``அவளுக்கு என்னைத் தெரியாது... எனக்கு அவளைத் தெரியும்!’’ - நெகிழவைக்கும் காதல் கதை #FeelGoodStory #LetsLove

கதை

`முதிர்ச்சியற்ற காதல் இப்படிச் சொல்லும்: `நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும்.’ முதிர்ச்சியடைந்த காதல் இப்படிச் சொல்லும்: `எனக்கு நீ வேண்டும். ஏனென்றால், நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ ‘ - இதைச் சொன்னவர் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). காதலுக்குத் தேவையான அடிப்படையான மனப்பக்குவம் இதுதான். காதலிப்பவருக்கு அந்த நேரத்தில் தான் எங்கிருக்கிறோம் என்கிற நினைப்போ, தன் மோசமான உடல்நிலையோகூட ஒரு பொருட்டாகத் தோன்றாது. தன் துணைக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல், அந்த நேரத்தில் அவன்/அவளுக்கு எப்படி உதவுவது, கவனித்துக்கொள்வது என்பதிலேயே எண்ணமெல்லாம் இருக்கும். காதலின் உன்னதத்தை உணர்த்தும் ஒரு கதை இது.

அது பாரிஸிலிருக்கும் ஒரு கிளினிக். காலை ஏழு மணிக்கெல்லாம் அவர் கிளினிக்குக்கு வந்துவிட்டார். அவருக்கு 65 வயதுக்கு மேலிருக்கும். கட்டை விரலில் கட்டுப்போட்டிருந்தார். அவர்தான் கிளினிக்குக்கு வந்த முதல் நோயாளி. அவரை வரவேற்ற நர்ஸ், அவரின் பெயரைக் கேட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொண்டார். அவரை உட்காரச் சொன்னார்.

அங்கிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்த அந்த முதியவர் வாட்ச்சைப் பார்த்தார். பிறகு மெதுவாக எழுந்து நர்ஸிடம் வந்தார். ``ஏம்மா...‘’

``சொல்லுங்க சார்...’’

``டாக்டர் வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆகுமா?’’

``இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். ஆனா, நீங்கதான் முதல்லயே வந்துட்டீங்களே... டாக்டர் வந்தவுடனே பார்த்துடலாம்...’’

அவர் மறுபடியும் போய் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டார். ஆனால், மிகவும் பரபரப்பாக இருந்தார் என்பது அவர் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. அதற்குள் ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் உள்ளே வந்தார். அந்த நர்ஸ் அந்தப் பெண்மணியை கவனிக்க ஆரம்பித்தார். முதியவர் தன் வாட்ச்சைப் பார்த்தார். அவர் உள்ளே வந்து பத்து நிமிடங்கள்தான் ஆகியிருந்தன. இன்னும் டாக்டர் வருவதற்கு 50 நிமிடங்களாவது ஆகும். அவருடைய பரபரப்பு கொஞ்சம் அதிகமாகியிருந்தது. நர்ஸ் அவரை ஒரு கணம் பார்த்தார். பிறகு அருகே வந்தார்.

செவிலியர்

``சார்... ஏன் இவ்வளவு பரபரப்பா இருக்கீங்க? வேற எங்கேயாவது போகவேண்டியிருக்கா?’’

``ஆமா.’’

``சரி... எதுக்காக நீங்க டாக்டரைப் பார்க்க வந்திருக்கீங்க?’’

அந்த முதியவர் தன் கட்டை விரலைக் காட்டினார். ''இதுல அடிபட்டிருந்தது. கட்டுப் போட்டிருக்கேன். அதை டாக்டர்கிட்ட காண்பிக்கணும்...’’

``அப்படியா... நானே பார்க்கிறேன். என்கூட வாங்க...’’என்ற நர்ஸ் அவரைக் கட்டுப்போடும் அறைக்கு அழைத்துச் சென்றார். கட்டை விரலில் போட்டிருந்த கட்டைப் பிரித்தார். அவர் விரலில் பட்டிருந்த காயம் ஆறியிருந்தது. நர்ஸ், மெதுவாகப் பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே டிரெஸ்ஸிங் செய்ய ஆரம்பித்தார்.

``அவ்வளவு அவசரமா எங்கே சார் போகப் போறீங்க? யாரையாவது பார்க்க அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கீங்களா?’’

``இல்லை. நான் இன்னொரு நர்ஸிங் ஹோமுக்குப் போகவேண்டியிருக்கு.’’

``ஏன்... அங்கே இன்னொரு டாக்டரைப் பார்க்கணுமா என்ன?’’

``ம்ஹும். அங்கே என் மனைவி இருக்கா. அவளோட சேர்ந்து டிபன் சாப்பிடணும்...’’

``உங்க ஒய்ஃப் மேல உங்களுக்கு அவ்வளவு காதலா?’’

`ஆமாம்’ என்பதுபோல் அவர் தலையசைத்துச் சிரித்தார்.

அல்சைமர்

நர்ஸ் கேட்டார்... ``சரி... உங்க ஒய்ஃப் அங்கே ஏன் இருக்காங்க?’’

``அவளுக்கு உடம்பு சரியில்லை. வயதான சிலருக்கு வர்ற அல்சைமர்’ஸ் டிசீஸ்ங்கிற (Alzheimer's disease) மறதி நோய்...’’

``அடடா... அப்போ நீங்க கொஞ்சம் லேட்டா போனாலும் வருத்தப்படுவாங்க இல்ல?’’

``அதெல்லாம் இல்லை. கடந்த அஞ்சு வருஷமா நான் யாருன்னுகூட அவளுக்கு ஞாபகத்துல இல்லை.’’

காதல்

``அவங்களுக்கே உங்களை அடையாளம் தெரியாதப்போ நீங்க ஏன் அவங்ககூட தினமும் சேர்ந்து சாப்பிடணும்னு நினைக்கிறீங்க?’’

முதியவர் சிரித்தபடி சொன்னார்... ``அவளுக்கு என்னைத் தெரியாமல் இருக்கலாம்... எனக்கு அவளைத் தெரியுமே...’’

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!