Published:Updated:

கின்னஸ் சாதனையைக் குறிவைக்கும் யோகா கில்லி பாவனாஸ்ரீ!

சி.ய.ஆனந்தகுமார்
கின்னஸ் சாதனையைக் குறிவைக்கும் யோகா கில்லி  பாவனாஸ்ரீ!
கின்னஸ் சாதனையைக் குறிவைக்கும் யோகா கில்லி பாவனாஸ்ரீ!

மாணவி எஸ்.பி.பாவனாஸ்ரீ, திருச்சி தூய வளனார் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர், சிறு வயதிலிருந்தே, யோகா மீது கொண்ட ஆர்வத்தினால், முறையாகப் பயிற்சிபெற்று பல்வேறு ஆசனங்களைச் செய்ய ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக பாவனாஶ்ரீ 4 டம்ளர்களில் 30 நிமிடம் இடைவிடாது பத்மாசனம் செய்யும் முயற்சியில்  இறங்கினார்.

அடுத்தடுத்த அவரின் முயற்சிகள் அவருக்கு கைகொடுக்க, உலக சாதனைகளுக்கான பதஞ்சலி புத்தகத்தில் இடம்பெறுவதற்கான நிகழ்ச்சியைக் கடந்த சனிக்கிழமை திருச்சியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் கிங்ஸ்லி ஜெபக்குமார், ருத்ர சாந்தி யோகாலய குரு கிருஷ்ணகுமார், பிஷப் ஹீபர் கல்லூரி கணித காப்பீட்டு அறிவியல் துறைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அதன் தொடர்ச்சியாக, இந்த நிகழ்ச்சிக்கு 'பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு' புத்தகத்தின் முதன்மை நடுவர், முனைவர் எம்.ஆர்.அசோகன், மாணவி பாவனாஶ்ரீயின் செய்முறைகளைக் கவனித்து, சாதனைக்கான நேரத்தைக் கணக்கிட்டார்.

பாவனாஶ்ரீ, 4 சில்வர் டம்ளர்களை வைத்து, அதில் 30 நிமிடங்கள் அமர்ந்து பத்மாசனம் செய்து சாதனை புரிந்தார். இறுதியாக, பாவனாஶ்ரீக்கு 'பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு' சாதனை புத்தகத்தில் இடம்பெற்று பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழும் மாணவி பாவனாஶ்ரீயிடம் வழங்கப்பட்டது.

சாதனை புரிந்த பாவனாஶ்ரீ, 'சிறு வயதில் இருந்தே எனக்கு யோகாமீது ஆர்வம் அதிகமானது. என்னுடைய ஆர்வத்துக்கு என்னோட பெற்றோர் உறுதுணையாக இருந்தாங்க. அவர்கள் தந்த ஊக்கத்தினால்தான் என்னால் இந்தச் சாதனையை நிகழ்த்த முடிந்தது. தொடர்ந்து பயிற்சி எடுத்து, நான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, சாதனை நிகழ்த்திக்காட்டணும் அதுவே எனது லட்சியம்' என்றார்.