வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (14/02/2018)

கடைசி தொடர்பு:19:35 (14/02/2018)

கப்பிள்ஸுக்கு பிங்க்... சிங்கிள்ஸுக்கு...?! வேலன்டைன்ஸ் டே டிரஸ் கோட்! #ValentinesDay

முன்பெல்லாம் `வேலன்டைன்ஸ் டே'னு, ஒருநாள் மட்டும் வெட்டிச் செலவு இருக்கும். ஆனா, இப்போ `ரோஸ் டே' தொடங்கி `பிரேக் அப் டே' வரைக்கும் பிப்ரவரி மாதம் முழுக்கச் செலவுதான். பிப்ரவரி 7-ம் நாள் தொடங்குற இந்தக் கொண்டாட்டங்களை 21-ம் தேதி வரை, எதுக்காகக் கொண்டாடுறோம்னு தெரியாம, பரபரப்பா சிலர் ஃபாலோ பண்ணுவாங்க. அந்தக் கொண்டாட்டங்கள்ல முக்கியமானது டிரெஸ் கோட்ஸ். `அப்பாடா! அவ பச்சை கலர் டிரெஸ் போட்டிருக்கா. இப்போ போய் புரபோஸ் பண்ணா, கிரீன் சிக்னல்தான்'னு, மைண்ட்வாய்ஸை நம்பிப் போய் தன் காதலைச் சொன்ன வேலன்டைனுக்குக் கிடைப்பது என்னவோ பெரிய ஏமாற்றம் மட்டுமே! இதுபோல பல சம்பவங்கள் நடந்துகொண்டிருந்தாலும், இன்றும் `டிரெஸ் கோட்ஸை' ஸ்ட்ரிக்ட்டாப் பின்பற்றுபவர்களுக்காக லவ்வானந்தாவின் டிரெஸ் கோட் டிப்ஸ் இங்கே...

Valentines Day

`தனியே... தன்னந்தனியே... நான் காத்து காத்து நின்றேன்..!' என ரொம்ப நாளா ஏங்குபவர்களுக்கான நிறம் நீலம். இந்த நிறத்துக்கான குறியீடு `புரபோஸ் பண்ண நினைக்கிறவங்க, தாராளமா விண்ணப்பிக்கலாம்'னு அர்த்தம். இதுக்காகக் காலையிலேயே எழுந்திரிச்சு நீல நிற பேன்ட், ஷர்ட்/டீ-ஷர்ட்னு எல்லாமே நீல நிறத்துல போட்டுட்டுப் போய் நிக்காதீங்க பாஸ். ட்ரெண்டியாவும் டிரெஸ் பண்ணுங்க. நிச்சயமா டூயட் பாடுவீங்க!

Simbu in Blue


`காதல் வைத்து, காதல் வைத்துக் காத்திருந்தேன்...'னு ரொம்ப நாளா ஒன் சைடு லவ்ல ரொம்பத் தீவிரமா இருக்கிறவங்க, இந்த ஆண்டு `பச்சை' நிறத்துல டிரெஸ் போடுங்க. உங்க ஒன் சைடு டபுள் சைடானாலும் ஆகலாம்னு நாங்க சொல்லலை, அந்த `வேலன்டைனே' சொல்லிருக்காப்ல!

`காத்திருப்பதுகூட ஒரு சுகம்'னு சரளமா வசனம் பேசுபவர்களே, இந்தக் காலத்துல காத்திருப்பது எவ்ளோ சாத்தியம்னு சிந்தித்துச் செயல்படுங்கள். வெறும் பச்சை நிறத்துல ஆடைகளை உடுத்தினா மட்டும் போதாது, உங்களுக்காகவேதான் ஃபிளாஷ் மாப், கேண்டில் லைட் டின்னர்னு ஏகப்பட்ட விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அதையும் ட்ரை பண்ணிப்பாருங்க!

Valentines Day


காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது ரெட் ரோஸ், ரெட் ஹார்ட், ரெட் டிரெஸ்! `இரு இதயங்களின் பிணைப்பு, காதலின் நிறம் சிவப்பு'னு கவிதை மழையில் நனைந்து காதல் கரங்களைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கான நிறம் ரெட். சாதாரண நாள்களைவிட, காதலர் தினத்தன்று கூடுதல் சிறப்பாகக் களைகட்டியிருக்கும் பேக்கரி, ஆடை, பொக்கே கடைகள் இவர்களுக்காகவே சிவப்புக் கம்பள விரிப்போடு காத்திருக்கும். போதாக்குறைக்கு, `காதலர்களுக்கு, சிறப்புத் தள்ளுபடி' என்ற விளம்பரம் வேறு. அதெல்லாம் நமக்கு எதுக்கு? உங்களுடைய இந்தக் காதல் என்னிக்கும் சந்தோஷமா நிலைச்சு வாழ வாழ்த்துகள்.

Sharukh in Red


`காதல் வந்தால் சொல்லியனுப்பு, உயிரோடு இருந்தால் வருகிறேன்..!' இப்படி, தான் வெளிப்படுத்திய காதலை நிராகரித்த காதலி/காதலனுக்காகப் பாடிக்கொண்டிருக்கும் தெய்விகக் காதல்வாசிகளே, `லவ்'முறைப்படி நீங்கள் உடுத்த வேண்டிய ஆடையின் நிறம் கறுப்பு. இந்த நிறத்தில் உடை அணிந்து உங்கள் காதல் தோல்வி அடைந்துவிட்டது என்று ஒரு மூலையில் நீங்கள் அடைந்திருப்பதைக் கண்டு, உங்களைத் தேடி வேறொரு காதல் வரும் வாய்ப்பும் இந்நாளில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதனால் மனம் தளர்ந்துவிடாதீர்கள்.

Trisha in Black


`உன் வார்த்தை தேன் வார்த்ததே... மௌனம் பேசியதே!' என்று காதலை ஒப்புக்கொண்ட மிதப்பில் கைகால் புரியாமல் ஆடிப்பாடும் புது காதல் ஜோடிக்கு உரிய நிறம் பிங்க். இந்த நிறத்தில் பலரை அன்று காணலாம். ஏனெனில், காதலை ஏற்கெனவே வெளிப்படுத்தியவர்கள், முடிவுக்காகக் காத்திருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கை எப்போதுமே அதிகம்தான். `இதுபோல சந்தோஷமான ஒரு நாள் வாழ்க்கையில எதுமே இல்லை'னு, காதலை ஏற்றக் காதலி/காதலனைப் பார்த்துச் சொல்லும் இந்த முதல் வசனம், திருமண நாளன்று ஏனோ பலரில் தொலைந்துபோகிறது. அப்படித் தொலைச்சுடாமப் பார்த்துக்கொள்ளுங்கள் காதலர்களே!

Samantha in Pink


`கண்ண கலங்கவைக்கும் ஃபிகர் வேணாண்டா! நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா..!' இதுதான் இப்போ பலருடைய மைண்ட்ல முணுமுணுக்கும் வரிகள். காதலே வேண்டாம், நண்பர்கள்தான் எல்லாம்னு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கேங்  இப்போல்லாம் பார்க்க முடியுது. வேலன்டைன்ஸ் டேவைவிட ஃப்ரெண்ட்ஸ் டே, ஃப்ரெண்ட்ஷிப் டேனு நண்பர்களுக்காகப் பல நாள் கொண்டாட்டங்களும் உண்டு. இவ்வளவு ஏன், காதல் வெற்றினாலும் தோல்வினாலும் முதல் `பலி ஆடு' நண்பர்கள்தானே! ட்ரீட்னாலும், காதல் புலம்பல்களைக் கேட்பதனாலும் எல்லாத்துக்குமே நண்பர்கள்தான் உலகம். காதலே தேவையில்லை என்று மனஉறுதியுடன் இருப்பவர்கள், கிரே நிற உடையை உடுத்தி, காதல்மீதான வெறுப்பை வெளிப்படுத்தலாம்.

Arya in Grey


இதுபோக மஞ்சள் நிறம் - பிரேக் அப் ஆனவர்கள், ஆரஞ்சு நிறம் - காதலை வெளிப்படுத்த உள்ளவர்கள் அணிந்துகொள்ளலாம் என்று சில லவ்வானந்தாக்கள் பரப்பிவிட்டிருக்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்