இளநீரில் செடி வளர்க்கலாம்... ப்ளாஸ்டிக்கைத் தவிர்க்க அழகான மாற்றுவழி! | tender coconut can help us to grow plants

வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (15/02/2018)

கடைசி தொடர்பு:19:30 (15/02/2018)

இளநீரில் செடி வளர்க்கலாம்... ப்ளாஸ்டிக்கைத் தவிர்க்க அழகான மாற்றுவழி!

ப்ளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாகும் இளநீர்

திருவாரூரில் உள்ள கலைமணி என்ற இளைஞர் திருவாரூர் சுற்றிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் மரக் கன்றுகளை நட்டு வருகிறார். நடுவது மட்டுமல்லாமல் அதனைத் தொடர்ந்து பராமரித்தும் வருகிறார்.

இவர் இதுவரை 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியிருக்கிறார். இதற்காக  மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய பாலிதீன் பைகளை இதுவரை பயன்படுத்தி வந்தார். இப்போது அதற்கு மாற்றாகத் தேங்காய் இளநீர் குடுவையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது “பிளாஸ்டிக் தவிர்ப்பது இன்றைய சூழ்நிலையில் அவசியமான ஒன்றாக இருக்கு. அந்த வகையிலதான் இந்த முயற்சியும். நர்சரி கார்டன்ல அதிகமா பாலீதின் பைகளை உபயோகப்படுத்துகிறோம். அதற்கு மாற்றா பாலித்தீன் இல்லாம என்ன முறைகளைப் பயன்படுத்தலாம் எனச் சின்னதா யோசிக்குபோது இந்த ஐடியா கிடைச்சது. ஒரு இளநீர் கடையைக் கடந்து செல்லும்போது அங்குக் கொட்டிக்கிடக்கும் இளநீர் குடுவைகளைப் பார்த்தேன். அங்கதான் இந்த ஐடியா ஸ்பார்க் ஆச்சு.

வெட்டிப்போடப்பட்ட இளநீர்களைக் கண்டதும் ஒரு சிந்தனை வந்தது. அருகில் சென்று அந்தக் குடுவையை எடுத்து இதில் கன்று வளப்பதற்கான அமைப்பும் இடமும் உள்ளதா எனப் பார்த்தேன். இருக்குன்னு தோணுச்சு. இளநீர் அடிப்பக்கம் தட்டையாகவும், மண்ணில் வைப்பதற்கு ஏதுவாகவும் இருக்க வேண்டும். செடி வளர்ந்தபிறகு வேர் வெளியே வரும்படியும் அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு தேவையான அளவு சத்தான மண்ணை வைத்தல் செடி வளருவதற்கு ஏதுவாக இருக்கும். செம்மண், வண்டல்மண், மக்கின சாணி இவை அனைத்தையும் நிரப்பித் தண்ணீர் ஊற்றி இரண்டு நாள் வைத்துக் கொள்ளவேண்டும்” என்றார்,

”ஏற்கெனவே விதை இட்டு முளைத்த சிறிய செடியை இளநீர் குடுவையில் ஊன்றிவிடலாம் அவை ஓரளவு வளர்ந்த பிறகு அவற்றை அப்படியே மண்ணில் புதைத்துவிடலாம்” எனக் கூறினார். இதன்மூலம் எந்தெந்தப் பொருள்களில் பிளாஸ்டிகை குறைக்கணுமோ அதையெல்லாம் உடனே செஞ்சுடணும். அதை முயற்சி செய்யும் பொது பூமிக்கு ஒரு நல்ல விஷயம் செய்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்” என முடித்தார் .

இளநீர்

 

இப்போது இந்த இளநீர் ஐடியா வாட்ஸ்அப்பிலும் மற்ற சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. மாடித்தோட்டம் வைத்திருப்பவர்களும் இந்த இளநீர் முறையைப் பின்பற்றலாம். பார்க்கவும் அழகாக இருக்கும்.

மாடித்தோட்டத்தில் செய்ய வேண்டியவை..!

* மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி நன்கு படும் இடமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

*காய்கறித்தோட்டம் போட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தைத் தேடி அலைய வேண்டாம். மனசு வைத்தால் போதும். மொட்டை மாடியில் காய்கறி, மாடிப்படிகளில் கீரை, சன்னல் ஓரங்களில் ரோஜா என்று எல்லாவிதச் செடிகளையும் நடலாம்.
 
*தேங்காய்த் துருவினதும் தூக்கி எறியும் கொட்டாங்குச்சியில் கூடக் கீரை வளர்க்கலாம். தொட்டி, இளநீர் தேங்காய் நேரடியாக நிலத்தில் என எதிலும் செடிகளை வளர்க்கலாம்.

மாடித்தோட்டம் செய்யக்கூடாதவை..!

* கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்
* காய்கறித் தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியைத் தேர்வு செய்யக் கூடாது.
* பைகளை நேரடியாகத் தளத்தில் வைக்கக் கூடாது.
* பைகளைத் தயார் செய்தவுடன் விதைப்பு அல்லது நடவினை மேற்கொள்ளக் கூடாது.
* பைகளை நெருக்கி வைக்கக் கூடாது.


டிரெண்டிங் @ விகடன்