நம்புங்க… இந்த இயற்பியல் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியது 7 வயது பூனை!

பூனைகள் என்ன செய்யும்? பூனை வளரப்பவர்களிடம் இதைக் கேட்டால், “அது என்னங்க பண்ணுது? சும்மா பாலைக் குடிச்சிட்டு, அங்க இங்க ஓடும். நல்லா தூங்கும். அவ்ளோதான்” என்பார்கள். பூனை, நாய்போல இல்லைதான். நாயைப்போல அன்பு செலுத்தாது, நன்றியுடன் இருக்காது. “எஜமானன், நமக்கு உணவு அளிக்கிறான். அவன் நம் கடவுள்” என்பது நாய்களின் எண்ணம் என்றால், பூனைகளுக்கு, “எனக்கு எஜமானனே உணவு அளிக்கிறான். நான்தான் கடவுள்” என்ற எண்ணம் இருக்கும். பூனைகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களான சிங்கம், புலி, சிறுத்தை போன்று தைரியசாலிகள். எதிரியைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் சீறும் குணம் படைத்தவை. அது சரி, அறிவு? இருக்கிறது. மிருகங்களுக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு இருக்கிறது. ஆனால், ஓர் இயற்பியல் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவிற்கு இருக்கிறதா? அறிவியலின் பல கிளைகளில் கடினமான சிலவற்றுள், இயற்பியலும் ஒன்று. அதில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை பூனை எழுதுவது எல்லாம் எப்படி சாத்தியம்? ஆனால், இருக்கிறது!

பூனை எழுதிய இயற்பியல் ஆராய்ச்சிக் கட்டுரை

2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியில், அமெரிக்காவின் ஃபிஸிக்கல் சொசைட்டி (American Physical Society) ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அந்தச் சமூகத்தின் புதிய கொள்கை ஒன்று, அன்றிலிருந்து அமலுக்கு வருவதாகவும், அதன்படி, பூனைகள் எழுதிய அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்தும் இலவசமாக அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது. 1975-ம் ஆண்டிலேயே பூனை ஒன்று எழுதிய கட்டுரையை அவர்கள் பிரசுரித்ததாகவும், F. D. C. Willard என்று அந்தப் பூனையின் பெயரிலேயே அது வெளியானதாகவும் விளக்கம் அளித்தது. விரைவில், கோரைப்பற்கள் கொண்ட அனைத்து மிருகங்கள் எழுதும் கட்டுரைகளும் பிரசுரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டது.

பதற்றம் அடைய வேண்டாம். அறிவிப்பு வெளியான தேதியைக் கவனியுங்கள். இது ஏப்ரல் ஃபூல் செய்திதான். முட்டாள்கள் தினத்தன்று வந்திருக்கிறது. இந்த அறிவிப்பு வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம். ஆனால், F. D. C. Willard என்ற பூனை எழுதியதாக வந்த கட்டுரை முற்றிலும் உண்மை. இயற்பியலில் இரண்டே பூனைகள்தான் பிரபலமானது. ஒன்று குவாண்டம் இயற்பியலை விளக்கப் பயன்படும் சிந்தனைப் பரிசோதனையில் வரும் ஷ்ரோடிங்கர் பூனை (Schrödinger's cat), மற்றொன்று இந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய பூனை. அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியில் F.D.C.Willard என்று அறியப்பட்டாலும், இதன் இயற்பெயர் செஸ்டர் (Chester). மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் ஜேக் ஹெத்தெரிங்டன் (Jack Hetherington) எழுதிய ஆய்வுக் கட்டுரையில் அவர் பெயருடன் சேர்த்து இந்தப் பூனையின் பெயரும் வெளியானது. ஹீலியம் -3 ஐசோடோப்புகளின் குறைந்த வெப்பநிலை இயற்பியல் குறித்து அலசும் இந்தக் கட்டுரை ஜேக் போன்ற ஆராய்ச்சியாளர் எழுதியிருப்பார் என நிச்சயம் நம்பலாம். நம் செஸ்டர் பூனை எப்படி அவருடன் இணைந்து இதை எழுதியிருக்கும்? யோசிக்கத் தேவையில்லை. ஒரு சின்ன இலக்கணப் பிழையைச் சரி செய்ய மட்டுமே, அந்தப் பூனையின் பெயர், கட்டுரை ஆசிரியரின் பெயருடன் இணைக்கப்பட்டது.

ஜேக் ஹெத்தெரிங்டன் (Jack Hetherington)

இந்த ஆய்வுக் கட்டுரையை ஜேக் முடித்துவிட்டு, அகாடமிக்கு அனுப்பும் தருவாயில்தான் அதில் ஒரு பெரும் இலக்கணப் பிழை இருப்பதை அவருடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் ஆசிரியராக ஜேக் தன் பெயரை மட்டும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், உள்ளே கட்டுரையில், ஒவ்வொரு இடத்திலும், ‘நாங்கள் இந்தப் பரிசோதனையை செய்தோம்’, ‘நாங்கள் இவ்வாறு ஆராய்ந்தோம்’ என்று எல்லாவற்றையும் பன்மை விகுதியில் குறிப்பிட்டிருந்தார். (அதாவது ‘I’ பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘We’ என்றே எழுதியுள்ளார்). இது ஜார்னல் (Journal) விதிமுறைகளின்படி தவறானது. ஆய்வைச் சமர்ப்பிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டதால், இந்தப் பிழையை சரி செய்ய நேரமில்லை. காரணம், இது டைப் செய்யப்பட்ட கட்டுரை. பிழைகளைத் திருத்தி மீண்டும் டைப் செய்ய அவகாசம் போதாது. எனவே, இதைச் சரி செய்ய பல்வேறு வழிமுறைகளை யோசிக்கத் தொடங்கினார் ஜேக். அன்று மாலை, ஜாக்கிற்கு ஒரு யோசனை உதித்தது. தன் உதவியாளரை அழைத்து, ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் பெயரில் தன் வீட்டுப் பூனையின் பெயரையும் சேர்க்கச் சொல்லிவிட்டார்.

F. D. C. Willard/Chester பூனையின் கையொப்பம்பூனையின் பெயர் செஸ்டர் என்றாலும், அதிலும் ஒரு மாற்றம் செய்தார். Felix Domesticus என்பது வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளை குறிக்கும் அறிவியல் பெயர். அதனுடன் செஸ்டர் பூனையின் தந்தை பூனையான வில்லர்ட் (Willard) என்ற பெயரை, பின் பெயராகச் சேர்த்து F. D. C. Willard என்று வைத்துவிட்டார். அது அப்படியே, நவம்பர் 24, 1975-ம் வருடம் பிஸிக்கல் ரிவியூ லெட்டர்ஸின் (Physical Review Letters) 35-வது பதிப்பில் வெளியானது. இந்த விஷயம் அவரின் நண்பர்கள் பலருக்கும் தெரியும் என்பதால், யாரும் எதுவும் கேட்கவில்லை. ஆனால், இந்த உண்மை பெரிய அளவில் வெளியே கசிந்தது, ஒரு மாணவன் செய்த செயலால்தான். அந்த ஆய்வுக் கட்டுரையை படித்துக்கொண்டிருந்த அவன், அதில் சந்தேகம் வரவே, ஜேக்கைச் சந்திக்கச் சென்றிருக்கிறான். அவர் அலுவலகத்தில் இல்லையெனக் கூறப்பட்டதும், ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரான, F. D. C. Willard அவர்களிடமாவது பேச முடியுமா என்று அவன் கேட்க, அனைவரும் சிரித்துள்ளனர். அவனுக்கு உண்மையை அவர்கள் கூற, பின்பு அது எல்லோருக்கும் பரவியது.

சரி, அந்த ஒரு கட்டுரையோடு, நம் செஸ்டர் பூனை அறிவியல் ஆராய்ச்சிகளில் இருந்து விலகிவிட்டதா என்று கேட்டால் அதுதான் இல்லை. அதன் பிறகு, பல வருடங்கள் கழித்து ஹீலியம் 3 குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று பிரெஞ்சு மொழியில், நம் F. D. C. Willard பெயரில் வெளியானது. காரணம், அதை உருவாக்கிய ஆய்வாளர்கள், அவர்கள் செய்த ஆராய்ச்சி குறித்த ஒருமித்த கருத்தை எட்டவே முடியவில்லை. இருந்தும் அதுவரை அவர்கள் செய்த ஆராய்ச்சியைவிட, அவர்களுக்கு மனம் வரவில்லை. எனவே, அதை ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாகத் தொகுத்து ஏதோ ஒரு பெயரில் வெளியிட முடிவு செய்தனர். எதற்கு ஏதோ ஒரு பெயர்? அதுதான் அமெரிக்காவின் புகழ்பெற்ற இயற்பியல் பூனை F. D. C. Willard இருக்கிறாரே என, அதன் பெயரிலேயே வெளியிட்டனர். அது மிகப்பெரிய வெற்றியடைந்து சுமார் 50 முறை பல்வேறு ஆராய்ச்சிகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

பூனை எழுதிய இயற்பியல் ஆராய்ச்சிக் கட்டுரை

நம் செஸ்டர் பூனைக்குப் பிறகு பல்வேறு மிருகங்களின் பெயர்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவரத் தொடங்கின. 1978-ம் ஆண்டு, நோய் எதிர்ப்பியல் வல்லுநர் (Immunologist) பாலி மேட்ஸிங்கர் (Polly Matzinger), தன் செல்லப்பிராணியான ஆப்கன் வேட்டை நாயின் பெயரான கலட்ரியல் மிர்க்வுட் (Galadriel Mirkwood) என்ற பெயரை, தன் கட்டுரையின் இணை ஆசிரியராக இணைத்துக்கொண்டார். சமீபத்தில், 2001-ம் ஆண்டு, கைரோஸ்கோப்கள் (Gyroscope) குறித்து ஆய்வு ஒன்றைச் சமர்ப்பித்த A.K.Geim என்ற ஆராய்ச்சியாளர் H.A.M.S. ter Tisha என்ற பெயரை இணை ஆசிரியராக இணைத்துக்கொண்டார். இது அவர் வளர்த்த வெள்ளெலி ஒன்றின் பெயர்! இதே A.K.Geim அவர்கள்தான், 2010-ம் ஆண்டு கிராஃபீன் (Graphene) கண்டறிய உதவி செய்ததற்காக நோபல் பரிசு பெற்றார்.

என்னமோ போங்க பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!