வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (12/02/2018)

கடைசி தொடர்பு:10:24 (12/02/2018)

கொல்லப்படும் பல்லிகள்... கடத்தப்படும் ஆணுறுப்பு... எதற்காக? #AnimalTrafficking அத்தியாயம் 10

தொலைக்காட்சிகளில் காலை 6 மணியிலிருந்து10 மணி வரையும், மாலை ஆறு மணியிலிருந்து இரவு 10 மணி  என்பது ப்ரைம் டைம். அதுதான் தொலைக்காட்சிகளின் கல்லாப் பெட்டி . ப்ரைம் டைமில் பார்வையாளர்கள் அதிகம். இவற்றைத் தவிர்த்த மற்ற மதிய  நேரங்கள், நள்ளிரவு நேரங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அப்படியான நேரங்களில் தொலைக்காட்சி நிறுவனங்கள் சொந்த செலவில்  ரிஸ்க் எடுக்க விரும்பாமல் விளம்பர நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு தொகைக்கு விற்று விடுவார்கள். அவை  “விளம்பரதாரர் நிகழ்ச்சி” என்ற பெயரில்  ஒளிபரப்பாகும். நிகழ்ச்சி தொடங்குவதற்கு  முன்பு சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம்  “இந்த நிகழ்ச்சியின் உண்மைத் தன்மைக்கு விளம்பர நிறுவனமே பொறுப்பு” என ஓர் அறிவிப்பை வெளியிடுவார்கள். அப்படியான விளம்பரங்களில் முக்கியமானது, தாந்த்ரீக பொருள் விற்பனை. இவற்றில் நாணயங்கள், மூலிகை வேர்கள், தாயத்துகள், உலோக பட்டைகள் என விற்பனை செய்வார்கள். “இது உங்களிடமிருந்தால் உங்களின் எல்லாப் பிரச்னைகளும் தீரும், உங்களின் உடல் நலன் காக்கப்படும். வீட்டில் நிம்மதி பிறக்கும்” என்கிற ரீதியில் அந்த விளம்பரங்கள் இருக்கும். குறிப்பிட்ட உலோகப் பட்டையை  பயன்படுத்தி அதன் மூலம்  செல்வந்தர்களான மனிதர்களின் நேரடி பேட்டிகள்  ஒளிபரப்பப்படும். புன்னகையும் கண்ணீருமாக அவை நம்பும்படி இருக்கும். இவ்வகை விளம்பரங்களின் குறிப்பிட்ட  நேரம் வார நாட்களில்  பகல் 1 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இருக்கும். விளம்பரங்களுக்கும் விலங்கு கடத்தலுக்கு என்ன தொடர்பு என யோசிக்கலாம். இருக்கிறது என்கிறது  “ஆதா  ஜோடி”.  இந்த வார  விலங்கு கடத்தல் அத்தியாயம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. கடத்தப்படும் விலங்கினம் பல்லி.

 

கெக்கோ  பல்லி

 

அது ஒரு வகை வேர், பெயர் ஆதா ஜோடி (Hatha Jodi). இந்திய, நேபாள காடுகளில் கிடைக்கக் கூடிய ஒரு  மூலிகை வேர். மடக்கி வைக்கப்பட்ட மனித கைகளை போல இருக்கும்.  இந்த வேர் ஒரு மனிதனிடம் இருந்தால் அவனுக்குச் சகல நன்மைகளும் நடக்கும் என்பது நம்பிக்கை. இதை மையமாக வைத்து விளம்பரதார நிகழ்ச்சிகள் இந்தியா முழுமைக்கும் ஒளிபரப்பாகிறது. இணையத்தின் எல்லாப் பக்கங்களிலும் விற்பனையாளர்கள் “நம்பிக்கை கடையை”  விரித்திருக்கிறார்கள். நீங்கள் சாதாரணமாக பொருள்  வாங்கும் பிரபலமான  இணையதளங்களில்  இதற்கென ஒரு விற்பனை பிரிவு இருக்கிறது. ஃப்ளிப்கார்ட், அமேசான் என அனைத்து  ஆன்லைன் ஷாப்பிங்குகளிலும் இவை கிடைக்கும். ஆதா ஜோடியின் மீது  மனிதர்களின் நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதன் விற்பனை பல மடங்காக உயர்கிறது;அதன் வரத்து குறைகிறது. அதற்கான டிமாண்ட் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஆதா ஜோடி இல்லையென்றாலென்ன, அதைப் போன்ற இன்னொரு பொருள் உருவாக்கலாம் என யோசிக்கிறார்கள். அவர்களின் தீவிர  யோசனைக்குப்  பலியானது பல்லி. விலங்குகளைக் கடத்தி அதன் உறுப்புகளைக் கடத்தியவர்களின் தற்போதைய டார்கெட் பல்லி. பல்லியின் உடலிலிந்து எடுக்கப்படுகின்ற உறுப்பு ஆணுறுப்பு. பல்லி  மற்றும் பாம்புகளுக்கு இனப்பெருக்க உறுப்புகள் மற்ற விலங்குகளைப் போல வெளியே இருப்பதில்லை. அவை உடலுக்குள் இருக்கும். இரண்டு பல்லிகள்  இணைசேரும் பொழுது பல்லியின்  வாலுக்கு  அடியில் இருந்து விந்து சுரக்கும். அதன் மூலமாகத்தான் இனப்பெருக்கம் நிகழும். அதன் உறுப்பு வெளியே தெரிவது இல்லை.  அதன் ஆணுறுப்பு ஆதா  ஜோடியைப் போலவே இருந்ததுதான் சிக்கல். 

ஆதா ஜோடி

உயிரோடு இருக்கிற பல்லிகளை  பிடிக்கிறவர்கள் அதன் வால்  பகுதியை நெருப்பில் காட்டுகிறார்கள். வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது ஆணுறுப்பு சதைகளை கிழித்துக் கொண்டு வெளியே வருகிறது. உறுப்பை வெட்டி எடுத்துக் கொண்டு பல்லியை  வீசி விடுகிறார்கள். வெட்டி எடுக்கப்பட்ட ஆணுறுப்பை ஆதா ஜோடி என்கிற பெயரில் இணையத்தில் விற்பனை செய்துவிடுகிறார்கள். ஆதா ஜோடி என நினைத்து பலர் வாங்கி விடுகிறார்கள். ஆனால் அவை உண்மையில் பல்லியின் ஆணுறுப்பு. இவற்றைக் காடுகளில் இருந்து பிடித்து வருவதற்கென தனியாக ஆட்களை நியமித்திருக்கிறார்கள். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்லிகளைக் கடத்துகிறார்கள். Wildlife Crime Control Bureau மற்றும் Wildlife Trust of India இணைந்து நடத்திய சோதனையில் கடந்த ஆண்டு 280 பல்லிகள்  மற்றும் போலியான ஆதா ஜோடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. சம்மந்தப்பட்ட நபரைக் கைது செய்திருக்கிறார்கள். 

நெருப்பில்

Photo Credit:101 india 

 

இந்தியா, நேபாள் பங்களாதேஷ் நாடுகளில் இருக்கிற இன்னொரு பல்லி வகை கெகோ  (Gecko). பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஒரு பல்லி இனம். அதன் பார்வைத் திறன் மனிதனை விட 350 மடங்கு அதிகமானது. இரவில் கூட துல்லியமாக அவற்றால் காண முடியும். இன்றைய விலங்குகள் வர்த்தகத்தில் முன்னிலையில் இருக்கிற இந்தப் பல்லி ஒன்றின் விலை இந்திய மதிப்பில் சுமார் 80 லட்சம். உடல் எடைக்கு ஏற்ப அதன் விலை தீர்மானிக்கப்படுகிறது. கடந்த வருடம் மேற்கு வங்க  மாநிலம் சிலிகுரில் கடத்திவரப்பட்ட 3 கெகோ பல்லிகளை காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர். மூன்று பல்லிகளின் சர்வதேச விலை 2.50 கோடி. கெகோ பல்லிகளின் சர்வதேச கடத்தல் நடைபெறுகிற முக்கியமான நகரம் சிலிகுரி. இந்த நகரம் நான்கு நாடுகளின் எல்லையில் அமைந்திருப்பதால் கடத்தலுக்கு எளிதாக இருக்கிறது. இங்கிருந்து கடத்தப்படுகிற பல்லிகள் சீனாவிற்கு அனுப்பப்படுகின்றன. சீனாவில் “ஆன்ட்டி ஆஸ்துமா” “ஆன்ட்டி கேன்சர்”  என்கிற பெயரில் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் எவ்வளவு விலை கொடுத்தேனும் அவற்றை வாங்கிவிட வேண்டுமெனப் பலரும் தேடிக்  கொண்டிருக்கிறார்கள். 

ஆன் லைன் விற்பனை

பிடிக்கப்படுகிற பல்லிகள்  உடனுக்குடன் கைமாற்றப்படுகின்றன. கெகோ பல்லிகளின் எடையைப் பொறுத்தே அவற்றுக்கு விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் பல்லிகளின்  எடையை அதிகரிக்கப் பிடித்தவுடன் அதன் வயிற்றில் பாதரசத்தை ஊசி மூலமாக செலுத்தி விடுகிறார்கள். அதன் மூலம் பல்லிகளின் எடை அதிகரிக்கிறது. எடைக்கு ஏற்ப பணத்தை பெற்றுக் கொண்டு பறந்து விடுகிறார்கள். விற்கப்பட்ட பல்லிகள் அடுத்த மூன்றாவது நாள் இறந்து விடுகின்றன. மணிப்பூர் காடுகளில்தான் அதிகமான பல்லி  இனங்கள் இருக்கின்றன. கெக்கோ வகை பல்லிகளும் இங்குதான் அதிகம். இப்போது வரை இவ்வகை பல்லிகளின் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. கடந்த ஆறு மாதங்களில், 70 க்கும் மேற்பட்ட கெக்கோ பல்லிகளை  காவல்துறையினர் மற்றும்  அசாம் ரைபிள்ஸ் பணியாளர்கள் பறிமுதல் செய்திருக்கின்றனர். ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆகிவிடலாம் என்பதால் இவ்வகை பல்லியை தேடிப் பல பேர் காடுகளுக்குள் அலைந்துகொண்டிருக்கிறார்கள். 

கெக்கோ பல்லி

முந்தைய அத்தியாயம்

உலகின் எல்லா இடங்களிலும்  எல்லாவற்றையும் காசுதான் தீர்மானிக்கிறது. காசுதான் யோசிக்க வைக்கிறது,  காசுதான்  நடத்தி காட்டுகிறது. காசுதான் முடித்து வைக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்