காதலை வெளிப்படுத்துவதில் பெண்களுக்கு சம உரிமை இருக்கிறதா!? #ValentinesDay

காதல்

என் கல்லூரியில் படிக்கும் ஓர் இளைஞனுக்கு அதே கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்மீது காதல் வந்தது. அதை, நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்தான். அவர்கள் இருக்கும் இடத்தை அந்தப் பெண் கடக்கும்போதெல்லாம் அந்தப் பையனின் பெயரைக் கூவி அழைக்கத் தொடங்கினார்கள். சுவரிலும் மேசைகளிலும் இருவரின் பெயர்களை எழுதிவைத்தார்கள். இதனால், கல்லூரி முழுவதுமே அவர்களைக் காதலர்களாக மாற்றியது. அந்தப் பெண்ணால் தடுத்து நிறுத்தவோ கேள்வி கேட்கவோ இயலவில்லை. தான் தொடர்பே இல்லாத ஒரு விஷயத்தில் தனது பெயர் அல்லாடுவதைக் கண்டு திகைத்தாள்.

இங்கே நாம் கவனிக்கவேண்டியது, அந்த இளைஞனின் காதல் வென்றதா தோற்றதா என்பதையல்ல; அவனுக்கு வந்த காதலை அவனும் அவனைச் சுற்றியிருக்கும் உலகமும் பெருமையாகக் கருதி வரவேற்றதையே. 

இதே சூழ்நிலையைச் சற்று தலைகீழாக யோசிப்போம். அந்தப் பெண்ணுக்கு அந்த இளைஞனின் மீது ஒருதலையாகக் காதல் வந்திருந்தால்...? அவள் தன் தோழியிடம் தயக்கமின்றி சொல்லியிருப்பாளா? அப்படிச் சொல்லியிருந்தாலும் என்ன நடந்திருக்கும்? அவளுடன் இருப்பவர்கள் இது தவறு என அறிவுரையை அள்ளி வீசியிருப்பார்கள். அவள் குடும்பத்தின் மானத்தை நினைத்துப் பார்க்கச் சொல்லி அக்கறைப்பட்டிருப்பார்கள். அதையெல்லாம் மீறியும் அவள் தன் காதலைப் பையனிடம் கூறியிருந்தால், அவளின் குணநலன்களை குறித்த தவறான வதந்தி கல்லூரி முழுவதும் பரவியிருக்கும். 

ValentinesDay

இங்கும் நாம் கவனிக்கவேண்டியது, அவள் இதயத்தை அவன் ஏற்றுக்கொண்டானா என்பதையல்ல; ஒரு பெண் தன் காதல் உணர்வை வெளிப்படுத்தச் சந்திக்கும் தடைகளையே. ஓர் ஆண் காதல் வயப்பட்டதை எவ்வித எதிர்ப்பும் தடையும் இல்லாமல் வரவேற்கும் சமூகம், அதையே ஒரு பெண் செய்தால், மிகப்பெரிய பாவமாகவும் துணிகரச் செயலாகவும் பார்க்கிறது; தூற்றுகிறது. தன் வாழ்க்கைத் துணையை ஒரு பெண் தேடிக்கொள்வதைக் குடும்ப கௌரவத்தோடு தொடர்புப்படுத்தி பார்ப்பது ஏன்? வாக்குரிமை மட்டும்தானா பெண்ணுக்கு? வாழ்வு உரிமை இல்லையா? 

காதலை வெளிப்படுத்துதல் என்பதிலிருந்து, அடுத்தநிலைக்குச் செல்வோம். ஒருவேளை அந்த இளைஞன், அவளது காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால்? அவளால் அதுகுறித்து வெட்கப்படுவதைத் தாண்டி வேறு எதுவும் செய்ய இயலாது. அதுவே ஒரு பெண் மறுத்தால், அவன் எதுவும் செய்யலாம். பின்தொடர்ந்து சென்று காதல் செய்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தை அளிக்கலாம். அது அவனது வீரமாகப் போற்றப்படும். ஆண்மையாக அறிவிக்கப்படும். பெண்ணுக்குக் காதல்கொள்ள மட்டுமன்றி, காதலை மறுக்கவும் உரிமை இல்லை என்பதையே ஆசிட் வீச்சுகளும் அதிரவைக்கும் கொலைகளும், சமூக வலைதளங்களில் பரவும் அந்தரங்க புகைப்படங்களும் உரக்கச் சொல்கின்றன. 

இல்லற வாழ்க்கை என்பது இருவருக்கும் சமம் எனில், விதையான காதல் இந்தக் கணினி யுகத்திலும் சமம் ஆகாதது ஏன்? தன்னை நோக்கி ஓர் இதயம் வந்தால், அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் தன் இதயத்தைத் தர வேண்டுமெனில், அதற்குப் பலரது ஒப்புதல்கள் பெறவேண்டும் என்னும் விதி, பெண்ணின் மீது திணிக்கப்படுகிறது. காதலே சரிசமம் ஆகாத நிலையில், காதலர் தினம் என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தின் பிரதிபிம்பமாகவே தோன்றுகிறது. பெண்ணின் உணர்வினை மதிக்கும் சமூகமே நாகரிகம் தழைக்கும் சமூகம். 

'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொண்டால் 
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்' 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!