பிரீமியம் ஸ்டோரி

மீம்ஸ் போடுவது, கலாய்த்து வீடியோ வெளியிடுவது, தாறுமாறாக ஸ்டேட்டஸ் தட்டுவது, வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவது... இவை மட்டும்தான் இணையத்தில் நடக்கின்றனவா என்ன? ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள, அடுத்த தலைமுறைக்கு அறிவூட்டுகிற பல அற்புதங்களும் அங்குதான் தொடர்கின்றன. அப்படி அறிவியல் செய்திகளை மிக, மிக எளிய தமிழில் விளக்கி, யூடியூபில் ஹிட் அடித்திருக்கிறார்கள் இந்த இரு தமிழ் இளைஞர்களும்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் பணிபுரியும் பிரேமானந்த் சேதுராஜன், `லெட்ஸ் மேக் இன்ஜினீயரிங் சிம்பிள் (Lets make engineering simple)' எனும் ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம், பிரபலமாகிவருகிறார். புரிந்துகொள்ளவே சிரமமான இயற்பியல் கோட்பாடுகளில் புகுந்து விளையாடும் இவர், தன் ஆரம்ப வீடியோக்களிலேயே டைம் டிராவல் பற்றி மிக எளிமையாக விளக்கி அசத்துகிறார். விண்வெளி அறிவியல் சார்ந்த வியக்கவைக்கும் பல செய்திகளைக் கூறி, அவற்றை எழுதி, வரைந்து, அனிமேஷன் செய்து விளக்கும் விதமே அத்தனை அழகு. அந்த அறிவியல், பாடப்புத்தக விஷயமாக இல்லாமல் நம் ஒவ்வொருவரின் அன்றாடச் செயல்பாடுகளுடன் இணைத்திருப்பது ஒன்றவைக்கிறது.

அறிவு டோஸ்! - loading

சென்னையும் கடலூரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில், தேங்கி நிற்கும் மழைநீரினால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் குறித்தும், அதில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் இவர் வழங்கிய வீடியோ, வாட்ஸ்அப்பில் ஒரு ரவுண்டு வந்தது.

“என் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தினைக்குளம் என்ற கிராமம். தமிழ் மீடியத்தில்தான் படிச்சேன். எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் முடிச்சேன். படிக்கிற காலத்துல இருந்தே நம் கல்விமுறை மேல், எனக்கு ஒரு ஆதங்கம் இருந்தது.

எல்லாரையும்போல, நல்ல மதிப்பெண் வாங்கிறதுக்காக, கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை மனப்பாடம் செஞ்ச சராசரி மாணவன்தான் நானும். வேலையில் சேர்ந்த அப்புறம்தான், நான் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களுக்குப் பின்னாடிகூட நாம படிச்ச பாடங்கள் ஒளிஞ்சிருக்குனு புரிஞ்சது. நான் கத்துக்கிட்ட பாடங்களைச் செயல்முறைக் கல்வியா சொல்லிக்கொடுத்திருந்தாங்கனா, பொறியியல் படிச்சு முடிச்சப்ப, ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு அறிவோட இருந்திருப்பேன்.

அறிவு டோஸ்! - loading

என் நிலைமை, அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு வரக் கூடாதுங்கிற எண்ணத்துல தொடங்கப்பட்டதுதான், ‘லெட்ஸ் மேக் இன்ஜினீயரிங் சிம்பிள்’. இந்த வீடியோக்களை எல்லாம் தமிழ் மொழியில் பண்றதுக்கான காரணம், மாணவர்களுக்கு தாய்மொழியைப் போல, வேறு எந்த மொழியிலயும் புரியவைக்க முடியாது. என் வீடியோக்களைப் பார்க்கும் மாணவர்கள் மற்றும் சில பொறியியல் பட்டதாரிகளும்கூட, `இந்த விஷயங்கள் எல்லாம் இப்பதான் புரியுது'னு சொல்றாங்க.

நம் கல்விமுறை மாறணும்கிற எண்ணமும், ஏதாவது ஒரு துறை சார்ந்த அறிவும் உங்ககிட்ட இருந்தா, உங்களோட ஆதரவு நிச்சயமா எனக்குத் தேவை. நம்மகிட்ட இருக்கிற செயல்திறன்மிக்க அறிவை, தமிழ்நாட்டு மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்து, அறிவு நிறைந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்கணும்கிறதுதான் என் கனவு” நம்பிக்கையுடன் பேசுகிறார் பிரேமானந்த் சேதுராஜன்.

Lets Make Engineering Simple.

 https://www.youtube.com/user/premanand20081
 
ஜெர்மனியில் உள்ள ம்யூனிக் நகரில் பணிபுரியும் நிரோஷன் தில்லைநாதன், `சைநிரோஷ்' (SciNirosh) என்ற பெயரில் இணையத்தில் பிரபலம். புதன்கிழமைதோறும் யூடியூபிலும் ஃபேஸ்புக்கிலும் வெளிவரும் இவருடைய சைநிரோஷ் ஷோவில், கற்பனைக்கு எட்டாத பல அறிவியல் சாத்தியங்களைப் பற்றி அழகிய இலங்கைத் தமிழில் விளக்குகிறார்.

இவரது யூடியூப் சேனலே ஒரு வீடியோ என்சைக்ளோ பீடியாதான். `அறிவு டோஸ்' எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் சுவாரஸ்யமான அறிவியல் தகவல்களைப் பதிவிட்டு, 1,75,000 லைக்ஸ் குவித்திருக்கிறார்.

`நட்சத்திரங்களைத் தொட முடியுமா?', `இறந்த பின்னும் வாழ முடியுமா?', `சூரியன் இறந்தால் பூமி என்னாகும்?' என இவரது வீடியோக்களின் தலைப்பே நம்மைக் கவர்ந்து இழுக்கக்கூடிய வசீகரம் மிக்கது. க்ளிக்கினால், அதைவிட வசீகரமாக, அந்தத் தலைப்பை ஒட்டி நாம் யோசித்திராத பல கேள்விகளுக்கு, படங்கள் மற்றும் அனிமேஷன் உதவியுடன் விடையளித்து, வியப்பில் ஆழ்த்துகிறார்.

அறிவு டோஸ்! - loading

பிரேமானந்த் சேதுராஜன்

“நான் இலங்கை, திரிகோணமலையில் பிறந்து, இரண்டு மாதங்களிலேயே பெற்றோருடன் ஜெர்மனிக்கு வந்துவிட்டேன். வீட்டில் தமிழ் பேச வேண்டும் என பெற்றோர் இட்ட எழுதாத சட்டத்தால், தமிழில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அறிவியல் புதுமைகளையும் நுணுக்கங்களையும் இணையதளத்தில், ஆங்கிலம் அல்லது வேறு சில மொழிகளில்தான் அறிந்துகொள்ள முடிந்ததே தவிர, தமிழில் அறிவியல் தளங்கள் அதிகமாக இல்லை. ஆகையால், நான் கற்றவற்றை தமிழ் மக்களிடம் கொண்டுசெல்ல, தமிழில் சிறுசிறு அறிவியல் கட்டுரைகளை முகநூலில் பதிவிட்டேன். அதற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக, 2014-ம் ஆண்டு, ‘அறிவு டோஸ்’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கினேன். எனது ஆக்கங்கள் நிறையப் பேரைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில், ‘The SciNirosh Show – விரல் நுனியில் அறிவியல் உலகம்’ எனும் வீடியோ அறிவியல் நிகழ்ச்சியைத் தொடங்கினேன்.

இதன் தயாரிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற அனைத்தையும் நானே செய்கிறேன். சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கும்போது, அறிவியல் மற்றும் பொது அறிவை வளர்ப்பதற்கு ரசிகர்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளேன்” என்கிறார் நிரோஷன்.

படித்த இளைஞர்கள், தங்கள் அறிவை சமூகத்துக்காக எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு இந்த இரண்டு இளைஞர்களும் முன்மாதிரிகள். இன்னும் நூற்றுக்கணக்கானோர் இணையவெளியில் இயங்கிக்கொண்டிருக் கின்றனர். இவர்களின் அறிவியல் விளக்க வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, தமிழகப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காட்சிப்படுத்துவதே இப்போதைய உடனடித் தேவை.
அறிவியலை விளக்கும் பணியை சிலர் செய்தால், அந்த அறிவைப் பரப்பும் பணியை நாம் செய்வோம்.

Sci Nirosh Channel. https://www.youtube.com/channel/UCXyjvlbJA5CmHFq7iQgjslw

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு