சிக்கன்கரி, 5,000 தையல் கொண்ட கசூத்தி... முகலாயர்கள் காலத்திலிருந்து இன்று வரை... எம்ப்ராய்டரி அப்டேட்! #Embroidery | History of famous embroidery designs

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (19/02/2018)

கடைசி தொடர்பு:08:12 (19/02/2018)

சிக்கன்கரி, 5,000 தையல் கொண்ட கசூத்தி... முகலாயர்கள் காலத்திலிருந்து இன்று வரை... எம்ப்ராய்டரி அப்டேட்! #Embroidery

ஊசி நூலை வைத்து பல கதைகளைச் சித்திரப்படுத்தும் கலை `எம்ப்ராய்டரி'. எண்ணற்ற கலை, கலாசாரங்களை உள்ளடக்கிய நாடு, இந்தியா. நடனம், இசை, ஓவியம் எனப் பல்வேறு கலைகளில் முதன்மையாய் விளங்கும் நம் நாட்டின் பிரதானக் கலைகளில் முக்கியமான ஒன்று கைவினைத்தொழில். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவத்தைப் பதித்து, வித்தியாசமான எம்ப்ராய்டரி டிசைன்களை வழங்கிக்கொண்டிருக்கிறது ஆடை உலகம்.

முத்துமணிகள், பீட்ஸ் (Beads), சீக்வன்ஸ், Quills முதலியவற்றைக்கொண்டும், கலாசாரத்தன்மை மாறாமலும் தற்போது எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. துணிகளில் மட்டுமல்லாமல், ஹேண்ட்பேக், கோட், தொப்பி, போர்வை என இணை ஆபரணங்களும் எம்ப்ராய்டரி வழியே அலங்கரிக்கப்படுகிறது. பெரும்பாலான எம்ப்ராய்டரி டிசைன்கள், முகலாயர்களின் வருகைக்குப்  பிறகே பின்பற்றப்பட்டன.

வளமான கலாசாரம் மற்றும் பாரம்பர்யத்தைப் போற்றும்விதமாக, வெவ்வேறு மாநிலங்களில் தோன்றிய `எம்ப்ராய்டரி' வேலைப்பாடுகளின் தொகுப்பு...

எம்ப்ராய்டரி

ஆரி (Aari):

12-ம் நூற்றாண்டில் காஷ்மீர், கட்ச், லக்னோ முதலிய இடங்களில் பின்பற்றப்பட எம்ப்ராய்டரி வகை `ஆரி'. இது `க்ரூவல்' (Crewel) எனும் நீளமான கொக்கி முனைகொண்ட ஊசியை வைத்து சிக்கலான வேலைப்பாடுகளைக்கொண்டது. முதலில் முகலாயர்களின் உருவங்கள், சிற்பங்கள் போன்றவற்றைத் தையலிட்டனர். பிறகு, காலத்துக்கு ஏற்ப டிசைன்களும் நிறங்களும் மாற்றியமைப்பட்டன. ஜரி காட்டன் அல்லது பட்டுநூல்தான் ஆரி வேலைப்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் வேலைப்பாடு, அடர்த்தியான மோட்டீஃப் (Motif) கொண்டது. பிரகாசமான வண்ணங்களால் அலங்காரப்படுத்துவதால் இதன் வேலைப்பாடு மிக யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

சிக்கன்கரி (Chikankari):

முகலாய மன்னன் ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹானால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்த சிக்கன்கரி எம்ப்ராய்டரி வேலைப்பாடு, கி.பி.3-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கப் பயணி மெகஸ்தன் இந்தியாவைப் பற்றிக் கூறுகையில் `சிக்கன்கரி' வேலைப்பாடுகளையும் குறிப்பிட்டுள்ளார். பூக்கள் மற்றும் விலங்குகளின் உருவங்களைக்கொண்டு டிசைன் செய்யப்படும் இந்த சிக்கன்கரி எம்ப்ராய்டரி, பெரும்பாலும் வெள்ளை நூல்களைக்கொண்டுதான் பூ  தையலிடுவார்கள். ஆனால், தற்போது பல வண்ணங்களில் டிசைன் செய்யப்படுகிறது. லக்னோவைப் பூர்விகமாகக்கொண்ட சிக்கன்கரி எம்ப்ராய்டரியை, 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புவியியல் குறிப்பானாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chikankari

கோட்டா (Gotta):

ராஜஸ்தானில் தோன்றிய `கோட்டா' வேலைப்பாடு, ஒருவகையான மெட்டல் எம்ப்ராய்டரி. `அப்ளிக்' எனும் தொழில்நுட்பத்தைக்கொண்டு செய்யப்படும் இந்த எம்ப்ராய்டரியில் சில்வர், கோல்டு, வெண்கலம் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பெரும்பாலும் ஆடையின் விளிம்புகளிலேயே டிசைன் செய்யப்படும் மிக கனமான வேலைப்பாடு. இந்த கோட்டா எம்ப்ராய்டரியை டிசைனர் புடவை, லெஹெங்கா சோலி, குஷன் கவர் போன்றவற்றில் தையலிடலாம். பூக்கள், பறவை, விலங்கு, மனித உருவங்களை இந்த கோட்டா வேலைப்பாடுகள் மூலம் ஆடைகளில் தையலிடலாம்.

Gotta

புல்காரி (Phulkari):

`பூக்கள் நிறைந்த வேலைப்பாடு' எனும் அர்த்தம்கொண்ட `புல்காரி எம்ப்ராய்டரி', பஞ்சாப்பில் தோன்றியது. துணியின் மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இதன் வேலைப்பாடு, விளிம்பு வரை பூக்கள் வடிவமைப்பைக்கொண்டு தையலிடப்படும். இது துணியின் அடிப்பக்கத்தில் பின்னப்படும். கனமான காட்டன் துணிகளில், பட்டுநூல்கொண்டு எம்ப்ராய்டரி செய்யப்படும் இந்த டிசைனின் ஸ்பெஷாலிட்டி, சிவப்பு வண்ணம்தான். அதிகப்படியான புல்காரி டிசைன் சிவப்பு, மஞ்சள் காம்பினேஷனில்தான் தயாராகிறது. துப்பட்டா, ஸ்வெட்டர் முதலிய இணை ஆடைகளில் அதிகம் காணலாம்.

ஃபுல்காரி

By Hiart | Wikimedia Commons

கசூத்தி (Kasuti):

கர்நாடக நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான `கசூத்தி' எம்ப்ராய்டரி, சுமார் 5000 கை தையல்களைக்கொண்டது. புடவை, குர்த்தா போன்ற ஆடைகளில் இந்த வேலைப்பாட்டை அதிகம் காணலாம். இது சாளுக்கியர்களால் பரவப்பட்ட `வேலைப்பாடு' என்ற வரலாறு உண்டு. காட்டன் துணியில், கண்ணாடி வேலைப்பாடு, கோல்டு மற்றும் சில்வர் நிற நூலைக்கொண்டு பின்னும் டிசைன் என ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன. திருமண நாள்களில், கர்நாடக மணப்பெண்கள் உடுத்தும் உடைகளில் கசூத்தி வேலைப்பாடு இல்லாமல் இருக்காது. இது மிகவும் காஸ்ட்லியான வெளிப்பாடும்கூட.

கசூத்தி

By Qypchak | WikimediaCommons

இதுபோல் ஏராளமான அழகான வேலைப்பாடு நிறைந்த ஆடைகள், மற்ற நாடுகளைவிட இந்தியாவில் அதிகம் காணலாம்.


டிரெண்டிங் @ விகடன்