Published:Updated:

பணத்தைத் திருப்பித்தர மறுக்கும் சிட்ஃபண்ட்ஸ் நிறுவனம்: பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

குருபிரசாத்
பணத்தைத் திருப்பித்தர மறுக்கும் சிட்ஃபண்ட்ஸ் நிறுவனம்: பாதிக்கப்பட்டவர்கள் புகார்!
பணத்தைத் திருப்பித்தர மறுக்கும் சிட்ஃபண்ட்ஸ் நிறுவனம்: பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

சிட்ஃபண்ட்ஸ் நடத்தி பணம் தர மறுக்கும், ஶ்ரீ கோகுல ஜெயம் சிட்ஃபண்ட்ஸ் குறித்து, போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

கோவை, சாய்பாபா காலனியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஶ்ரீ கோகுல ஜெயம் சிட்ஃபண்ட்ஸ்.  கோவையில், இந்த நிறுவனத்துக்கு பல்வேறு கிளைகள் உள்ளன. மேலும், திருப்பூர் மற்றும் ஈரோட்டிலும் இதற்குக் கிளைகள் உள்ளன. இந்நிலையில், இந்த நிறுவனத்தில் பணம் கட்டிய, பெரும்பாலான பொதுமக்களுக்கு, அந்த நிறுவனம் பணத்தை சரியாகக் கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களில் 15-க்கும் மேற்பட்டோர், இன்று சாய்பாபாகாலனியில் உள்ள அதன் தலைமையகத்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கனகராஜ் என்பவர் கூறுகையில், "நான் கூலி செய்து வருகிறேன். ஒரு வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் சேர்த்து தருகிறேன் என்று கூறியதால், தினசரி 160 ரூபாய் கட்டி வந்தேன். 2016 ஆகஸ்ட் மாதம் முதல், 2017 மார்ச் வரை 42 ஆயிரம் கட்டினேன். இதையடுத்து, 2017 டிசம்பர் மாதம் எனக்கு 47,500 ரூபாய்க்கான செக் கொடுத்தனர். ஆனால், அந்த செக் ரிட்டர்ன் ஆகிவிட்டது. இதுபோல, பலருக்கும் செக் ரிட்டர்ன் ஆகிவிட்டது. இதுதொடர்பாக, நிறுவனத்திடம் சென்று கேட்டாலும், இன்று, நாளை என இழுத்தடித்து வருகின்றனர்" என்றார்.

மேலும், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த முகம்மது அலி என்பவர், தினமும் 1000 ரூபாய் வீதம், 10 லட்சம் ரூபாய் வரை செலுத்தி முடிந்த பின்பும், பணம் தராமல் இழுத்தடிப்பதாக கூறினார். விஜயலட்சுமி என்ற தையல்கலைஞர், 47,000 ரூபாய் வரை பணம் கட்டி இன்னும் 22,500 ரூபாய் பணம் தராமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல, 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டோருக்கு, அந்த நிறுவனம் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பணம் கேட்ட சிலருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  

இந்த புகார் தொடர்பாக ஶ்ரீ கோகுல ஜெயம் சிட்ஃபண்ட்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் நமது அழைப்பை எடுக்கவில்லை.