Published:Updated:

தூய்மை விழிப்புஉணர்வுக்காக ஒரு லட்சம் தபால் அட்டை வெளியீடு! திருச்சி மாநகராட்சி அசத்தல்

சி.ய.ஆனந்தகுமார்
தூய்மை விழிப்புஉணர்வுக்காக ஒரு லட்சம் தபால் அட்டை வெளியீடு! திருச்சி மாநகராட்சி அசத்தல்
தூய்மை விழிப்புஉணர்வுக்காக ஒரு லட்சம் தபால் அட்டை வெளியீடு! திருச்சி மாநகராட்சி அசத்தல்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் 6-வது தூய்மை நகரமாக திருச்சி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டிலும் தூய்மை நகர வரிசைப்பட்டியலில் சிறப்பான இடத்தைப் பெற அனைத்து நடவடிக்கைகளும் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக முதலிடம் நோக்கி, ஆவணப்படம், லோகோ, தூதுவர்கள் நியமனம், பிளாஸ்டிக் தடை என அதிரடிகள் தொடர்ந்து வருகின்றன.  

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தூய்மை விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இருவண்ணக் குப்பைத்தொட்டியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவது குறித்தும் தபால் நிலையங்களில் விநியோகம் செய்யப்படும் ஒரு லட்சம் தபால் அட்டைகளை திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நகரப்பொறியாளர் அமுதவல்லி, அஞ்சல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், உதவி இயக்குநர் குஞ்சிதபாதம் ஆகியோர் முன்னிலையில் வெளியிட அதை மத்திய மண்டல அஞ்சல்துறை இயக்குநர் தாமஸ் லூர்துராஜ் பெற்றுக்கொண்டார். இந்த ஒரு லட்சம் தபால் அட்டைகளில் தூய்மை விழிப்புஉணர்வு குறித்து அச்சிடப்பட்டுள்ளது, மேலும் இந்த அஞ்சல் அட்டைகள் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விநியோகிக்கப்படும். தூய்மை இந்தியா திட்டங்கள் சார்பாகக் கேட்கப்படும் வினாக்களுக்கு தக்க கருத்துக்களைத் தெரிவித்து திருச்சி மாநகராட்சியை தூய்மை நகரங்களின் கணக்கெடுப்பு பட்டியலில் முன்னிலை வகிப்பதற்கு ஒப்புதல் வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.