Election bannerElection banner
Published:Updated:

பாகிஸ்தானின் கௌரவம்!

பாகிஸ்தானின் கௌரவம்!
பாகிஸ்தானின் கௌரவம்!

அதிஷா

பா, பாய்ந்து ஓடும் ஆற்றின் ஓரத்தில் அமைதியாக அசையும் கோரைப்புற்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மிதந்து கொண்டிருந்தாள். வலியுடன் காத்திருந்தாள். கொஞ்சம் வெளிச்சம் வந்தபோது ஆற்றில் இருந்து மெதுவாக நீந்தி நகர்ந்து கரைக்கு வந்துசேர்ந்தாள். உச்சி முதல் பாதம் வரை வீக்கமும் வேதனைகளும் நிறைந்து இருந்தன. நடக்க முடியவில்லை. ஆனால், அவளுடைய ஒவ்வோர் அணுவிலும் உயிர்பிழைக்க வேண்டும் என்ற வெறி உக்கிரமாக இருந்தது. முந்தைய நாள் இரவு நடந்தவை எல்லாம் கண்களின் முன்னர் கனவுபோல வந்து மறைந்தன.

அந்த இரவில், அவளை இருபது பேர் சூழ்ந்துகொண்டு அடித்து உதைத்தனர். எங்கு இருந்து யார் அடிக்கிறார்கள் எனத் தெரியாத அளவுக்கு சரமாரியாக அடி விழுந்தது. அதில் சபாவின் அப்பாவும் இருந்தார். அவர்தான் அவளுடைய முகத்தில் காறி உமிழ்ந்தார். சபாவை நான்கு பேர் இறுக்கிப் பிடித்துக்கொள்ள, அவர்தான் ஒரு துப்பாக்கியால் அவளுடைய முகத்தில் சுடுகிறார். மூளைக்குள் பாய்ந்திருக்கவேண்டிய குண்டு, எதிர்பாராத தலை அசைவால் கன்னத்தில் புகுந்து வெளியேறியது. மயங்கி விழுந்த சபாவை, செத்துவிட்டதாக நினைத்து ஒரு சாக்குப்பையில் போட்டு ஆற்றில் தூக்கி எறிந்தனர். ஆனால், சபா கோரைப்புற்களைப் பிடித்துக்கொண்டு உயிர் தப்பினாள். சபாவுக்கு வயது 19. செய்த தவறு... காதலித்தது.

பாகிஸ்தானின் கௌரவம்!
பாகிஸ்தானின் கௌரவம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்துப் பெண். அவளுக்குத் திருமணம் செய்ய ஓர் இளைஞனைப் பார்த்துத் தீர்மானிக்கிறது குடும்பம். அந்த இளைஞனோடு தினமும் பேசுவது, பழகுவது என தனக்குள் ஒரு காதலை வளர்த்துக்கொண்டாள் சபா. திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் சபாவின் குடும்பத்தினர், `அந்தப் பையன் ரொம்ப ஏழை' எனக் கூறி, திருமணத்தை நிறுத்திவிட்டனர். ஆனால், சபாவால் அந்த இளைஞனை மறக்க முடியவில்லை. அதனால் இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, ஓடிப்போகிறார்கள்.

பாகிஸ்தானின் கௌரவம்!
பாகிஸ்தானின் கௌரவம்!

அதை ஏற்கமுடியாத சபாவின் குடும்பத்தினர், அவரை பிடித்து அடித்து உதைத்து, கொலைசெய்யத் தீர்மானிக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக சபா உயிர்தப்புகிறார். கௌரவத்தைக் காரணம் காட்டி பாகிஸ்தானில் கொலை செய்யப்படும் ஆயிரக்கணக்கான பெண்களை அவர்தான் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார். சபாவின் கதை, பாகிஸ்தானைச் சேர்ந்த இயக்குநர் ஷர்மீன் ஒபெய்டு-சினாய்க்கு ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ஷர்மீன் ஒபெய்டு-சினாய், பாகிஸ்தானை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர். 2012-ம் ஆண்டில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி இவர் எடுத்த ‘சேவிங் ஃபேஸ்’ படம் சிறந்த குறு ஆவணப்படத்துக்கான ஆஸ்கரை வென்றது. இப்போது ‘ஏ கேர்ள் இன் தி ரிவர்: தி பிரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்’ படத்தின் மூலம் இரண்டாவது ஆஸ்கரையும் வாங்கியிருக்கிறார்.

பாகிஸ்தானின் கௌரவம்!
பாகிஸ்தானின் கௌரவம்!

இந்தியாவைப் போலவே, பாகிஸ்தானிலும் பெண்களும் சிறுமிகளும் தங்களுடைய அப்பா, அண்ணன், கணவன், மாமனார் என குடும்பத்து ஆண்களால் கௌரவத்தின் பெயரால் கொல்லப்படுவது ரொம்பவே சகஜம். காதலித்தால், மற்ற ஆண்களோடு பேசினால், மேற்படிப்பு படிக்க விரும்பினால், தனியாகத் தொழில் செய்தால் என, பாகிஸ்தான் ஆண்களின் கௌரவத்தைக் குலைக்கிற செயல்கள் ஏராளம் உண்டு. இப்படி கௌரவக் கொலை செய்தவர்களை, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பம் மன்னிப்பதாகக் கூறிவிட்டால், அவர்களுக்கு எந்தத் தண்டனையும் வழங்கக் கூடாது என்கிற மோசமான ‘மன்னிப்புச் சட்டம்’ அங்கே அமலில் இருக்கிறது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரம் பேர் வரை இறந்துபோகிறார்கள்.

ஷர்மீன் எடுத்த படத்தின் மூலம், அந்த மோசமான ‘மன்னிப்புச் சட்டம்' நீக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்கர் மேடையில் ஷர்மீன் கூறியது இதுதான், ‘உறுதியான பெண்கள் ஒன்றுசேர்ந்தால் எதையும் நிகழ்த்திக் காட்டலாம்!'

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு