வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (21/02/2018)

கடைசி தொடர்பு:17:45 (21/02/2018)

சுஸூகி இன்ட்ரூடருக்குப் போட்டியாக அவெஞ்சர் 180... பஜாஜின் புது ப்ளான்!

கடந்த மாதத்தில் அவெஞ்சர் 220 சீரிஸ், டொமினார் D400, V15, V12, டியூக் 390 ஆகிய பைக்குகளின் 2018-ம் ஆண்டுக்கான பேஸ்லிஃப்ட் மாடல்களைக் களமிறக்கியது பஜாஜ். இதில் புதிய அவெஞ்சருக்குப் போட்டியாக, தான் முன்பே சொன்னதுபோலவே ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட இன்ட்ரூடர் பைக்கை, கடந்த வாரத்தில் நடந்து முடிந்த `2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ'வில் காட்சிப்படுத்தியது சுஸூகி. அதற்கான பதிலடியாக, அவெஞ்சர் 180 பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது பஜாஜ். இந்த பைக்கின் மும்பை எக்ஸ் ஷோரூம் விலை 83,400 ரூபாய் எனவும், Gloss கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இது கிடைக்கும் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அவெஞ்சர் 180

இதனால் அவெஞ்சர் 220 பைக்கைவிட 10 ஆயிரம் ரூபாய் குறைவாக (அவெஞ்சர் 220 சீரிஸ் பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை: 93,786 ரூபாய்) வெளிவரப்போகும் அவெஞ்சர் 180 பைக்கின் புக்கிங், இந்தியாவின் சில நகரங்களில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அங்கே பைக்குக்கான முழு தொகையைச் செலுத்தினால், சுமார் 10 நாள்களில் டீலர் பைக்கை டெலிவரி செய்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் அவெஞ்சர் 150 பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை, 81,779 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

என்னென்ன வித்தியாசங்கள்?

avenger 180

அவெஞ்சர் 220 பைக்குடன் ஒப்பிடும்போது, முந்தைய மாடலில் இருந்த அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்தான், அவெஞ்சர் 180 பைக்கில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பேஸ்லிஃப்ட் மாடலில் இருந்த LED DRL உடனான புதிய ஹெட்லைட், கவுல், மேட் ப்ளாக் ஃப்னிஷில் இருக்கும் எக்ஸாஸ்ட், அதற்கு மேலே இருக்கும் அலுமினிய ஃப்னிஷ் கொண்ட Heat Shield, அலுமினிய ஃப்னிஷ் Exhaust Tip, புதிய க்ராப் ரெயில், கூடுதல் சொகுசுக்காக மேம்படுத்தப்பட்ட இருக்கை, புதிய கிராஃபிக்ஸ் ஆகியவை இதிலும் தொடர்கின்றன. ஒருவேளை 220சிசி பைக்கிலிருந்து 180சிசி பைக்கை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, அவெஞ்சர் 180 மாடலில் Gloss கலர்கள் மற்றும் அனலாக் மீட்டர்களை வழங்கியுள்ளதோ பஜாஜ்? விலை குறைவு என்பதால் ஓகே.

இன்ஜின் விவரங்கள்!

suzuki intruder 150

பெயருக்கு ஏற்றபடியே அவெஞ்சர் 180 பைக்கில் இருப்பது, 178.6சிசி DTS-i இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான். இது நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான பல்ஸர் 180 மாடலில் இருக்கும் அதே சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, கார்ப்பரேட்டட் இன்ஜின் என்பது கவனிக்கத்தக்கது. எனவே, இதுவும் 17bhp பவர் மற்றும் 1.42kgm டார்க்கை வெளிப்படுத்துவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆனால், அவெஞ்சர் பைக்கின் க்ரூஸர் பொசிஷனிங்கை மனதில்வைத்து, கியரிங் - ஸ்ப்ராக்கெட் - டியூனிங் ஆகியவற்றில் பஜாஜ் மாற்றங்களைச் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி டயர் - சஸ்பென்ஷன் - பிரேக்ஸ் ஆகியவை, அப்படியே அவெஞ்சர் 220 பைக்கின் ஜெராக்ஸ்தான். ஆனால், எடையில் சிறிய வித்தியாசம் இருக்கலாம். 

முதல் தீர்ப்பு:

முதன்முறையாக அவெஞ்சர் பைக், கடந்த 2005-ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தபோது அது 180சிசி இன்ஜினுடன் வந்தது தெரிந்ததே. ஆக, 13 வருடங்களுக்குப் பிறகு 180சிசி BS-IV இன்ஜினுடன் கம்பேக் கொடுத்திருக்கிறது, புதிய 2018 அவெஞ்சர் 180. ஏற்கெனவே அவெஞ்சர் 220 பைக்கைவிட 11 ஆயிரம் ரூபாய் விலை அதிகமாக இருக்கிறது சுஸூகி இன்ட்ரூடர் 150 (இன்ட்ரூடர் பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை: 1.04 லட்சம் ரூபாய்). எனவே, எப்படிப் பார்த்தாலும் விரைவில் அறிமுகமாக இருக்கும் அவெஞ்சர் 180 பைக்கைவிட, தோராயமாக 20 ஆயிரம் ரூபாய் அதிக விலையைக் (எக்ஸ்-ஷோரூம்) கொண்டிருக்கும் நிலையில், ஆன்-ரோடு விலைகள் வரும்போது வித்தியாசம் இன்னும் அதிகமாக இருக்கும்.

சுஸூகி இன்ட்ரூடர் 150

என்னதான் மாடர்ன் டிசைன், ஸ்மூத் இன்ஜின், ஆப்ஷனலாகக் கிடைக்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், பின்பக்க டிஸ்க் பிரேக், சிறப்பான மெக்கானிக்கல் பாகங்கள், LED DRL மற்றும் டெயில் லைட் எனப் பல ப்ளஸ்பாயின்ட்களை சுஸூகி இன்ட்ரூடர் 150 கொண்டிருந்தாலும், கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க க்ரூஸர் பைக் வேண்டும் என்பவர்களது சாய்ஸ், அவெஞ்சர் சீரிஸ் பைக்காக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

படங்கள்: Zigwheels.Com

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்