார்

முதல்நாள்... 500 ரூபாய் முதலீடு போட்டு, வியாபாரம் செய்ய நின்னுக்கிட்டிருந்த நினைவுகள் இன்னும் அப்படியே இருக்கு. இப்போ அதே கடை, தினமும் ஆயிரக்கணக்கான கஸ்டமர்களைச் சந்திக்குது. மதுரை மட்டுமில்லாம வெளியூர் மக்களுக்கும் இப்போ ஃபேவரைட் ஆகிட்டதுனால, 'பேமஸ் ஜிகர்தண்டா' சென்னை உட்பட தமிழகத்தில் 15 கிளைகளுடன் இயங்கிவருகிறது. 

மதுரைக்கு சினிமா ஷூட்டிங்குக்கு வர்ற அத்தனை பிரபலங்களும் எங்க கடை ஜிகர்தண்டாவை சுவைக்காம திரும்புறதில்லை’’ எனப் புன்னகைக்கும் இவரின் ஜிகர்தண்டா மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக மதுரைக்கு வருகிற தலைவர்களும் 'பேமஸ் ஜிகர்தண்டா'வுக்கு திடீர் விசிட் அடிக்கிறார்கள். அந்த நேரங்களில் வழக்கத்தைவிட திணறுகிறது இந்த கார்னர்.

மதுரை பேமஸ் ஜிகர்தண்டா

``எங்க கடைக்குனு நாங்க தனியா விளம்பரம் எதுவும் பண்றதில்லை. கடைக்கு வர்ற கஸ்டமர்ஸே பத்துப் பேர்கிட்ட சொல்லி பிரபலப்படுத்திடறாங்க. நோ புரொமோஷனல் காஸ்ட். அதுனால எங்க கவனம் எல்லாம் எங்களைத் தேடி வரும் மக்களுக்குத் தரமான, சுவையான ஜிகர்தண்டாவைக் கொடுக்குறதுலதான் இருக்கு" என்று ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் அனைத்து பிசினஸ் ஸ்ட்ரேட்டஜியையும் கலந்து அடிக்கிறார் சிந்தா மதார்.

``ஜிகர்தண்டாவுக்குத் தேவைப்படும் அத்தனை பொருள்களையும் நாங்களே சொந்தமாகத் தயாரிக்கிறோம். அப்பாவோட அந்த ரெசிபி மாறாம பாலாடை, பாசந்தி, ஐஸ் க்ரீம்னு சுவையைக் கூட்டி விற்பனை செய்யறோம். எங்க கடையில வேலை செய்யும் அத்தனை பேரும் எங்க உறவுக்காரங்கதான். அதனாலதான் எந்தக் கிளையிலயும் சுவை வித்தியாசப்படுறதில்லை. கலப்படம் எதுவுமில்லாம உழைப்பை மட்டும் நம்பி எங்க பிசினஸ் ஓடுது..." என முறுவலிக்கிறார்.

இன்னும் எத்தனை கிளைகளை இவர்கள் ஆரம்பித்தாலும் கார்னர் விளக்குத்தூண் கடையைப் பார்க்கும்போது கிடைக்கிற இன்பம் அலாதியானது. சறுக்கல்களைத் தாங்கும் தன்னம்பிக்கையும், தாங்கிப் பிடிக்க உறவுகளும் இருக்கும்போது எல்லோரும் தொழிலதிபர்களே!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement