குண்டு போடும் வண்டு கற்பனையல்ல... நிஜத்திலும் உண்டு! #BombardierBeetle

ஒவ்வோர் உயிரினமும் தன்னைக் காத்துக்கொள்ளவும், இன்னோர் உயிரை இரையாக்கிக் கொள்ளவும் பல உத்திகளைக் கையாளுகின்றன. சில உயிரினங்கள் மட்டுமே தனித்துவமான தற்காப்புக் கலையைக் கொண்டிருக்கின்றன. முள்ளம்பன்றிக்கு முற்கள், சிலந்திக்கு வலை, பாம்பிற்கு விஷம் என ஒவ்வோர் உயிரும் ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு டெரர் ஆயுதத்தைக் கொண்ட உயிரினம் “ஜெனோஷிஷ்” பாம்பார்டியர் பீட்டில். குண்டு வீசும் வண்டு என அழைக்கப்படுகிறது. (jessoensis bombardier beetle ) 

வாயு வெளியேற்றும் பூச்சி  Beetle

இந்த வண்டைத் தொந்தரவு செய்ய நினைத்தால் உடலின் பின் பகுதியில் இருக்கும் தன்னுடைய ஆயுதக் கிடங்கிலிருந்து சூடான திரவத்தை எதிரியை நோக்கிப் பீய்ச்சி அடிக்கிறது. வெளியேறுகிற திரவம் 212 டிகிரி சூடாக இருக்கும். வண்டின் உடலில் இருக்கிற ஒரு வகைச் செல்கள் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் ஹைட்ரோகுவினோனை இரண்டு திரவங்களையும் உருவாக்குகின்றன. இரண்டு திரவங்களும் உடலின் ஒருபகுதியில் தேக்கி வைக்கப்படுகின்றன. தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து வேண்டிய அளவுக்கான திரவங்களை வண்டு தன்னுடைய எக்ஸ்ப்ளோசன் சேம்பரில் சேர்த்து வைக்கிறது. சேம்பரில் ஏற்படுகிற வெப்ப அழுத்தத்தில் வாயுவாக மாறுகிற திரவம் 212 டிகிரி வெப்பத்திற்கு வருகிறது. அப்படியிருக்கிற வாயுவை ஆபத்தான நேரங்களில் பாதுகாப்பிற்காக  வெளியேற்றுகிறது. எந்தக் கோணத்திலும் வெளியேற்றும் அளவிற்கு அதன் உடலமைப்பு அமைந்திருக்கிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு பல தொழில் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. விமானங்களின் உந்து சக்திக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

பாம்பர்ட் வண்டு


உலகில் குண்டு வீசுகிற வண்டு இனங்கள் 649 உள்ளன. அவற்றில் சில வண்டு இனங்கள் மட்டுமே தற்காப்பு உத்திகளைப் பயன்படுத்துகின்றன. வண்டு பற்றிய புதிய ஆய்வில் உள்ள ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பூச்சிகளைச் சாப்பிடும் டாட்ஸுக்கு ( தவளை) என்ன நடக்கிறது என்பதை அறிய நேரடிச் சோதனை முயற்சியை மேற்கொள்ள முடிவு செய்கிறார்கள். அதற்காக 37 “ஜெனோஷிஷ்” குண்டு வீசும் வண்டுகளை ஆராய்ச்சி நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கிற வனப்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டன. சோதனைக்குப் பயன்படுத்தப்படும் 37 டோட்ஸ் வகைத் தவளைகளை ஜப்பானின் வாகாயமா வன ஆராய்ச்சி நிலையம் மற்றும் கியோட்டோ பல்கலைக்கழக, கள அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும் கொண்டுவரப்பட்டன. 

பாம்பார்டியர்

ஆராய்ச்சியின் படி ஒரு தவளைக்கு ஒரு வண்டு என ஆராய்ச்சியாளர்கள் உணவாகக் கொடுக்கிறார்கள். டோட்ஸ் தவளைகள் வண்டுகளைப் பார்த்ததும் பிடித்துச் சாப்பிட்டு விடுகின்றன. வண்டுகளை உணவாகக் கொண்ட தவளைகளின் நடவடிக்கையில் மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கிறது. வண்டுகளை உட்கொண்ட 2 மணி நேரத்துக்குள் தவளைகள் உட்கொண்ட வண்டுகளை ஒவ்வொன்றாக வெளியே துப்புகின்றன. வயிற்றுக்குள் போகிற வண்டுகள் ரசாயன வாயுவை வெடிக்கச் செய்கின்றன. 212 டிகிரி சூடாக இருக்கும் திரவம் தவளையின் அடிவயிற்றில் பரவ ஆரம்பிக்கிறது. மீண்டும் மீண்டும் திரவத்தை வண்டுகள் வெளியேற்றுவதால் தவளை திக்கு முக்காடுகிறது. வேறு வழியின்றித் தவளை வண்டுகளை வெளியே துப்புகின்றன. தவளைகளின் செரிமான மண்டலத்தால் கூட வண்டுகளை எதுவும் செய்ய முடியவில்லை. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் 88 நிமிடங்களுக்கு மேலாகத் தவளையின் வயிற்றிலிருந்த வண்டு உயிரோடு வெளியே வந்து விழுகிறது. வண்டை வெளியே துப்பும் பொழுது தவளையின் உடல் மொழி மிகப் பெரிய துயரத்தில் இருப்பதாகக் காட்டுகிறது. வெளியே வந்த 16 வண்டுகள் உயிரோடும் நடமாடும் திறனுடனும் இருக்கின்றன. அவற்றில் 15 வண்டுகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக உயிர் வாழும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட தவளைகள் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இருப்பதால் ஆய்வுக்குப் பிறகு ஆய்வகப் பகுதியின் அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டன.  

வண்டு தன்னுடைய உடலிலுள்ள மொத்த வாயுக்களையும் வெளியேற்றும் பட்சத்தில் தவளை உயிரிழக்க நேரிடலாம். ஏனெனில் வெளியேறும் வாயு அவ்வளவு விஷத்தன்மை கொண்டது. இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிரமிப்பாகவே இருக்கிறது.  

 

 

 

 

 

 

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!