Published:Updated:

இன்னும் 64 தமிழர்களின் கதி என்ன?- செம்மரக் கடத்தல் மர்மங்கள்

வீ கே.ரமேஷ்
இன்னும் 64 தமிழர்களின் கதி என்ன?- செம்மரக் கடத்தல் மர்மங்கள்
இன்னும் 64 தமிழர்களின் கதி என்ன?- செம்மரக் கடத்தல் மர்மங்கள்

ஆந்திராவின் கடப்பா வனப்பகுதியில் உள்ள ஒன்டிமெட்டா  ஏரியில், 5 தமிழகப் பழங்குடியின மக்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கும் நிலையில், மேலும் 64 பேரை காணவில்லை என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபற்றி அரூர் முன்னாள் எம்.எல்.ஏ-வும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான டில்லி பாபு, ' கல்வராயன் மலைப் பகுதியிலிருந்து வையாபுரியின் மகன் முருகேசன்  தப்பி வந்திருக்கிறார். இவரிடம் விசாரித்தபோது 5 நாள்களுக்கு முன்பு  70 பேரை கூட்டிச் சென்றதாகவும், இவர்களைக் கூட்டிச் சென்றவர்கள் 2 நாள்களாக சோறு தண்ணீர் தராமல் கடப்பா வனப்பகுதியிலேயே அமர வைக்கப்பட்டதாகவும் பசி தாங்க முடியாமல் அனைவரும் ஊருக்குத் திரும்பி வந்தபோது, ஆந்திரா வனத்துறையினர் 69 பேரை பிடித்ததாகவும், அதில் முருகேசன் மட்டும் தப்பி வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆந்திர வனத்துறையினர், என்கவுன்டர் செய்தால் சட்டச் சிக்கல்  வரும் என்பதால், ஐந்து பேரை நீரில் முக்கிக் கொன்றிருக்கிறார்கள். இன்னும் 64 பேரை வைத்திருக்கிறார்களா இல்லை, கொன்றுவிட்டார்களா என்று தெரியவில்லை. ஆந்திராவைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் கொள்ளைக்காரர்கள்தான் தமிழகப் பழங்குடியின மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அழைத்துச் செல்கிறார்கள்.  அவர்கள்மீது ஆந்திர அரசு இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இதுபோன்ற தொழிலுக்கு பழங்குடிகள் செல்லக்  காரணம், கடந்த 10 ஆண்டுகளாக மலைகளில் கடும் வறட்சி நிலவுவதும், கூலி வேலை குறைந்ததும்தான். 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் மலைகளில் இல்லாததாலும், வன உரிமைச் சட்டத்தின்மூலம் இவர்களுக்கு நிலம் வழங்காததாலும், கண் முன் கதறும் குழந்தைகளின் பசியை எந்த தொழில் செய்தாவது காப்பாற்ற வேண்டும் என்ற இவர்களின் இயலாமையைக் கொள்ளையர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். 
 
இதுபோன்ற படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து உண்மையான குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு, பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு முனைப்புக் காட்ட வேண்டும்' என்றார்.