Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்! - யதார்த்தம் உணர்த்தும் கதை! #MotivationStory

கதை

ருவரைச் சரியாக எடைபோடும் திறமை அனுபவத்திலிருந்து கிடைக்கும்; ஒருவரைத் தவறாக எடைபோடும்போதுதான் அனுபவம் கிடைக்கும்’ - அமெரிக்காவின் கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட் ஜிம் ஹார்னிங் (Jim Horning) அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். வாழ்க்கை நமக்குப் பல அனுபவங்களைத் தருகிறது. அவற்றில் சில அதிர்ச்சி தரும்; சில ஆச்சர்யப்படுத்தும். அந்த அனுபவங்களில் மிக முக்கியமானது, பிறரைத் தவறாக நினைக்கும் சுபாவம். கோபம், ஆத்திரம், ஏமாற்றம், விரக்தி போன்றவற்றால் ஒருவரைத் தவறாக எடைபோட்டுவிடுவோம். அதை வெளிப்படுத்தியும்விடுவோம். பிறகு அதை நினைத்துக் குறுகிப்போய் நிற்போம். இந்த அனுபவம் எல்லோருக்குமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கிடைத்திருக்கலாம். ஆனால், இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால், அவருக்கு நாம் நம்மால் முடிந்த நல்லதைச் செய்ய வேண்டும். அந்தச் சமயத்தில் நேசத்தைக் கொட்டலாம்; பெருந்தன்மையோடு நடந்துகொள்ளலாம். உங்களுடைய தவறிலிருந்து மற்றவரைப் பாராட்ட, போற்ற, கொண்டாடக் கற்றுக்கொள்ளும் பாடம் அது. இந்த யதார்த்தத்தை உணர்த்தும் கதை ஒன்று...

அது லண்டனிலிருக்கும் புறநகர்ப் பகுதி. காலை நேரம். ஜான் ஒரு புழுதிபடிந்த சாலையில் நடந்துகொண்டிருந்தான். மென்மையான சுபாவம் கொண்டவன், பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமுள்ளவன், பிரதி பலன் பார்க்காமல் யாருக்கு வேண்டுமானாலும் உதவுபவன். சாலையோரத்தில் ஒரு பர்ஸ் கிடப்பதைப் பார்த்தான் ஜான். அதை எடுத்தான். திறந்தான். உள்ளே ஒன்றுமில்லாமல் காலியாக இருந்தது.

``என் பர்ஸ்... என் பர்ஸ்...’’ என்று ஒரு குரல் கேட்டது. ஒரு நடுத்தர வயதுள்ள பெண்மணி அவனுக்கு எதிரே நின்றுகொண்டிருந்தாள். அவளுடன் ஒரு போலீஸ்காரரும் இருந்தார்.

``சார்... இது என் பர்ஸ்தான் சார்...’’ என்று போலீஸ்காரரிடம் சொன்னாள் அந்தப் பெண். ஜான், பர்ஸை அவளிடம் கொடுத்தான். அதை அவசரமாகத் திறந்து பார்த்தவள் கலங்கி அழ ஆரம்பித்தாள்.

பயம்

``சார்... இதுல பணம்வெச்சிருந்தேனே... அது எங்கே? கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் சார்... என் மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு எடுத்துட்டு வந்தேன். அப்பா இல்லாத பிள்ளை அவன். தயவு செஞ்சு குடுத்துடுங்க சார்... நான் ஸ்கூல்ல போய் ஃபீஸ் கட்டிட்டு, அப்புறம் ஆபீஸ் போகணும்...’’ அவள் அவன் காலில் விழாதகுறையாக புலம்பினாள்.

ஜான், வேறு எதுவும் பேசாமல் தன் பையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் எடுத்து அவளிடம் கொடுத்தான். ``மன்னிச்சிருங்க... சீக்கிரம் போங்க!’’ என்றான். அவள் பணத்தோடு திரும்பிப் போனாள். போலீஸ்காரர், ஜானை விசாரிப்பதற்காக அழைத்துப் போனார்.

அந்தப் பெண் தன் மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்று பணத்தை எண்ணிப் பார்த்தபோதுதான், அவள் வைத்திருந்த தொகையைவிட அதிகமாக இருந்தது தெரிந்தது. ஒரு கணம் அவள் அதிர்ந்துபோனாள். மகனின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு வந்தவள், அதோடு அந்தச் சம்பவத்தை மறந்தே போனாள்.

***

அடுத்த மாதம் அதேபோல ஒரு தினம்... அதே பெண்மணி. சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தாள். சற்று தூரம் சென்றதும் உள்ளுணர்வு உறுத்த திரும்பிப் பார்த்தாள். சற்று தூரத்தில் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்து வருவதுபோலத் தோன்றியது. சாலையோரமாக நின்றாள். அவனும் நின்றான். அவள் சற்று வேகமாக நடந்தாள்... அவனும் வேகமாக நடந்து வந்தான். அந்த மனிதன் தன்னைத்தான் பின்தொடர்ந்து வருகிறான் என்பது அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது. தன் கைப்பையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். `ஐயோ... அந்த ஆள் என்னை வழிமறிச்சு பணத்தைப் பிடுங்கிட்டா என்ன செய்யறது?’ - பயம் தொற்றிக்கொள்ள அக்கம் பக்கம் யாராவது உதவ மாட்டார்களா என்று பார்த்தபடியே நடந்தாள்.

சற்று தூரத்தில் ஒரு போலீஸ்காரர் தெரிந்தார். விரைந்து அவரருகே போனாள். அவர், கடந்த மாதம் அவளுடன் வந்திருந்த அதே போலீஸ்காரர். அவள், அவரிடம் ``என்னை ஒருத்தன் ஃபாலோ பண்றான் சார். எனக்கு பயமா இருக்கு... அங்கே பாருங்க...’’ என்று பின்னால் கையைக் காட்டினாள்.

அதே நேரத்தில் அவளைப் பின்தொடர்ந்து வந்த மனிதன் சுருண்டுபோய் சாலையிலேயே விழுந்துவிட்டான். போலீஸ்காரரும் அந்தப் பெண்ணும் அவனருகே ஓடினார்கள். அவன், அதே ஜான். போலீஸ்காரர் அவனைக் கைகொடுத்து தூக்கிவிட்டார்.

பிந்தொடர்தல்

``என்ன ஆச்சுப்பா?’’ காவலர் விசாரித்தார்.

``நல்ல ஜுரம் சார்.. தலை சுத்துற மாதிரி இருந்தது. கீழே விழுந்துட்டேன்...’’

இப்போது போலீஸ்காரர் அந்தப் பெண்ணிடம் திரும்பினார்... ``மேடம்... அன்னிக்கி இவர் உங்ககிட்ட கொடுத்தது உங்களோட பணம் இல்லை; இவரோடது. இவர் திருடனில்லைங்கிறது விசாரிச்சப்போதான் தெரிஞ்சுது. நீங்க உங்க மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு அழுது புலம்பினதைத் தாங்காம தன்னோட பணத்தைக் கொடுத்திருக்கார்...’’

அந்தப் பெண் ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள். போலீஸ்காரர் ஜானின் பக்கம் திரும்பினார். ``சரிப்பா... இன்னிக்கி எதுக்கு இந்த அம்மா பின்னாலயே வந்தே?’’

``இல்லை சார்... எப்படியும் இன்னிக்கோ, நாளைக்கோ இவங்க மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டவேண்டியிருக்கும். அப்போ யாராவது இவங்க பணத்தைத் திருடிட்டுப் போயிடக் கூடாதுல்ல? அதனாலதான் பின்னாலயே துணைக்கு வந்தேன்...’’

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement