வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (10/02/2018)

கடைசி தொடர்பு:19:01 (10/02/2018)

பத்து ரூபாய்க்கு டிஃபன் காம்போ... இரவில் மதுரைவாசிகளின் பசியாற்றும் `பழசு’ கடை!

இரவு அழகு. இரவில் மதுரை பேரழகு. பகல்போலவே இரவிலும் பரபரப்பாகவே இயங்கும் இந்தத் தூங்கா நகரின் பரபர இரவைக் காண லந்தாகக் கிளம்பினோம். டிராஃபிக் நெருக்கடி, அலுவலக பரபரப்பு, கலர்ஃபுல் கல்லூரிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் எனப் பகலில் இயங்கும் மதுரைக்கு பல ஃபேன்டஸி முகங்கள் எனில், இரவில் இயங்கும் மதுரையை ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். ரம்மியம்! பகல் நேரத்தை ஓய்வுக்காகவும், இரவினை உழைப்புக்காகவும் அர்ப்பணித்திருக்கும் இந்த முகங்களின் வாழ்க்கைமுறையே வித்தியாசமானது. இவர்களின் உழைப்பு அந்த இரவிலும் அவ்வளவு 'பிரகாசமாக' இருந்தது.

மதுரை

சிம்மக்கல்லில் பழ மார்க்கெட், மாட்டுத்தாவணி காய்கறி, பூ மார்க்கெட், பரவை காய்கறி மார்க்கெட், தெற்கு வாசல் மீன் மார்க்கெட் என ஒவ்வோர் இடமாகச் சென்று அவர்களின் தொழில், வாழ்க்கைமுறையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஒரு டவுட்.  பகலில் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை பசிக்கிறதே, இரவில் இவ்வளவு நேரம் உழைக்கும் இவர்களுக்குப் பசித்தால் என்ன செய்வார்கள்...? யோசித்துக் கொண்டிருக்கும்போதே பசிக்கத் தொடங்கியது. `லைட்டா பசிக்குற மாதிரி இருக்குல' என நண்பன் சொல்ல, வயிற்றுக்குள் ஓ.டி.பி மெசேஜ் ஒலித்து, பசியைக் கன்ஃபார்ம் செய்தது. `எங்க சாப்பிடலாம்...?’ என யோசித்துக்கொண்டிருக்கும்போதே `இந்நேரத்துல ஹோட்டல் கடை எல்லாம் மூடிருப்பாய்ங்க தம்பிகளா...' என குண்டைத் தூக்கிப் போட்டார் லோடுமேன் அண்ணன்.

`அண்ணே... இந்நேரத்துல பசிச்சா நீங்க சாப்பாட்டுக்கு என்னண்ணே பண்ணுவிங்க' என அவரிடமே சரணடைந்தோம்.

உற்சாகமான அவர், மதுரையின் இரவு நேர சிற்றுண்டிகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்ன சிற்றுண்டிகளின் லிஸ்டில் `பழசு கடை’ என்ற பெயர் எங்களை ஈர்த்தது. தனித்துவத்தின் மீது ஈர்ப்பு வருவது இயல்புதானே! அவர் சொன்ன மற்ற சிற்றுண்டிகளை ஏறக்கட்டிவிட்டு,  ``பழசு கடைனா என்னண்ணே..?'’ என ஆர்வமானோம். 

``அதுவா... ஹோட்டல்களில் மிஞ்சும் சாப்பாட்டை வாங்கி விக்குற கடைங்கப்பா. பெரியார், ஆரப்பாளையம், மேலவாசல் ஏரியா எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட பழசு கடைகள் இருக்கு" என்று அவர் சொல்லி முடித்ததும், நேராக பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு வண்டியை விட்டோம். பெரியார் அருகே தள்ளுவண்டிக் கடையில் பரபரப்பாக வியாபாரம் செய்துகொண்டிருந்த `பழசு கடை’ ஓனர் கண்ணனிடம் பேச்சுக் கொடுத்தோம்.


மதுரை

 

``16 வயசிலிருந்து இந்தத் தொழிலை செஞ்சுட்டு வர்றேன். இப்போ வயசு 46. இந்தத் தொழிலுக்கு வந்து 30 வருஷத்துக்கு மேல ஆச்சு. பகல்ல பெரிய ஹோட்டல்ல வேலை பார்ப்பேன். வேலை முடிஞ்சதும் தினமும் நைட், எச்சில்படாத, கெட்டுப் போகாத சாப்பாட்டை தருவாங்க. கிட்டத்தட்ட இதுதான் எங்களுக்குச் சம்பளம். அதை எடுத்துட்டு வந்து நைட்டு இங்கே விக்கிறேன். ஆட்டோ டிரைவர், கூலித்தொழிலாளிங்கதான் எங்க ரெகுலர் கஸ்டமர். ஊத்தாப்பம், புரோட்டா, சப்பாத்தி, சாம்பார், குருமான்னு எல்லாமே சைவம்தான்.  ஹோட்டல் கடையில ஒரு தோசை 40 ரூபா. ஜி.எஸ்.டி வரியைச் சேர்த்தா 48 ரூபா. ஏழை பாழைங்க 45 ரூபா கொடுத்து ஒரு தோசை சாப்பிட முடியுமா? பெரிய கடைகளை வெளியே இருந்து வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும். உள்ளே போய் சாப்பிட முடியாது. இங்கே அதே தோசையை பத்து ரூபாய்க்குக் கொடுக்குறோம்" என மீண்டும் வியாபாரத்தில் பிஸியானார் கண்ணன். 

`பழசு கடை‛ பற்றி அதன் கஸ்டமர்களிடம் கேட்டபோது, ``இதுவும் மதுரையோட ஸ்பெஷல்தான். எங்கள மாதிரி ஆளுகளுக்கு நைட் சாப்பாடே இந்தக் கடையை நம்பித்தான் இருக்கு. டெய்லி நைட் இங்கதான் சாப்பிடுறோம். நைட் பசிக்குமேன்ற கவலையே இல்லை. 12 மணியில இருந்து 2 மணி வரைக்கும்  இந்தக் கடைங்க இருக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு இந்தக் கடை ரொம்ப உதவியா இருக்கும். ஆட்டோ டிரைவர், ட்ரை சைக்கிள் ஓட்டுறவங்க, மார்க்கெட்டுக்கு வேலைக்குப் போறவங்கன்னு எல்லாரும் இங்க சாப்பிட்டுட்டுதான் வேலைக்குப் போவாங்க. வெறும் 10 ரூபாய்க்கு மனசும் வயிரும் நிறைஞ்சிடும்" என்றனர் திருப்தியுடன்.


மதுரை

அன்-டைமில் கடை நடத்துவதில் இருக்கும் பிரச்னைகள் குறித்து கண்ணனிடம் கேட்டதும், ``மற்ற கடைகள் எல்லாம் 12 மணிக்கு மூடிருவாங்க. நான் 12 மணிக்கு மேல்தான் கடையைத் திறப்பேன். ஒருநாள் எல்லாரையும் போல ஒரு திருடனும் வந்து சாப்பிட்டுப் போயிட்டான் போல. உடனே போலீஸ் வந்து, `நீ திருட்டுப் பசங்களுக்காக கடை நடத்துறியா’ன்னு சொல்லி காலை உடைச்சுட்டாங்க. பசியில வர்றவன் திருடனா,கொலைகாரனான்னு எனக்கு எப்படி தம்பி தெரியும்? 

போலீஸுக்கு பயந்தே இடத்தை மாத்திட்டே இருக்கேன். `மதுரை இப்போ ஸ்மார்ட் சிட்டி ஆயிடுச்சு. நீங்க தொழிலை மாத்திருங்க’னு போலீஸ் ஈஸியா சொல்லியிட்டுப் போயிடுறாங்க. `சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்தத் தொழிலைத் தவிர வேற எதுவும் தெரியாது ஐயா’னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாங்க. ஸ்மார்ட் சிட்டியாவே இருக்கட்டும். அதுக்காக கம்ப்யூட்டரா வந்து சோறு போடப்போகுது?’’ என இரவுநேரத்தில் கடை நடத்துவதில் இருக்கும் சிரமங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே, பத்து ரூபாயை நீட்டிய ஆட்டோ டிரைவருக்கு புரோட்டா, நாண், ஊத்தாப்பம், குருமா, சாம்பார் அடங்கிய காம்போவைப் பரிமாறினார் கண்ணன்.  `பேருதான் பழசு கடை. ஆனா, கிடைக்குறது எல்லாமே ஃப்ரஷ்" என பழசு கடைக்கான ஸ்லோகனை கூறி வியாபாரத்தை தொடர்ந்தார். கொஞ்ச நேரத்தில் அனைத்து உணவுகளும் விற்றுவிட, தள்ளுவண்டியை அங்கிருந்து நகர்த்திச் சென்றார். அவர் சென்ற பாதை அந்த இரவிலும் அவ்வளவு பிரகாசமாகக் காட்சியளித்தது!


டிரெண்டிங் @ விகடன்