ஆமை நடனம்... ஆம்லெட்... மெரீனாவில் 125 முட்டையிட்ட கடல் ஆமை... ஒரு லைவ் ரிப்போர்ட்! | olive ridley turtle laying eggs on marina beach

வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (15/02/2018)

கடைசி தொடர்பு:11:11 (15/02/2018)

ஆமை நடனம்... ஆம்லெட்... மெரீனாவில் 125 முட்டையிட்ட கடல் ஆமை... ஒரு லைவ் ரிப்போர்ட்!

நண்பருடன் இரவு உணவை முடித்துவிட்டு மெரினா கடற்கரையை நெருங்கியபோது மணி 8.30-ஐ தொட்டிருந்தது. கடலை நோக்கி நடந்து சென்றோம். வானில் நிலவைக் காணவில்லை. கடலின் உள்ளே தொலைவில் மீன்பிடிப்படகுகளின் விளக்குகள் விட்டுவிட்டு ஒளிர்ந்துகொண்டிருந்தன. ”எவ்வளோ நேரம் நிக்கிறது? கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு கிளம்புவோம்” என நாங்கள் மணலில் அமர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் அந்த இடத்திற்குப் பக்கத்தில் மொபைல் ஃபிளாஷ் லைட்டுகள் மின்னத் தொடங்கின. அலைகள் தொட்டுவிட்டுப் போகும் இடத்தில் ஏழெட்டு பேர் கூடியிருந்தார்கள். அவர்கள் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த அந்த உருவம் மெதுவாக அசைந்ததைப் பார்த்தவுடன் எங்கள் இருவருக்குமே புரிந்து போனது. அது நிச்சயமாக ஒரு ஆலிவ் ரிட்லி ஆமைதான். ஏனென்றால் ஒரு வாரத்திற்கு முன்னால்தான் நீலாங்கரை கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் வரை இரவில் "ஆமைகளைக் காக்கும் நடை"-யில் கலந்துகொண்டிருந்தோம். ஆனால், அன்று இறந்துபோய் கரை ஒதுங்கிய ஆமைகளை மட்டுமே பார்க்க முடிந்தது. அன்றைக்கு நாங்கள் தெரிந்துகொண்ட தகவல் பெரும்பாலும் நள்ளிரவிற்கு மேல்தான் ஆமைகள் முட்டையிடுவதற்காகக் கரைக்கு வரும்.

ஆனால், அப்போது மணி ஒன்பதைக்கூட தாண்டவில்லை. சரி எதற்கும் போய்ப் பார்ப்போம் என்று யோசித்தவாறே அருகில் சென்று பார்த்தோம். ஓர் ஆமை கடலிலிருந்து மெதுவாக தவழ்ந்து கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதைத்தான் வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்துக்கொண்டிருந்தது அந்தக் கூட்டம். அது மெதுவாக கரையேறிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்திலிருந்து ஒரு குரல்... "ஏ..வாங்கப்பா ஆளுக்கொரு பக்கமா பிடிங்க ஆமையைக் கடலுக்குள்ளே தூக்கி விட்டுருவோம்".

“என்னது கடலுக்குள்ள தூக்கி விடப்போறீங்களா... அட நீங்க வேற சும்மா இருங்க பாஸ் அது முட்டை போடத்தான் வெளியவே வந்துருக்கு” என நாம் சொன்னதும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். ’மொபைலிலிருக்கும் டார்ச்சை கொஞ்சம் ஃஆப் பண்ணிடுங்களே’ன்னு சொன்னதும் உடனே அணைத்துவிட்டு ஆமைக்கு வழிவிட்டார்கள். ஆமை சரியாக மணல் சரிவு தொடங்கும் இடத்திற்கு சற்று மேலே வந்து நின்றது. அது அடுத்ததாக என்ன செய்யப்போகிறது என்பதைப் பார்க்க அனைவரும் ஆவலோடு காத்திருந்தார்கள். 

ஆலிவ் ரிட்லி

ஆமை முட்டையிடுவதற்காக இடத்தைத் தேர்வுசெய்து சுத்தப்படுத்த ஆரம்பித்தது. கடலில் நீந்துவதற்காகப் பயன்படும் அதன் துடுப்புகளைத்தான் மணலைத் தோண்டுவதற்குப் பயன்படுத்துகிறது. தோண்டுகிறது என்பதைவிட மணலைத் துடுப்புகளால் வாரி இறைக்கிறது என்று வைத்துக்கொள்ளாலாம். அப்படியே கால்மணி நேரம் ஆகிவிட கூட்டம் கலைய ஆரம்பித்தது, ஒரே ஒருவரைத் தவிர. வேறு ஊரிலிருந்து வந்திருப்பார்போல. ’இவ்வளவு பெரிய ஆமையை பார்த்ததே இல்லை’ என்று கடைசிவரை சொல்லிக்கொண்டே இருந்தார். இடையில் அவருக்கு போன் வரவும் "நான் கொஞ்சம் பிஸி" என்று கூறிவிட்டு, ’இன்னைக்கு ஆமை முட்டை போடுறத பாக்காமல் இடத்தை விட்டு நகர்வதில்லை’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டார். ஆமைக்கு அருகே நாங்கள் இருவரும் நின்றுகொண்டிருக்க ஆமை அமைதியாக மணலைத் தோண்டிக்கொண்டிருக்க, கடல் அலையின் இரைச்சலையும் மீறி அப்பொழுது அவர் கேட்ட கேள்வி தெளிவாக எங்கள் காதுகளை வந்தடைந்தது. "ஆமை முட்டையில ஆம்லேட் போடலாமா?" இந்தக் கேள்வியை அவர் கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது, "இந்த ஆமை பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளின் பட்டியலில் இருக்கிறது முட்டையை எடுத்தால் கைது செய்யப்படலாம்" என்று நாங்கள் கூறியதை அவர் சீரியஸாக எடுத்துக்கொண்டது போலவே தெரியவில்லை.

ஆமை கரைக்கு வந்து அரைமணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்தது. அதற்குள்ளாக ஆமை சுற்றியிருந்த மணலைத் தோண்டியிருந்தது, முன்புற துடுப்புகள் முன்பைவிட மெதுவாக அசைந்துகொண்டிருந்தன. அவ்வப்போது ஒரு பெருமூச்சு ஆமையிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இதற்குள் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் இதைப்பற்றி தகவல் சொல்லவும், அவர் அந்தப் பகுதியில் ஆமை முட்டைகளை சேகரிப்பவர்களிடத்தில் தகவல் தெரிவித்திருந்தார், ஆமை முட்டைகளை சேகரிப்பவர்கள் உடனடியாக அங்கே கிளம்பி வந்துகொண்டிருந்தார்கள். சுற்றி இருந்த கடையும் மூடிவிட்டதால் அந்த இடத்தில் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. நாங்கள் இருந்த இடத்தைச் சுற்றி மக்கள் இருந்தாலும் அவர்களுக்கு அங்கே ஆமை இருப்பதே தெரியவில்லை.  திடீரென ஆமை அது தோண்டிய இடத்தை விட்டு நகரத் தொடங்கியது. நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போனில் இருந்த டார்ச் மூலமாக குழியைத் தோண்டி முட்டையைத் தேடத் தொடங்கினார் அந்த ஆம்லெட் கேள்வியைக் கேட்டவர். ஆனால் அந்தக் குழியில் முட்டை எதுவுமே இல்லை, அவர் மொபைலில் இருந்துவந்த வெளிச்சத்தில் ஆமையைப் பார்த்த அருகில் இருந்த இளைஞர் கூட்டம் ஆமையை நோக்கி வரத்தொடங்கியிருந்தது.

திரும்பிப் போகும் ஆமை

ஆமைக்கு முதலில் குழி தோண்டிய இடம் திருப்தியாக இல்லை போலும். அது இன்னும் சற்று மேலே முன்னேறி வந்து மற்றொரு இடத்தில் குழி தோண்டத் தொடங்கவும், இளைஞர் கூட்டம் வந்து சேரவும் சரியாக இருந்தது. பத்துப் பதினைந்து பேர்களுக்கு மேல் இருந்த அவர்கள் செய்ததுதான் அதிர்ச்சியின் உச்சம். நெருங்கி வந்தவர்கள் இஷ்டத்திற்கு ஆமைக்கு அருகில் இருந்தவாறே பல செல்ஃபிகளை எடுத்துத் தள்ளினார்கள். அதுமட்டுமின்றி காலால் ஆமையை மிதித்துத்தள்ளுவதும், அதன் துடுப்புகளை இழுத்துப்பார்ப்பதுமாக இருந்தார்கள். "மச்சான் ஒடு கல்லு மாதிரி இருக்குடா... இதுல நம்ம பேர எழுதுவோமா", "ஆமை மேலே ஏறி அப்படியே ஒரு ரைடு போவோமா" எனப் பல விபரீத யோசைனைகளும் அவர்களிடமிருந்து வந்தன. கடைசிவரை ஆமையைத் தொந்தரவு செய்த வண்ணமே இருந்தது அந்தக் கூட்டம். ஏதோ தவறு நடக்கிறது; அங்கே இருப்பது தனக்கு ஆபத்து என்று ஆமை உணர்ந்திருக்கக்கூடும். மணலைத் தோண்டுவதை விட்டுவிட்டு கடலை நோக்கி நகர ஆரம்பித்தது. அப்படியும் அதை விடாமல் துரத்திய அந்தக் கூட்டம் ஆமை கடலில் சென்று மறையும் வரை  தொந்தரவு செய்துவிட்டுதான் கிளம்பியது. ஆம்லெட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தவரும் முட்டை இல்லாததால் ஏமாற்றத்தோடு வீட்டிற்குக் கிளம்பினார்.

அனைவரும் கிளம்பிவிட நானும் நண்பரும் மட்டும் ஆமை முட்டைகளை சேகரிப்பவர்களுக்காக அந்த இடத்தில் காத்திருந்தோம். சற்று நேரத்தில் அங்கே வந்த இரண்டு பேர், ஆமை தோண்டிய இரண்டு குழிகளையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு முட்டை இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள். அங்கே நடந்த சம்பவங்களைக் கூறவும் வருத்தப்பட்டவர்கள் தொல்லை செய்யாமல் அமைதியாக இருந்திருந்தால் ஆமை முட்டை இட்டிருக்கும் என்று தெரிவித்தார்கள். அவர்களிடம்  சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு ரூமிற்குக் கிளம்பினோம், சற்று தூரம் சென்றவுடனேயே கடந்த வாரம் கடற்கரையில் பார்த்த ஓர் ஆமை நினைவுக்கு வந்து சென்றது. நீலாங்கரைக்கும் பெசன்ட்நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் இறந்து கிடந்த நான்கைந்து ஆமைகளில் அதுவும் ஒன்று. முட்டையிடுவதற்காகக் கடலை நோக்கி வரும்பொழுது ஏதோ ஒன்றால் அது பலமாகத் தாக்கப்பட்டிருக்கக்கூடும், இருந்தாலும் கரையை நோக்கிய பயணத்தில் இருந்து பின் வாங்காத அந்த ஆமை கரையில் இருந்து சற்று மேலேறிய பின்னர் உயிரை விட்டிருக்கிறது. உடல் சிதைந்து வயிற்றில் இருந்து முட்டைகள் வெளியேறிக் கிடந்த அதை அந்த நிலைமையில் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. இப்பொழுது முட்டையிட முடியாமல் திரும்பிச் சென்ற ஆமைக்கும் அது போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்று  யோசிக்காமல் இருக்க முடியவில்லை.  அரைமணி நேரம் கடந்திருக்கும். மெரினா கடற்கரையில் இருந்து அழைப்பு " சீக்கிரம் இங்க வாங்க இன்னொரு இடத்துல ஆமை முட்டை போடுது". கடந்த முறை  ஆமையின் மரணத்தை பார்த்த எங்களுக்கு ஒரு புதிய உயிர் பிறப்பதை பார்க்க இயற்கை அளித்த வாய்ப்புதான் இது. அடுத்த கால்மணி நேரத்தில் அங்கே இருப்பதாக உறுதியளித்துவிட்டு  பைக்கை  மீண்டும் மெரினாவிற்கே திருப்பினோம். 

முட்டை

அங்கே போனால் நாங்கள் பார்த்த அதே ஆமை முன்னால் இருந்த இடத்தை விட்டு சற்றுத் தள்ளிவந்து முட்டையிட்டுக்கொண்டிருந்தது. இங்கே அதைத் தொந்தரவு செய்வதற்கு யாருமே இல்லை. மணியும் பத்தைத் தாண்டிவிட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லவே இல்லை, தவிர ஆமை முட்டை இடத்தொடங்கியதுமே ஒரு விதமான மயக்க நிலைக்குச் சென்று விடுவதால் இடையூறு இருந்தாலும் அது அதை கண்டுகொள்வதில்லை. அசைவற்ற நிலை, அவ்வப்போது ஒரு பெருமூச்சு அவ்வளவுதான் ஆமை முட்டை இடும்பொழுது நமது வெளிப்பார்வைக்கு தெரிவது. ஆனால், அதன் பின்புறமாக ஒரே நேரத்தில் மூன்று முட்டை வரைக்கும் அது தோண்டிய குழிக்குள் விழுந்து கொண்டிருந்தன. சற்று நேரத்தில் முட்டைகளை இட்டு முடித்ததும் பின்புறத் துடுப்புகளால் மணலை இழுத்து குழியை மூட ஆரம்பித்தது ஆமை. அதன் பிறகு அதன் மேற்பரப்பைக் கடினமாக்கும் வகையில் அதன் உடலைத் தூக்கி மேலும் கீழுமாக அடிக்கிறது. அதற்கு "ஆமை நடனம்" (Turtle Dance) என்று பெயராம். முட்டைகளைப் பாதுகாப்பதற்காக தாய் ஆமை செய்யும் பாதுகாப்பு ஏற்பாடுதான். இதனால் முட்டைகள் இருக்கும் குழியின் மேற்புறம் கடினமாக ஆக்கப்படுகிறது, ஒவ்வொரு அடுக்குகளாக மணலை உட்புறமாக இழுத்து அதை கடினமாக்கும் பணியை செய்கிறது தாய் ஆமை.

முட்டை

 'ஆமை நடனம்' முடிந்த பிறகு மீண்டும் துடுப்புகளால் மணலை வாரி இறைத்து அப்படி ஒரு குழி ஏற்படுத்தியதற்கான தடயமே இல்லாமல் செய்கிறது. குழியை விட்டு சில அடிகள் தொலைவு வரைக்கும் அது வந்துபோன தடயமே இல்லாமல் இருக்கிறது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு மீண்டும் கடலை நோக்கித் திரும்பியது நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த ஆமை. அப்பொழுதும்கூட அது ஏற்படுத்திய குழிக்கு நேராகப் பயணிக்காமல் சற்று இடதுபுறமாகத் திரும்பி கடலை நோக்கி விரைந்தது, ஆனால், இந்த முறை வேகமாக நகர்ந்தது. கடல் அலையடிக்கும் இடம் வந்தவுடன் அலை வந்து ஆமை மேல் பட்டவுடன் அதற்கு இன்னும் புத்துணர்ச்சி கிடைத்தது. முன்னோக்கி நகர்ந்தது. தொடர்சியாக அலைகள் வந்து ஆமை மேல் படவும் மின்னல் வேகத்தில் கடலுக்குள் நீந்தித் சென்று மறைந்தது. ஆமை முட்டைகளை சேகரிப்பவர்கள் முட்டையிட்ட இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். கடினமான மணல் பரப்பிற்குக் கீழே முட்டைகள் கொட்டிக்கிடந்தன.

முட்டையோடு வெளிப்படும் திரவம் கிருமிநாசினியாகச் செயல்படுவதால் முட்டைகளின் மேல் இருக்கும் மணலை உதிர்க்காமல் சேகரிக்கிறார்கள். முட்டைகளை எல்லாம் எடுத்த பிறகு ஆமை தோண்டிய இடத்தினுள் கைவைத்துப் பார்த்தால் முழங்கை வரை ஆழம் இருந்தது. ஆமை முட்டையை சேகரிக்க வந்தவர்கள் கூறியதுபோலவே வாய்ப்பகுதி குறுகியும் அதன் பிறகு சற்று பெரிய சுற்றளவுமாக அது ஒரு பானையின் வடிவத்தில் இருந்தது. மொத்தம் 125 முட்டைகள் இட்டிருந்தது ஆமை. அதை ஏற்கெனவே சேகரித்து வைத்திற்கும் முட்டைகளோடு சேர்த்து  பாதுகாத்து குஞ்சு பொறித்த பின்பு மீண்டும் பத்திரமாகக் கடலில் விட்டுவிடுவார்கள். அந்தக் குஞ்சுகள் இனப்பெருக்கத்திற்கான முதிர்ச்சியை எட்டுவதற்கு 10-லிருந்து 13 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு எந்த நிலத்தில் அது பிறந்ததோ, மீண்டும் அதே நிலத்திற்கு வந்துதான் முட்டையிடும். இது இயற்கையாகவே அந்தச் செயல்பாடு மூளையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இயற்கை அதன் அழகை எல்லா இடத்திலும் வெளிப்படுத்தும் என்று கூறிவிட முடியாது அப்படி வெளிப்படுத்தினால் அது நிச்சயமாக ஒரு பேரனுபவமாகத்தான் இருக்கும். எங்களுக்கு அன்று அது கிடைத்தது.

 

.


 


டிரெண்டிங் @ விகடன்