Published:Updated:

மரங்களையும் விட்டுவைக்காத விளம்பர மோகம்...! கடிவாளம் போடுமா அரசு?

குருபிரசாத்
மரங்களையும் விட்டுவைக்காத விளம்பர மோகம்...! கடிவாளம் போடுமா அரசு?
மரங்களையும் விட்டுவைக்காத விளம்பர மோகம்...! கடிவாளம் போடுமா அரசு?

கல்வி நிறுவனங்கள் முதல் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர்கள் வரை அனைத்துக்கும் விளம்பரங்கள் தேவைப்படுகின்றன. டிஜிட்டல் யுகத்தில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைதளங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இத்தனை சமூகவலைதளங்கள் வந்துவிட்டபோதும், இயற்கையை நாம் நிம்மதியாய் இருக்கவிடுவதில்லை.

நம் நாட்டில் உள்ள எந்த மரங்களிலும் விளம்பரம் வைக்க அனுமதி இல்லை. ஆனால், அதை மீறி தமிழகம் முழுவதுமே மரங்களில் ஆணி அடித்து, விளம்பரம் செய்து வருகின்றனர். இதற்கு தமிழகத்தில் எந்த மாநிலத்துக்கும் விலக்கு இல்லை. குறிப்பாக, கோவையிலும் மரங்களில் விளம்பர அட்டைகளை பதிப்பது நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. வடவள்ளி, சௌரிபாளையம், சரவணம்பட்டி, நெடுஞ்சாலைகள் என்று எந்த மரங்களையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை.

இதுகுறித்து ஒசை அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சையது கூறுகையில்,"மரத்துக்கும் உயிர் உள்ளது என்பதை நாம்

உணர வேண்டும். மரங்களுக்கும் உணர்வுகள் உள்ளன. ஆனால், அதையும் பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாகப் பார்க்கும் சூழ்நிலை வந்துவிட்டது. நமது அடுத்த தலைமுறையின் மூச்சுக் காற்றே இந்த மரங்கள்தாம். மரங்களின் தேவைகளையும், பலன்களையும் எடுத்துக்கூறவேண்டிய கல்வி நிறுவனங்களே, மரங்களில் விளம்பரம் வைக்கின்றன.

இது தொடர்பான வழக்கில், மரங்களில் விளம்பரம் வைக்க, சட்டப்படி யாருக்கும் அனுமதி கிடையாது. மீறினால், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் முதல் சிறை தண்டனை வரை வழங்கலாம் என திருப்பூர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதையும் மீறித்தான் விளம்பரங்கள் வைக்கப்பட்டுவருகின்றன. எனவே, அரசு இந்த விவகாரத்தை முழுமையாக கையில் எடுத்து தீர்வுகாண வேண்டும். பொது மக்களுக்கும் இயற்கை மீது அக்கறை வேண்டும். அப்போதுதான் இதை முழுமையாக மாற்ற முடியும்" என்றார்.

பொதுவாக, விளம்பரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வைக்கின்றன. இதுதவிர, விளம்பரங்களுக்கென்ற ஒரு நெட்வொர்க் இயங்கி வருகிறது. சம்பந்தப்பட்ட நெட்வொர்க்கிடம் காசுகொடுத்துவிட்டால் போதும், விளம்பரப் பணிகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தற்போது, மரங்களில் விளம்பரம் வைப்பது இதுபோன்ற நெட்வொர்க்குகள்தாம். இது மட்டுமல்லாமல், கிளைகளை வெட்டுகிறோம் என்று அனுமதி வாங்கிவிட்டு மரங்களையே வெட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மரங்களை கண்காணித்து, பாதுகாக்கவேண்டியது வருவாய் துறையினரின் பொறுப்பு. இதுதொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டோம், "விளம்பரம் வைப்பது எல்லாம் மாநகராட்சிக்கு கீழ்தான் வரும். எனவே, நீங்கள் அவர்களிடம் கேளுங்கள். இதுகுறித்து நாங்களும் அவர்களிடம் சொல்கிறோம்" என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டோம், "மரங்களில் விளம்பரம் வைத்ததற்கு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இதனால், கொஞ்சம் சைலன்ட்டாக இருந்தவர்கள், இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் பகுதிகள் தொடர்பாக எங்களது கவனத்துக்குக் கொண்டு வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றனர்.

மரங்களில் விளம்பர அட்டைகள் வைத்த சில நிறுவனங்களை தொடர்பு கொண்டோம். “சார் நாங்க வைக்கல. இதுக்காக சில நிறுவனங்கள் இருக்குங்க. என்னனு விசாரிச்சுட்டு எடுத்தடறோம்” என்றனர். சிலர், “இதனால் பொது மக்களுக்கும், உங்களுக்கும் என்ன பிரச்னை?” என்று நம்மிடம் கேட்டனர். நாம் நிலவரத்தை எடுத்துச் சொன்னவுடன், “சரி பார்த்துக்கறோம்” என்று இணைப்பைத் துண்டித்தனர்.