ஐடி நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் புதிய பாணி... ஆட்கள் தேர்வு செய்வது குறைவு! #IT

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வேலைக்கு புதிதாக ஆட்கள் தேர்வுசெய்வதைக் குறைத்து, புதிய பாணியைக் கடைப்பிடித்து நிறுவனத்தின் வருவாயை உயர்த்திவருகின்றன. 

IT

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடந்த 15 ஆண்டுகளாக வேலைவாய்ப்பை அள்ளி வழங்கிவந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக மென்பொருள் நிறுவனங்கள் ஆட்டோமேஷனில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால், புதியதாக வேலைக்கு ஆட்கள் தேர்வுசெய்வது படிப்படியாகக் குறைந்துவந்தது. தற்போது நிறுவனத்தில் ஏற்கெனவே பணியாற்றிவரும் பணியாளர்களுக்குப் புதிய பிரிவுகளின் அடிப்படையில் பயிற்சி வழங்க ஆரம்பித்திருப்பதால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது குறைந்தும், நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கவும் செய்திருக்கிறது. 

`ஆட்களை புதிதாகத் தேர்வுசெய்து பயிற்சியளித்து பணிக்கு அமர்த்துவதற்குப் பதில், ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்குப் பயிற்சி வழங்குவதால் அதிகத்திறன் வாய்ந்த பணியாளர்களாக மாறுவதும், இவர்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை அறிந்தவர்களாக இருப்பதும் நிறுவனத்துக்கு அதிக பலனளிப்பதாக இருக்கிறது' என்கின்றன ஐ.டி நிறுவனங்கள். இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற மென்பொருள் நிறுவனங்கள், கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டைவிட இந்த ஆண்டில் அதிக வருவாயைப் பதிவுசெய்திருக்கின்றன. 

IT

இன்ஃபோசிஸ் நிறுவனம், `அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷனை அறிமுகப்படுத்தி, புதிய துறைகளிலும் வேகமாக வளர்ந்துவரும் பிரிவுகளில் பணியாளர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி இருக்கிறோம். இதன்மூலம், ஒவ்வொரு பணியாளரின் வருவாய் 1.9 சதவிகிதம் அளவுக்குக் கூடியிருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த மூன்று காலாண்டுகளில் நிறுவனத்தின் வருமானம் 6.5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பணியாளர்களைத் தேர்வுசெய்ய நிறையவே யோசித்திருக்கிறோம். ஆனால், இந்த ஆண்டின் நான்கு காலாண்டுகளில் புதியவர்களைத் தேர்வுசெய்வது சிறப்பாகப் பணியாற்றுபவர்களைப் புதிய பிரிவுகளுக்கு மாற்றியும் வருகிறோம். இதன்மூலம், நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளது' என அறிவித்திருக்கிறது. 

இன்போஃசிஸ் நிறுவனத்தின் தலைமை கணக்கு அதிகாரி பிரவீன் ராவ், ``நிறுவனத்துக்குள் குறைந்த பணியாளர்களைச் சேர்த்திருப்பதும் ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களை சரியான வகையில் பயன்படுத்தியிருப்பதும் நிறுவனத்தின் வருவாய் உயர்வுக்கு முதன்மையான காரணம்" என்றார். 

விப்ரோ நிறுவனம், கடந்த ஓராண்டில் 90,000 பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி கொடுத்து, சான்றிதழும் வழங்கியிருக்கிறது. இந்தப் பயிற்சியின் மூலம் ஆட்டோமேஷன் பணியை அதிகரித்திருப்பதாகவும், கடந்த நான்கு காலாண்டுகளில் ஊழியர்களின் வருவாய் 7 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.  

ITகாக்னிஸன்ட் நிறுவனத்தின் சி.இ.ஒ பிரான்சிஸ்கோ டி செளசா, ``கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் பணியாளர்களுக்கு டேட்டா சயின்ஸ், டிசைன் திங்க்கிங், சைபர் செக்யூரிட்டி, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், ஆட்டோமேஷன் போன்ற பிரிவுகளில் பயிற்சி வழங்கியிருக்கிறோம். இந்த ஆண்டிலும் பணியாளர்களுக்கு அதிகளவில் பயிற்சி வழங்கவே பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம்" என்றார்.  

தற்போது மென்பொருள் நிறுவனங்கள் தங்களுடைய தேவைக்குத் தகுந்தாற்போல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆட்களைத் தேர்வுசெய்கின்றன. குறிப்பாக, ``திட்டப்பணிக்குத் தகுந்தாற்போல், அனுபவமும் திறனும் வாய்ந்த பணியாளர்களை மட்டும் தேர்வுசெய்வதால், நிறுவனத்தின் வருமானம் உயர்ந்து வருகிறது'' எனத் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது இன்ஃபோசிஸ் மட்டுமே அதிகளவில் புதியதாக ஆட்களைத் தேர்வுசெய்திருக்கிறது. இந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனம் 3,251 பேரைத் தேர்வுசெய்திருக்கிறது. டி.சி.எஸ் நிறுவனம், கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் 6,978 பேருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கும் வேளையில், இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் 1,667 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. 

IT

டி.சி.எஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் அஜய் முகர்ஜி, ``கடந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 40,000 பேர் மட்டுமே தேர்வுசெய்தோம். ஆனால், இந்த ஆண்டின் நான்கு காலாண்டுகளிலும் சேர்த்து 59,000 பேரை சேர்த்திருக்கிறோம். வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் திட்டங்களுக்குத் தகுந்தாற்போல் முதலீடு செய்யவும், ஆட்கள் தேர்வையும் நடத்திவருகிறோம். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களின் திறனை மேம்படுத்துவதற்குப் பயிற்சிகளையும் வழங்கிவருகிறோம். பயிற்சி வழங்குவதன்மூலம், புதியதாக ஆட்கள் சேர்ப்பதைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம்" என்றார். 

தேசியக் கட்சிகள், 2019-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேலைவாய்ப்பை பிரதானமாக வைத்து பிரசாரம் செய்துவரும் வேளையில்,  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாணி வேலை, வளர்ச்சியின்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!