திருச்சியில் உலக வானொலி தின சிறப்புக் கண்காட்சி!

உலக வானொலி தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் வானொலி பெட்டி கண்காட்சி இன்று (12.2.2018) மாலை 4.30 மணியளவில் தொடங்கியது.

ஏழை எளிய வெகுஜன மக்களை எளிதாகச் சென்றடையும் ஊடகம் வானொலி ஆகும். 1894-ம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோனி என்பவரால் வானொலி கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் கல்வி, விவசாயம், கருத்துப் பரிமாற்றம், மருத்துவம், சுகாதாரம், இளைஞர் நலன், மகளிர் நலன் என பல்வேறு விஷயங்கள் குறித்த விழிப்புணர்வும், பொழுதுபோக்கு, திரை இசைப் பாடல்கள் எனப் பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் போர், இயற்கை பேரிடர் காலங்களில் அழிவிலிருந்து மக்களைக் காப்பதில் வானொலிக்கு முக்கிய பங்கு உண்டு. 

வானொலிச் சேவையினை உலகறியச் செய்ய வேண்டும் என ஸ்பெயின் நாடு யுனஸ்கோவிடம் 2010-ம் ஆண்டு வேண்டுகோள் வைத்தது. இதனையடுத்து பிப்ரவரி 13-ம் நாளை உலக வானொலி தினமாக யுனஸ்கோ அறிவித்தது. இதேபோல் டிசம்பர் 2011-ல் ஐக்கிய நாடு சபையும் இதனை அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து முதல் உலக வானொலி தினம் 2012-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் நாள் இத்தாலி பைசா நகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

இந்தியாவில் முதன்முதலில் 1957-ம் ஆண்டு விவிதபாரதி வர்த்தக வானொலி ஒலிபரப்புத் துவங்கியது.1977 பண்பலை ஒலிபரப்பும் ஆரம்பமானது. தற்போது உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு ஸ்தாபனங்களில் இந்திய வானொலியும் ஒன்றாகத் திகழ்கிறது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை வானொலி மூலம் மக்களிடையே பேசியுள்ளனர். பெருகி வரும் தனியார் பண்பலை ஒலிபரப்புகளால் பிராந்திய மொழிகளிலும் வானொலி சேவை அனைத்து மக்களையும் சென்றடைகிறது. இப்பெருமைக்குரிய உலக வானொலி தினத்தை முன்னிட்டு அதை மக்களுக்கு விளக்கும் வகையில் வானொலிப் பெட்டி கண்காட்சி திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் கூறுகையில், " இந்த கண்காட்சியில், 80 வருடங்களுக்கு முந்தைய வானொலி முதல் தற்கால வானொலி வரை 50-க்கும் மேற்பட்ட வானொலிப் பெட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!