வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (12/02/2018)

கடைசி தொடர்பு:20:52 (12/02/2018)

கழிவுகளைக் கையாள மாணவர்கள் தந்த தீர்வுகள்..! #ReciprocityFest

காலமாற்றத்திற்கு ஏற்ப மனிதன் பல வளர்ச்சியை அடைந்தான். அந்த முன்னேற்றத்தில் வளர்ந்தது மனிதன் மட்டுமல்ல குப்பைகளும்தான். தினம் புது புது குப்பைகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அணு கழிவுகள், மின்னணு கழிவுகள் எனப் பலவற்றை சென்ற தலைமுறையினர் கேள்விப்பட்டிருக்க கூட மாட்டார்கள். ஆனால் இன்று அவை அனைத்தும் பூதாகரமாக நம் முன் வளர்ந்து நிற்கிறது. இப்பொழுது செயல்படா விட்டால் பின் பூமி வாழத் தகுதியற்றதாகி விடும் என்ற நிலையிலே நாம் விழித்துக் கொண்டுள்ளோம்.

Reciprocity fest

நம் உலகம் நம் அனைவரும் வாழ்வதற்கானது. உலகில் வாழும் ஒவ்வொருவரும் நாட்டின் பேண்தகைமையான வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் ரெஸிபிரோஸிட்டி அமைப்பினர் பிப்ரவரி 10 மற்றும் 11 அன்று ரெஸிபிரோஸிட்டி விழாவைக் கொண்டாடினர். இது மக்களிடம் சுற்றுப்புறத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பொறுப்புகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் நோக்கத்தோடு நடத்தப்பட்டது.

Reciprocity fest

நகரத்தில் சாலையோரங்களிலும் நடுவிலும் இருக்கும் தனி மரங்கள் தங்களுக்கான தண்ணீரைத் தேடிக்கொள்ள ஒரு மாதிரி வேலியை வடிவமைத்திருந்தனர் மிடாஸ் கட்டடக் கல்லூரி மாணவர்கள் . வெட்டி வேரினைக் கொண்டு காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை மண் தக்கவைத்து கொள்ளும். இதன் மூலம் அதைச் சுற்றி எப்பொழுதும் ஈரப்பதம் இருக்கும். இதற்கு உதவும் ஐவி இலைகளால் ஆனா வேலிகள் சுற்றி அமைக்கப்படும். சாலையோர மரங்களுக்கு மட்டுமல்லாமல் நகரத்து வீடுகளிலும் பயன்படும் 

மாணவர்களின் கண்டுபிடிப்புகள்

பின் சாய்ராம் கல்லூரி மாணவர்கள் சுத்திகரிக்கப் படாத கழிவு நீர் கடலில் சென்று கலப்பதை தடுக்க ஒரு தீர்வீனை முன்வைத்தனர். கழிவு நீர் குழாயின் இறுதியில் அக்குழாய் அளவிலே பொறுத்தப்படும் இயந்திரம் தண்ணீரில் இருக்கும் கழிவுகளைத் தனித்தனியே பிரித்து எடுத்து பின் வெளியேற்றும். திரவக் கழிவுகளுக்கு இவர்கள் தீர்வு சொல்ல திட கழிவுகளுக்கு ஜெயின் கல்லூரி மாணவிகள் தங்கள் யோசனையை தெரிவித்தனர் வீட்டில் பெறப்படும் குப்பைகளை வகைப்படுத்தி பின் அவற்றின் மூலம் மின்சக்தி பெறலாம் என்பதே.

Reciprocity fest

விவசாய நிலங்கள் குறைந்து வரும் அதே வேளையில் ஒரு பக்கம் மக்கள் தொகையும் ஏறிக்கொண்டே செல்கிறது. நகரங்களிலும் விவசாயம் என்பது இன்றைய முக்கிய தேவையாகும் மண்ணில்லாமல் செடி முளைக்க உலகம் முழுவதிலும் செயல்படுத்தப்படும் முறைகளுள் ஹைட்ரொபோனிக்ஸ் அதாவது தாவரங்களுக்குத் தேவையான கூறுகள் இருக்கும் திரவியத்தில் அவற்றை வளரச் செய்வது. வெர்டிகள் பார்மிங் மற்றும் ஃபிலிம் பார்மிங் முறைகள் பற்றியும் விவாதித்தனர் மாணவர்கள். தங்களது கல்லூரிகளில் தாங்கள் செயல்படுத்தும் மாற்றுத் திட்டங்கள் குறித்தும் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க தாங்கள் எடுக்கும் சிறு முயற்சிகள் குறித்தும் மாணவர்கள் உரையாடினர். இவ்வாறு பல தரப்பட்ட மாணவர்கள் தங்களது பல தீர்வுகளை வெளிக்கொண்டு வந்தனர்.

Reciprocity fest

தற்பொழுது அதிகரித்து வரும் பருவ நிலை மாற்றத்திற்கும் சுற்றுப் புறச்சீர்கேட்டிற்கும் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். அதற்கான விளைவுகளைச் சந்திக்கப் போவதும் நாமே. இந்த விழிப்புஉணர்வு இன்றைய தலைமுறை மாணவர்களிடம் ஆழ பதிந்திருப்பதை காண இயல்கிறது. இந்தச் சிந்தனை செயலாக மாற வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்.