Published:Updated:

“எனக்கும் மாதவனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை!”- தீபா பளீச்

துரை.வேம்பையன்
“எனக்கும் மாதவனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை!”- தீபா பளீச்
“எனக்கும் மாதவனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை!”- தீபா பளீச்

"தமிழகத்தில் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மாறாக, மத்திய அரசின் உத்தரவுகளை மட்டும் செயல்படுத்திவருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கு" என்று கரூரில் தீபா குழப்பிப் பேச, பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல் வந்திருந்த ஒன்றிரண்டு தொண்டர்களும்  குழம்பி நின்றார்கள்.

மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று கரூரில் நடந்த ஆதரவாளர்கள் இல்ல விசேஷத்திற்கு வந்தார். அது முடிந்ததும்,  ஐந்து இடங்களில் கொடியேற்றுதல் நிகழ்ச்சியை நடத்த அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர். அதற்கு முன்பு, கரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் இருந்த தீபா, மாலை மூன்றரை மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த இருப்பதாகத் தகவல் வர, மீடியா அங்கே குவிந்தது. ஆனால், 'உதவியாளர் வரவில்லை, நிர்வாகிகள் வரவில்லை' என்று சொல்லியபடியே நேரத்தை இழுத்து, இரவு ஏழரை மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

கரூர் திருக்காம்புலியூரில் கொடியேற்றிய தீபா,வெங்கமேடு,பசுபதிபாளையம், திருமாநிலையூர் ஆகிய பகுதிகளில் கொடியேற்ற வந்தபோது, அங்கு சரியான கூட்டம் மற்றும் வரவேற்பு இல்லாததால் கடுப்பான அவர், காரை விட்டு இறங்காமல் சென்றுவிட்டார். இதனால், பல மணி நேரம் காத்திருந்த சில தொண்டர்களும் நிற்காமல் சென்ற தீபா மீது கோபமுற்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழக அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது. மக்கள் பிரச்னைகள் மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பற்றி கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு, மத்திய அரசின் உத்தரவுகளைச் செயல்படுத்திவருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது.

மேலும்,இப்போது உள்ள சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது சிரமம். தற்போது தமிழகத்தில் ஒருங்கிணைந்த அ.தி.மு.கவின் பலம் குறைவாக உள்ளது. காவிரி தீர்ப்பில் தமிழகத்திற்கு பெரிய ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. இது குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். எனக்கும் எனது கணவர் மாதவனுக்கும் இடையே எந்த சர்ச்சையும்;சண்டையும் இல்லை. சில ஊடகங்கள் முழுமையாக செய்தி வெளியிடாமல் அவர்கள் தேவைக்கானதை மட்டும் வெளியிடுகின்றனர். இதனால் தவறான கருத்துக்கள் வெளியாகின்றன. ஒரு தலைபட்சமாக செய்கி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த எந்த திட்டத்தையும் எடப்பாடி அரசு செய்யவில்லை. குறிப்பாக,பெண்கள் பயன்பெறும் எந்த திட்டத்தையும் செய்யவில்லை. விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. தமிழக அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால்,மக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் எடுத்துக் கொள்வது இல்லை. மத்திய அரசிடம் இருந்து என்ன ஆணை வருகிறதோ அதை அப்படியே செய்யும் அரசாக உள்ளது. குறிப்பாக தமிழக மக்களின் அடிப்படை தேவைகளான உணவு,பேருந்துக் கட்டணம்,தொழில் ஆகியவற்றில் வரி உயர்த்தி,மக்களை சிரமப்படுத்தி விட்டனர். இனியும் இந்த ஆட்சி தேவைதானா? என மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்" என்று முடித்தார்.