வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (13/02/2018)

கடைசி தொடர்பு:18:12 (13/02/2018)

சமத்துவம், இயற்கை பாதுகாப்பு, நாட்டுப்புறக் கலைகளைப் போற்றிய `ஊரூர் ஆல்காட் குப்பம்' திருவிழா!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில்அமைக்கப்பட்டிருந்த படகு போன்ற மேடையில், 'ஹிப் பாப்' கலைஞர்கள் ரசிகர்களை பிரமிக்க வைத்துக்கொண்டிருந்தனர். மற்றொருபுறம் ஒரு வீட்டின் சுவரில் பல வண்ண ஸ்ப்ரே மூலம் ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்தனர். பள்ளி மாணவர்கள் சிலர் களிமண் பொம்மைகள் செய்து மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். தாற்காலிகமாக ஓர் அக்கா பஜ்ஜி, சுண்டல், பானி பூரி கடை போட்டிருந்தார். மெக்கானிக் ஷாப்பிலிருந்த பழைய ஜீப் ஒன்று சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாகஸ்வர கலைஞர்கள் ஒருபுறம், பறையிசைக் கலைஞர்கள் மறுபுறம் நிகழ்ச்சிக்காக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர். 'ஊரூர் - ஆல்காட் திருவிழா' பெசன்ட் நகரின் அந்த மாலைப் பொழுதை கொண்டாட்டம் ஆக்கியிருந்தது.

ஆல்காட் விழா

திருவிழாக்கள் மகிழ்ச்சியின் கூடாரமாக நம் தமிழ்ச் சூழலில் கொண்டாடப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடும் பொது விழாவாக திருவிழாக்கள் இருக்கின்றன. தொழில் நிமித்தமாக வெளியூர்களில் வசித்துவருபவர்கள் சொந்த ஊர் செல்வது இதுபோன்ற திருவிழாக்களின் போதுதான். திருவிழாக்கள் என்றாலே ராட்டினம், மஞ்சத்தண்ணி, மாமன் மகள் எனக் களைகட்டும் கிராமத்து திருவிழாவுக்கு இணையான கொண்டாட்டத்துடன் நடந்தது  'ஊரூர் ஆல்காட் குப்பம்' திருவிழா. கானா பாடல், ஹிப் பாப், பறையிசை, நாகஸ்வர கச்சேரி, இஸ்லாமிய சூஃபி பாடல்கள், நவீன நாடகம், குழந்தைகளின் வாய்ப்பாட்டு என சமத்துவத்துடன் கூடிய பன்முகத் தன்மையுடன் நடந்தது திருவிழா.

ஆல்காட் விழா

 கடந்த சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாள்களாக பெசன்ட் நகர் கடற்கரையில் வெகு விமரிசையாக இந்தத் திருவிழா நடைபெற்றது. அனைத்துக் கலைகளையும் ஒரேமேடையில் ஒருங்கிணைத்தது இந்த நிகழ்வின் முக்கியமான சாராம்சம். சனிக்கிழமை நடைபெற்ற `தாடகை’ நாடகம் மிக முக்கியப் படைப்பாக அமைந்தது. இந்தச் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பல கற்பிதங்களை உடைக்கும் நோக்கில் அது அமைந்தது. 

ஆல்காட் விழா

நாகூர் சூஃபி குழுவினரின் சூஃபி பாடலும், ஶ்ரீகாந்த் பாகவதர் குழுவினரின் கர்னாடக சங்கீதக் கச்சேரி இரண்டும் ஒரே நேரத்தில் அருகருகே நடந்தது. குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று நிகழ்வாகவும், இனிமையான ஓர் அனுபவத்தையும் காண்போருக்கு அளித்தது. ஞாயிறு அன்று நடைபெற்ற கதக் நடனம் ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுத்தது. முழுக்க பிளாஸ்டிக் ஒழிப்பையும் வலியுறுத்தும் விதமாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகள் கூட பிளாஸ்டிக்கை தவிர்த்திருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த 'ஊரூர் -குப்பம் விழா’ என்ற தட்டிகள் துணியால் எழுதப்பட்டிருந்தது. திருவிழாக்கள் தங்கள் தொன்மையை இழந்துவரும் இன்றைய சூழலில் திருவிழாக்களை சமூக செயல்பாடுகளுக்காக மாற்றிய விதத்தில் இந்நிகழ்வு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஆல்காட் விழா

தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெறும் இந்த விழா  `ஒற்றுமையைக் கொண்டாடுவோம்' என்பதை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த விழா கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராம் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பிருந்தே மீன் சுடும் நிழ்வு, பாடல் கச்சேரி, மக்களுடன் விழாவுக்கான ஒத்துழைப்பு இவை குறித்து முன்னெடுப்புகள் நடத்தி விழாவை சிறப்பான முறையில் நடத்தி முடித்திருந்தனர். இந்த விழாவின் முக்கிய சாராம்சமாக, இயற்கையைப் பாதுகாத்தல், பேதமில்லாமல் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்தல், சமத்துவத்துடன் வாழ்தல் போன்றவற்றை விழாக்கள் நமக்கு உணர்த்தின. அனைத்துக் கலைகளும் சமமான அளவில் போற்றப்பட வேண்டியவை என்பதை ஆழமாக எடுத்துரைத்து, கலை மக்களுக்கானது என்பதை சொல்லியிருக்கிறது ஊரூர்- ஆல்காட் விழா.


டிரெண்டிங் @ விகடன்