வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (14/02/2018)

கடைசி தொடர்பு:11:06 (14/02/2018)

காலப்பயணம் காதலை வாழ வைக்குமா? - சயின்ஸ் ஃபிக்‌ஷன் சிறுகதை #LetsLove

இப்போது மட்டும் வாழ்வோம்!

ஒரு படைப்பு தன்னைத்தானே படைத்துக் கொள்ளுமா?

ஒரு கதை தன்னைத்தானே எழுதிக் கொள்ளுமா?

ஒரு நிகழ்வு தன்னைத்தானே நிகழ்த்திக் கொள்ளுமா?

பிரபஞ்ச இருள் சூழ, முப்பத்து முக்கோடி கோள்கள் சுழல, காலம் மட்டும் தன்னைத்தானே கடத்திக்கொண்டிருக்கிறது!

காலந்தானே கடவுள்?

ந்த அறையின் ஜன்னல் அரைகுறையாக மூடப்பட்டிருந்தது. வெளியே மண்டி கிடக்கும் இருள், அந்த ஜன்னல் வழியே வெளிச்சத்தைப் போலவே அந்த அறைக்குள் பரவியதா, இல்லை அந்த இருள் அந்த அறைக்குள் முன்னரே இருந்ததா என்பதெல்லாம் அறிவியலாளர்களின் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுவோம். அவர்கள் நம் கதைக்குத் தேவையில்லை. சேர்த்துக்கொண்டால் அறிவியல் பூர்வமாகக் கதையை நகர்த்துமாறு கொடி பிடிப்பார்கள். 

வருடம் 2018. பிப்ரவரி 14.

நேரம் அதிகாலை 3:59 என்றது சுவரில் இருந்த கடிகாரம். நான்கு மணிக்கு அலாரம் வைத்திருந்த மொபைல் போனைக் கையில் எடுத்து அலாரம் அடிக்கும் முன்பே ஆஃப் செய்தான் தரணி. தூங்கினால்தானே அலாரத்திற்கு வேலை? படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். இரவு முழுவதும் அவன் நெற்றியில் நீண்டிருந்த குழப்ப ரேகைகள், இப்போதும் இருந்தன. இருபது வயதைக் கடந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்த நிலையில், இந்த வகை குழப்பங்கள் ஒரு பெரிய விஷயமே இல்லைதான்.

“வேதிகாவிடம் சொல்லலாமா? வேண்டாமா?”

“சொன்னால் என்ன நினைப்பாள்?”

“சொன்னால் என்ன தவறு?”

“ஒருவேளை என்னை ஒதுக்க ஆரம்பித்துவிட்டால்?”

காதலர் தினம்

அவனுக்குள் இந்த நான்கு கேள்விகள்தான் இரவு முழுவதும் ஒடிக்கொண்டிருந்தன. கேட்கப்படும் வரிசை மட்டும் அவ்வப்போது மாறி, அவனை அலைக்கழித்தன. அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அவன் கல்லூரிக்கு அருகிலேயே ஓர் அறையை வாடகைக்கு எடுத்து தன் நண்பனுடன் தங்கியிருந்தான். ஒரு பெரிய அறை மற்றும் அட்டாச்டு பாத்ரூம். இதுதான் அப்போது அவன் வசந்த மாளிகை. இரண்டு நாள்களுக்கு முன்பு நண்பன் தன் சொந்த ஊருக்குப் போயிருந்தான். இன்று வந்துவிடுவதாகத் தகவல். இது அவனாக இருக்கக்கூடும். அவனிடம் இந்தக் குழப்பத்திற்கு விடை கேட்போம் என்று நினைத்தவாறே எழுந்தான். கதவு திறக்கப்பட்டது. இவன் திடுக்கிட்டு நின்றான். காரணம், அவன் அறைக் கதவை உள்ளே தாளிட்டிருந்தாலும், வெளியில் இருந்தே ஒரு யுக்தியின் மூலம் சுலபமாக திறக்கலாம். ஆனால், அந்தத் தந்திரம் இவனுக்கு மட்டுமே தெரியும். இவன் நண்பன், ஏன் வீட்டின் உரிமையாளருக்கேகூட அது தெரியாது. அதனால்தான் இப்போது அவன் திடுக்கிட்டான்.

உள்ளே நுழைந்த அந்தப் புதியவனுக்குப் பயங்கரமாக வியர்த்து வழிந்தது. கதவைத் தாழிட்டான். பார்ப்பதற்குத் தரணியைப்போலவே இருந்தான். கொஞ்சம் வயதான தோற்றம். யாரிடமாவது இவர் அவன் அண்ணன் என்று சொன்னால் நம்பி விடுவார்கள். ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு உட்கார்ந்தவன், அதிலிருந்த துணியால் முகத்தைத் துடைத்து கொண்டான். இவனுக்குக் கோபம் வந்தது, கேள்வி கேட்க உதட்டைப் பிரித்த போது, அவன் குரல் ஒலித்தது.

“நான் லேட்டா வந்துடலயே?” அவனுடைய குரல் தரணியின் குரல் போலவே இருந்தது. கொஞ்சம் முதிர்ச்சியை மட்டும் உணர முடிந்தது.

“நீங்க…?” என்று தயங்கினான் தரணி.

“நீதான்!”

“புரியல…”

“புரிஞ்சிடுச்சு. உன்கிட்டத்தான் பதிலிருக்கே! சொல்லு…”

“எதிர்கால…”

“அட! நான் அறிவாளிதான்!” என்று உற்சாகமாகி நாற்காலியிலிருந்து எழுந்து அறையினுள்ளேயே நடக்கத் தொடங்கினான். “எனக்கு நேரம் கம்மியாதான் இருக்கு. நான் வந்த விஷயத்தைச் சொல்லிடறேன். உனக்கு 20 வயசு. எனக்கு 32. நான் நீதான்! அதாவது உன்னோட எதிர்காலம். நான் 2030ம் வருசத்துல இருந்து வரேன்…”

------------

காலப்பயணம்

“என்ன நான் வேதிகாட்ட  ப்ரொபோஸ் பண்ணக்கூடாதா?” என்று மீண்டும் பதறினான் இருபது வயது தரணி.

“இதோட மூணாவது தடவை இந்தக் கேள்வியை கேக்கற! வார்த்தைகள் மட்டும் வேற வேற கோவையில இருந்துச்சு!” என்றான் 32 வயது தரணி.

“எதனால இப்படிச் சொல்ற... சொல்றீங்க?” என்று தட்டுத்தடுமாறினான் இளைய தரணி.

“ஹாஹா… நீ ஒருமையிலேயே கூப்படலாம்! சரி, இப்போ அது முக்கியமில்லை. வேதிகா வேண்டாம். இப்ப எல்லாம் சரினு தோணும். எதிர்காலத்துல கல்யாணம் கூட நடக்கும். ஆனா, அதுக்கப்புறம் அந்த வாழ்க்கை உங்க ரெண்டு பேருக்குமே நரகம் ஆயிடும். விவாகரத்துல போய்தான் நிக்கும். அதான் இப்பவே வேண்டான்னு சொல்றேன்” என்று குண்டை தூக்கிப் போட்டான் 32 வயது தரணி.

“அப்ப... இப்போ நான் ப்ரொபோஸ் பண்றப்ப அவ கண்டிப்பா சரினு சொல்ல போறாளா?” என்று அப்பாவியாகக் கேட்டான் இளையவன்.

“டேய்! இதுலாம் ஒரு டவுட்டா உனக்கு? அதத்தான் பண்ண வேண்டாம்னு சொல்றேன். கேளு! இப்ப நான் கஷ்டப்படறமாதிரி நீ பட வேணாம்…”

“இது அவளை மட்டும் குறை சொல்ற மாதிரி இருக்கு. தப்பு உங்க மேலயும், அதான் என் மேலயும்கூட இருக்கலாமே?” என்று இடைமறித்தான்.

“இருக்கலாம். அதை நான் மறுக்கல. ஆனா, எண்ட் ஆஃப் தி டே, ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லை. அதை உனக்குப் புரியவைக்கத்தான் வந்தேன். அப்பறம் உன் இஷ்டம்!”

“ஆனா…” என்று இளைய தரணி தொடங்கும் முன்பு, மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை. இருவர் முகத்திலும் பதட்டம் தொற்றிக்கொண்டது. தட்டிய ஐந்தாவது விநாடி, கதவு திறக்கப்பட்டது. உள்ளே ஒருவன் நுழைந்தான். கதவு மீண்டும் தாழிடப்பட்டது.

“ஹாய்! ஓ, நான் சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கேன்!” நாற்காலியில் அமர்ந்தான். அவன் நம் 32 வயது தரணியை விடக் கொஞ்சம் வயதான தோற்றத்தில் இருந்தான். தரணியைப் போலவே இருந்தான். அவனுடைய உடலும் பயங்கரமாக வியர்த்திருந்தது. அதே துணியில் முகத்தைத் துடைத்துக்கொண்டான்.

“எனக்கும் நேரம் கொஞ்சமாத்தான் இருக்கு. நானும் நீங்கதான். 2040-ல இருந்து வரேன். வயசு 42” என்று பொதுவாக கூறிவிட்டு இருபது வயது தரணியை நோக்கினான்.

“எனக்குத் தெரிஞ்சத சொல்ல வந்திருக்கேன். நான் எதிர்காலத்துல சந்தோசமா இருக்கணும். அப்படி ஒரு பேராசை. அதான் இது சட்டப்படி தப்புனு தெரிஞ்சும் வந்திருக்கேன். அதாவது காலப்பயணம் செய்றது தப்புனு சொல்ற சட்டம். 32 வயதான அவனும் சட்டத்தை மதிக்காமதான் வந்திருக்கான். அவனும் நான் சொல்ல வந்ததைத்தான் சொல்ல வந்திருப்பான். வேதிகா வேணாம். இந்தக் காதல் வேணாம்” என்று 42 வயது தரணியும் மனப்பாடம் செய்ததை ஒப்புவிப்பதுபோல கூறினான்.

32 வயது தரணியிடம் ஒரு புன்னகை. “நான்தான் சொன்னேன்ல?” என்று அது எள்ளல் பேசியது.

“என்கிட்ட ஒரு கூடுதல் தகவலும் இருக்கு. 2030-ல டைம் மெஷின் கண்டுபிடிச்சாங்க. அதனால காலப்பயணம் (time travel) சாத்தியமாச்சு.  ஆனா, அதுல இறந்த காலத்துக்கு மட்டும்தான் போக முடியும். இதை உன்கிட்ட அந்தத் தரணி சொல்லிருப்பான். இன்னொரு ஆச்சர்யம் என்னன்னா, 2040-ல ஒரு சிமுலேஷன் மெஷின் (Simulation Machine) கண்டுபிடிச்சாங்க” என்று சிறிது இடைவெளிவிட்டு மற்ற தரணிகளின் முகபாவனைகளைக் கவனித்தான் 42 வயது தரணி.

காதலர்கள்

அவர்கள் மிகுந்த ஆர்வத்தில் இவன் சொல்லப்போவதைக் கேட்க இவனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

“இது ஜோசியம் மாதிரிதான். ஆனால், அறிவியல் ரீதியா பண்றது. இதோட சக்ஸஸ் ரேட் கிட்டத்தட்ட 99 சதவிகிதம். ஒரு மனுஷனோட எதிர்காலம் அவன் எடுக்கும் முடிவுகளால் தீர்மானிக்கப்படுது. 2040-ல கண்டுபிடிச்ச சிமுலேஷன் மெஷின் வெச்சு என்ன முடிவு எடுத்தா ஒருத்தரோட வாழ்க்கை நல்லாயிருக்கும்னு தெரிஞ்சுக்கலாம். எதிர்காலம் மட்டுமில்லாம, இறந்தகாலத்துல என்ன பண்ணியிருந்தா வாழ்க்கை நல்லாயிருக்கும்னும் தெரிஞ்சுக்கலாம். வேதிகாவோட விவாகரத்து ஆனது உனக்குத் தெரிஞ்சிருக்கும். என்ன பண்ணியிருந்தா நம்ம, அதாவது என் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு தெரிஞ்சுக்க அந்த மெஷினை உபயோகிச்சேன்” என்று நிறுத்தினான். அருகிலிருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து வாயினுள் சரித்துக்கொண்டான்.

இவர்கள் காத்திருந்தார்கள். 20 வயது தரணி நகங்களைக் கடிக்கத் தொடங்கினான். 32 வயது தரணி அவன் கைகளைத் தட்டி விட்டான்.

“சரியா, உன்னோட 24-வது வயசுல ஒரு பொண்ணு உனக்கு ப்ரொபோஸ் பண்ணுவா. அதை ஏத்துக்கிட்டு இருந்தா வாழ்க்கை நல்லாயிருக்கும்னு பதில் வந்துச்சு. ஸோ, அதுக்காக நீ வெயிட் பண்ணு! வேதிகா வேணாம்” என்று முடித்தார்.

“ஓ, அவளா? ச்சே! மிஸ் பண்ணிட்டேன்!” என்றான் 32 வயது தரணி.

“எனக்கு ஒண்ணுமே புரியல. இதெல்லாம் நெஜமா? இல்ல கனவா?” என்று தலையைச் சொரிந்தான் இளைய தரணி.

------------

ரண்டு முதிர்ந்த தரணிகளும் மீண்டும் அவர் அவர் காலத்திற்குச் சென்று ஐந்து நிமிடங்கள் கழிந்துவிட்டிருந்தன. நேரம் காலை 5.30 மணி. சூரிய வெளிச்சம் “இதோ வரப்போகிறேன்” என்று இருட்டிடம் பயங்காட்டிக்கொண்டிருந்தது.

மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை. இந்த முறை தன் நண்பன்தான் என்று நினைத்தான் தரணி. கதவைத் திறக்க அதனருகில் வந்தபோது அது வெளியே இருந்து திறக்கப்பட்டது.

“உள்ளே வரலாமா?” ஒரு கிழவர் நின்றிருந்தார்.

“நீங்க?” என்று கேட்டான் தரணி.

“இப்போ ரெண்டு பேர் வந்தாங்களே அவங்கள விட பெரியவன்” என்று பதில் வந்தது.

உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தார். கதவு திறந்தே இருந்தது. தண்ணீர் அருந்தினார். வியர்வையை அதேபோல் துணியில் துடைத்தார்.

“என்ன எல்லாம் நல்லா குழப்பிட்டாங்களா?” என்று கேட்டார்.

“புரியல. நீங்க யாரு சார்?”

“ஹாஹா! நான் நீங்கதான். அவங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன். எனக்கு 72 வயசு. நான் 2070-ல இருந்து வரேன்!” என்றார்.

இளைய தரணி மயங்கி விழுந்தான்.

அவன் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. எழுந்து உட்கார்ந்தான்.

“நீங்களும் என்ன, வேதிகாகிட்ட ப்ரொபோஸ் பண்ணக் கூடாதுனு சொல்லத்தான வந்தீங்க? சொல்லிட்டுக் கிளம்புங்க!” என்று கடுகடுத்தான்.

“ஹாஹா! இல்ல!” என்றார்.

“அப்பறம்? பண்ணச் சொல்றீங்களா?”

“ஹாஹா! அதுவும் இல்லை!”

“ரொம்ப சிரிக்காதீங்க. எனக்குச் சுத்தமா புரியல!” என்றான் அப்பாவியாக.

“வா. சும்மா ஒரு வாக் போவோம். இந்த ஏரியாக்கு நான் வந்து எவ்ளோ வருஷம் ஆச்சு தெரியுமா? முக்குல இருக்கற தேனப்பண்ணன் டீ கடையைத் தொறந்திருப்பார். சூடா வடை கிடைக்கும். வா, சாப்டுட்டே பேசுவோம்” என்று தட்டுத்தடுமாறி எழுந்தார்.

“உங்கள யாரவது என்கூட பாத்துட்டா பிரச்னை ஆகாதா?” என்று கேட்டான் இளைய தரணி.

“இல்ல, இந்த வயசுல என்ன யாரு நீதானு சொல்ல போறாங்க? பயப்படாத, வா!” என்று இருவரும் வெளியே நடக்கத் தொடங்கினார்.

“அந்த ரெண்டு பேரும் உன்கிட்ட சொன்னத ரப்பர் வெச்சு அழிச்சிடு. அவங்கள நீ சந்திக்கவே இல்லனு வெச்சுக்கோ!” என்று பேசத் தொடங்கினார்.

“ஏன்? அப்ப அவங்க சொன்னது பொய்யா? வேதிகாகிட்ட நான் ப்ரொபோஸ் பண்ணலாமா?” என்று இடைமறித்தான்.

“அவங்க சொன்னது உண்மைதான். அவங்க சொன்னா எல்லாம் நடக்கும்! உறுதியா நடக்கும்!” என்றார்.

“அப்புறம் ஏன் என்ன தடுக்க மாட்றீங்க?” என்று வினவினான் இளையவன்.

“எப்போவோ எதிர்காலத்துல நடக்கப்போற விஷயத்துக்காக இப்போ உனக்குப் பிடிச்சத ஏன் நீ செய்யக் கூடாதுனு நெனைக்கிற? வேதிகா உன்னைவிட்டுப் போகப் போறான்னா, போகட்டும். இப்போ அவ உன்கூடதான இருக்கப் போறா? இழப்புங்கறது வாழ்க்கைக்கு அவசியம். அது நடக்கறப்ப, அத சமாளிக்கிற மனப்பக்குவமும் உனக்கு கண்டிப்பா வந்திருக்கும். இப்போ உனக்கு அவளை எவ்ளோ புடிச்சிருக்குனு எனக்கு நல்லா தெரியும். அதையெல்லாம் தாண்டித்தான் நான் வந்துருக்கேன். இந்தக் காலப்பயணம் செய்ற மெஷினை மனுஷங்க கண்டுபுடிச்சது மாதிரி ஒரு முட்டாள்தனம் வேற எதுவுமில்ல...” என்று நிறுத்திவிட்டு, தேனப்பண்ணன் கடை வந்ததால், “ரெண்டு டீ, ரெண்டு வடை சொல்லு!” என்றார்.

விடியல்

உடனே இரண்டும் வந்தது.

“சார், அப்ப நான் இப்ப என்ன பண்ணட்டும்? ப்ரொபோஸ் பண்ணவா?” என்று டீயை சூப்பிக்கொண்டே கேட்டான் இளைய தரணி.

“அந்த முடிவ நான் உன்கிட்டயே விட்டுடறேன். நான் இங்க வந்ததுக்கான காரணம், அவங்க சொல்றத செய்யக் கூடாதுனு சொல்றதுக்கு இல்ல! உனக்குப் புடிச்சத செய்னு சொல்லல. இந்தக் காலப்பயணம் மேஜிக் எல்லாம் வேஸ்ட். என்னோட காலத்துல, இந்தக் காலப்பயணம், அப்பறம் இந்த சிமுலேஷன் மெஷின்களை எல்லாம் அழிக்கச் சொல்லி போராட்டம் நடக்குது. எனக்கும் அதுதான் சரினு படுது!” என்றார்.

“ஏன் அப்படிச் சொல்றீங்க?”

“எந்த ஒரு கண்டுபிடிப்பும், நம்மோட சுதந்திரத்தையும், விருப்பு வெறுப்புகளையும் பாதிக்கக் கூடாது. நீ இதைத்தான் செய்யணும், அதான் உன்னோட விதியில இருக்குனு சொல்ற காலப்பயணம் செய்யற மெஷினும் சரி, நீ இதை செஞ்சாதான், எதிர்காலம் நல்லாயிருக்கும்னு ஜோசியம் சொல்ற சிமுலேஷன் மெஷினும் சரி, நமக்குப் பிடிச்ச முடிவுகளை எடுக்கவே விடாது. நம்மள ஒருவித பயத்துலயே வெச்சிருக்கும். அதுலயும் காதல்ல சுதந்திரம் கண்டிப்பா வேணும். இப்போ உனக்குள்ள புதுசா இருக்குற இந்த உணர்வுகள் உன்னதமானதுனு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனா, அது உன்னோடது. அதை நீ மதிக்கணும். எதிர்காலத்தைப் பத்தி பயப்பட ஆரம்பிச்சா சாகற வரைக்கும் அப்படியேதான் இருப்ப!” என்று கூறிவிட்டு, பாதி வடையை வாய்க்குள் திணித்துக்கொண்டார்.

குழப்பத்துடன் அவரை ஏறிட்டான் இளைய தரணி.

“இதை நான் ரொம்பவும் லேட்டாதான் புரிஞ்சுக்கிட்டேன். நான் சொல்றதகூட நீ மறந்துடு. ஆனா, ரூமுக்குப் போயி நல்லா யோசி. எது உனக்கு வேணுமோ, எது உனக்கு புடிக்குமோ அதையே செய். கணக்குக்கு விடை சொல்லிட்டு, அது வர மாதிரி கணக்கை போடுன்னு, ஒரு டீச்சர் சொன்னா, அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கும்? எல்லார்கிட்டயும், இருக்கிற பிரச்னையே அதான். இறந்த காலத்துலயும், எதிர் காலத்துலயும் மட்டும்தான் வாழ்ந்துட்டு இருக்கோம். நிகழ்காலம்தான் முக்கியம். எப்பவுமே! ஒரு திருமணம், பிரிவுல முடியுதுனா, முடியட்டும். எல்லாத்துலயும் ஜெயிச்சிட்டே இருக்கணும்னு நெனைக்கிறதுக்கு, வாழ்க்கை ஒரு விளையாட்டோ, போட்டியோ இல்லை. வாழக் கத்துக்கோ! எப்ப நீ உனக்கு புடிச்சத செய்றியோ, அப்பத்தான் நீ வாழறனு அர்த்தம்!” என்று இரண்டு நொடிகள் நிறுத்தினார். “காசு குடுத்துடு!” என்று இவனிடம் சொல்லிவிட்டு, “தேனப்பண்ணே, டீ சூப்பர்! எப்பவும் போலவே” என்று கத்தினார்.

தேனப்பன் “இது யாருடா புது ஆள்!” என்று புரியாமல் விழித்தார்.

72 வயது தரணி, மெள்ள நடந்து, ஒரு முட்டுச் சந்தில் போய் நின்று, ஒரு பட்டனை அழுத்த, இவனுக்குக் கையசைத்துக்கொண்டே காற்றில் கரைந்து போனார். வானம் நன்றாக விடிந்திருந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்