வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (14/02/2018)

கடைசி தொடர்பு:09:39 (14/02/2018)

”இந்த லோகோ இருந்தால்தான் அது ஆர்கானிக்..!” - FSSI அதிரடி

இயற்கை உணவு என்பதைக் குறிக்கும் ஆர்கானிக் எனும் சொல்லுக்கு இன்று மக்களிடையே மரியாதை பெருகி வருகிறது. 'இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களை வாங்கி உண்ண வேண்டும். இயற்கை உணவுகள்தான் உடலுக்கு நல்லது' என்ற விழிப்புஉணர்வுதான் அதற்குக் காரணம். இது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால், ஆர்கானிக் உணவுகள் பற்றியும் மக்களுக்கு சில சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சில கடைகளில் தாங்கள் இந்த இயற்கை விவசாயிகளிடமிருந்துதான் காய்கறி வாங்குகிறோம் என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். சில கடைகளில் விவசாயிகளின் பட்டியல் இல்லாமலும் இருக்கும்.  பெரும்பாலோனோர் இயற்கை அங்காடிகள் என்ற வாசகத்தைக் கண்டவுடன் உணவுப் பொருள்களை வாங்கி விடுகின்றனர். அப்படி வாங்கும் சில பொருள்கள் ஆர்கானிக்தானா என்பது கேள்விக்குறிதான்.  இதற்காக ஆர்கானிக் பற்றிய விழிப்புஉணர்வை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (fssai) கையில் எடுத்திருக்கிறது. ஆம் வரும் ஜூலை 1-ம் தேதியிலிருந்து ஆர்கானிக் கடைகள் அனைத்தும் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும் என எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ கட்டளையிட்டுள்ளது. 

ஆர்கானிக் லோகோ

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ வெளியிட்டுள்ள விதிகளின்படி, இயற்கைப் பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் கடைகள் அனைத்துமே இயற்கையில் உருவான பொருளா என்பதை முழுமையாக உறுதி செய்ய வேண்டும். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ விவரித்துள்ள விதிகளை, ஆர்கானிக் உற்பத்திக்கான தேசியத் திட்ட அமைப்பு, இந்தியாவின் பங்கேற்பு உத்தரவாத அமைப்பு மற்றும் நாட்டின் பிற்போக்கு உணவு ஒழுங்குமுறை அமைப்புகளின் கீழ் இயற்கைச் சான்றிதழைப் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ‘ஜெய்விக் பாரத்’ (Jaivik Bharat) என்ற புதிய லோகோவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்திய உணவுத் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் அமித் தனுகா(Amit Dhanuka) எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ விதித்துள்ள விதிகளை வரவேற்றுள்ளார். மேலும், ஜூலை 1-க்குப் பின்னர், தங்களுடைய பொருள்கள் இயற்கை என்று எந்த நிறுவனத்தாலும் சொந்தம் கொண்டாட முடியாது. இயற்கை என்று சொல்லி அதிகமான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அவை உண்மையான இயற்கை பொருள்கள் அல்ல. உரிமம் பெறப்பட்டு இயற்கை என்று குறிப்பிடப்படும் பொருள்களில் உள்ள ஆர்கானிக் லோகோ குறிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்வதால் மக்கள் எளிதில் பயனடைவார்கள். இதனால் நூறு சதவிகிதம் இயற்கையான உணவை மக்கள் பெறுவார்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

லோகோ பொறிக்கப்பட்ட பேக்கிங் காய்கறி

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ஆர்கானிக் பொருள்களுக்காக ஜெய்கி பாரத் என்ற லோகோவை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது. இனி வரும் காலங்களில் ஆர்கானிக் பொருள்களை அடையாளம் காட்ட ஆர்கானிக் உரிமம்(லைசென்ஸ்) பெற்றிருக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவை இந்த உரிமம் உள்ள பொருள்களையே பெரும்பாலும் கொள்முதல் செய்கின்றன. அதனால், விவசாய விளைபொருள்கள், பால் பொருள்கள், இறைச்சிப் பொருள்கள் என்று அனைத்துக்கும் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். 'ஜெய்விக் பாரத்' லோகோவை ஆர்கானிக் பொருள்களை விற்பனை செய்வோர் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த விதியை முறையாகப் பின்பற்றாத எந்தவொரு நிறுவனமோ, தனி நபரோ ஆர்கானிக் பொருள்களை விற்பனை செய்ய முடியாது. இறக்குமதி செய்தாலும் அதில் ஆர்கானிக் பொருள்களுக்கான குறியீடுகள் இருக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் அதைத் தயார் செய்யும்போதும், ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்லும்போதும் பொருள்களின் மீது மாசுபடுதலுக்கான அளவு, நச்சுக்கள் என ஒவ்வொரு கட்டுப்பாடுகள் இருக்கும். அதுபோல ஆர்கானிக் பொருள்களில் ஐந்து சதவிகிதத்திற்கு மேல் பூச்சிக்கொல்லியின் அளவு இருக்கக் கூடாது. உணவுப் பொருள்களை விற்பனை செய்பவர் ஆர்கானிக் பொருள்களையும், ஆர்கானிக் அல்லாத பொருள்களையும் தனித்தனியாகப் பிரித்து வைத்து விற்பனை செய்ய வேண்டும். இம்முறையில் விற்பனை செய்வதால் மக்கள் ஆர்கானிக் பொருள்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். http://jaivikbharat.fssai.gov.in என்ற இணையதளத்திலும் ஆர்கானிக் உரிமம் பெற்றவர்களை மக்கள் எளிதில் கண்டறியலாம். ஆனால், இந்த லோகோ எந்த அளவிற்கு நம்பகத்தன்மையோடு இருக்கும் என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது. 

இயற்கை அங்காடி பொருட்கள்

இந்திய வேளாண் அமைச்சகம் ஆர்கானிக் உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க புதிய கொள்கையைக் கொண்டு வர உள்ளது. சிக்கிம் முழுமையான ஆர்கானிக் மாநிலமாக மாறிய பின்னர் பல மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்துவிட்டன. அதனால் அளவுக்கு அதிகமான மக்கள் இயற்கை (ஆர்கானிக்) உணவை விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனை முக்கியமாகக் கருத்தில் கொண்டும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ புதிய விதிகளை வகுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆர்கானிக் குறியீட்டால் நம்பகத்தன்மை அதிகரித்து விவசாயிகளின் பொருள்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரிக்கும். foodlicensing.fssai.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆர்கானிக் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஓர் ஆண்டு, ஐந்து ஆண்டுகள் எனத் தேவைக்கு ஏற்றபடி உரிமத்துக்கான காலத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். இந்த உரிமம் பெற, ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டுவரும் எஃப்.எஸ்.எஸ்.ஐ அமைப்பில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த முறையில் சான்றிதழ் வழங்குவதற்கு எதிர்ப்பும் கிளம்பிவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 


டிரெண்டிங் @ விகடன்