சூழலியலைக் காப்பாற்ற நடத்தப்படும் சர்வதேசத் திரைப்பட விழா!

திரைப்படங்கள், இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய கலைவடிவங்கள். இவை, உலகின் பல்வேறு நாடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளன. பொழுதுபோக்குக்காக மட்டுமே அல்லாமல், சமூக மேம்பாட்டுக்கான கலை வடிவங்களாகவும் பல நாடுகளில் திரைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரசின் திட்டங்களை விமர்சித்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மக்களுக்கு அவர்கள் வாழும் தேசத்தின் உண்மை நிலை குறித்தான மறைக்கப்பட்ட பக்கங்களைத் திரைப்படங்கள் காட்சிப்படுத்தியுள்ளன.

இத்தகைய அம்சத்துடன் வெளிவரும் சிறந்த திரைப்படம், அந்த நாட்டில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பல்வேறு திரைப்பட விழாக்கள் உலகெங்கிலும் நடைபெறுகின்றன. அது, நல்லதோர் உரையாடலுக்கு வழிவகை செய்யும். 

திரைப்பட விழா

சென்னை லயோலா கல்லூரியின் ஓர் அங்கமாக, லயோலா தொழிற்முறை தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியில், ஒரு வருட டிப்ளோமா படிப்பாக சினிமா சார்ந்த தொழில்நுட்பப் படிப்புகள் உள்ளன; ஆண்டுதோறும் திரைப்பட விழாவும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திரைப்பட விழாவானது, பிப்ரவரி 20-ம் தேதியிலிருந்து 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முழுக்க முழுக்க சூழலியல் சார்ந்த திரைப்படங்களே திரையிடப்படுகின்றன. இந்தத் திரைப்பட விழாவை, இந்தக் கல்லூரியுடன் இணைந்து சூழலியல் சார்ந்து இயங்கிவரும் `பூவுலகின் நண்பர்கள்' குழுவினர் ஒருங்கிணைத்துள்ளனர்.

சூழலியல் மற்றும் இயற்கை சார்ந்த விழிப்புஉணர்வு, தற்போது பல தரப்பினராலும் ஏற்படுத்தப்படுகிறது. அந்த அளவுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் தனது வளத்தை, குறிப்பாக நீர் ஆதாரத்தை இழந்துள்ளது.  இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் சமீபத்தில் விளையாடிய தொடரில் நீர் கட்டுப்பாடு விதித்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இங்கு மட்டுமல்ல, நமது ஊர்களிலும் நீர்வளம் குறைந்து விவசாய நிலங்கள் அழிந்துவருவதை தினமும் நாம் கடந்து வந்திருப்போம். கடந்த பத்து ஆண்டுகளில் மிகத் தீவிரமான முறையில் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புஉணர்வும், இயற்கையை நோக்கி நாம் நகரவேண்டிய அவசியத்தையும் பல சூழலியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

சூழலியல் சார்ந்து நடத்தப்படும் இந்த  விழா குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளருடன் பேசினேன்...

``இந்தத் திரைப்பட விழா, பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 20-வது வருடம் என்பதால், அதை இன்னும் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த வருடம் லயோலா கல்லூரியில் நடத்த, அனைத்து விழாக்களிலும் சூழலியல் சார்ந்த முன்னெடுப்புகளை எடுத்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக இந்த விழாவிலும் சூழலியல் சார்ந்த கதை அமைப்புடைய திரைப்படங்களைத் திரையிடுகிறோம். இந்தத் திரைப்பட விழாவில் ஏழு உலகத் திரைப்படங்களும், நான்கு இந்தியத் திரைப்படங்களும், ஆறு குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயற்கை மற்றும் சூழலியல் சார்ந்த திரைப்படங்களே!

இவை தவிர, நான்கு ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் நம்மாழ்வார் பற்றிய ஆவணப்படமும் ஒன்று. இதுமட்டுமின்றி, திருவண்ணாமலையில் வீடு கட்டிக்கொள்ளாமலேயே வாழ்ந்துவரும் காயத்ரி கோம்ஸ் என்கிற பெண்மணி பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படவுள்ளது. சோளக்காடுகளைப் பற்றிய ஓர் ஆவணப்படமும் திரையிடப்படுகிறது'' என்றார். 

இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இலக்கியம் மற்றும் கலை  கலாசாரத் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொள்கின்றனர்.

அதில் நாமும் பங்கேற்போம்... திரைக்கலையைப் பழகுவோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!