எதையும் சாதிக்கும் ஆற்றலைத் தருவது எது தெரியுமா? - பாசிட்டிவ் எண்ணத்தின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory | What Are the Benefits of Positive Thinking?

வெளியிடப்பட்ட நேரம்: 07:22 (22/02/2018)

கடைசி தொடர்பு:07:49 (22/02/2018)

எதையும் சாதிக்கும் ஆற்றலைத் தருவது எது தெரியுமா? - பாசிட்டிவ் எண்ணத்தின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory

கதை

னோபாவம் என்பது சின்னஞ்சிறு விஷயம்தான்; ஆனால், மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கக்கூடியது’ - இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) வெகு இயல்பாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மோசமான வார்த்தைகளையே பேசுகிற, எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பவர்களை நாம் பார்த்திருப்போம். நல்ல வார்த்தைகளையே பேசுகிற, எப்போதும் நேர்மறையாகவே சிந்திப்பவர்களையும் சந்தித்திருப்போம். ஆனால், நமக்குப் பளிச்சென நினைவுக்கு வருவது பாசிட்டிவ்வாகப் பேசுபவரின் முகம்தான். சிலர் எப்போது பேசினாலும், `இல்லை... அது என்னன்னா...’ என்று `இல்லை’ வார்த்தையில் ஒரு விஷயத்தைப் பேச ஆரம்பிப்பார்கள். வேறு சிலர் `ஆமா... அது உண்மைதான்’ என்று `ஆமாம்’ வார்த்தையில் ஆரம்பிப்பார்கள். இந்த `ஆமாம்’, `இல்லை’ வார்த்தைகள்கூட பாசிட்டிவ், நெகட்டிவ் எண்ணங்களின் வெளிப்பாடுதான். நம் மனப்பான்மையைத் தீர்மானிப்பது நம் எண்ண ஓட்டமே! நேர்மறையான எண்ண ஓட்டம் எதையும் சாதிக்கும் ஆற்றலைத் தரும். எதிர்மறையான எண்ணம் நம் ஆற்றலைப் பாதியாகக் குறைத்துவிடும். இந்த உண்மையை உணர்த்தும் கதை இது.

அமெரிக்கா வளர்ந்த நாடாக இருப்பதற்கு அதன் வளங்கள் காரணமாக இருக்கலாம். சாலைப் போக்குவரத்து பலமாக அமைந்தது அதைவிட முக்கியக் காரணம். குறிப்பாக, ட்ரக்கின் பயன்பாடு அங்கே அதிகம். பல மூலப் பொருள்களையும், விளைந்த தானியங்களையும், இயந்திரங்களையும், உற்பத்தி செய்யப்பட்ட பலவகைப் பொருள்களையும் ஓரிடத்திலிருந்து நெடுந்தூரத்திலிருக்கும் இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்ல அதிகம் பயன்பட்டது ட்ரக்குகள்தான். பல மணி நேரங்கள், பல நாள்களுக்கு இடைவிடாமல் ட்ரக் ஓட்டும் டிரைவர்கள் இன்றைக்கும் அங்கே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்குச் சம்பளமும் அதிகம். 2014-ம் ஆண்டில் வெளியான அமெரிக்காவின் `Bureau of Statistics' கணக்குப்படி அங்கே 18 லட்சம் ட்ரக் டிரைவர்கள் இருக்கிறார்கள். இப்போது கதை...

ட்ரக்

சார்லஸ், நியூயார்க்கில் வசிக்கும் ஒரு ட்ரக் டிரைவர். பல வருட அனுபவமுள்ளவர். அமெரிக்காவிலிருக்கும் பல மாகாணங்களுக்கும், மூலை முடுக்கிலுள்ள ஊர்களுக்கெல்லாம் சென்று வந்தவர். அவருடைய நிறுவனம், ஓர் இளைஞனை, ட்ரக் ஓட்டப் பயிற்சி கொடுக்கச் சொல்லி அவரிடம் அனுப்பிவைத்தது. அவன் துறுதுறுவென்று இருந்தான். முறையாக டிரைவிங் கற்றுக்கொண்டு, அதற்கான தேர்வுகளில் தேறியுமிருந்தான். ஆனால், சாலைகளில் ட்ரக்கை ஓட்டிய அனுபவமில்லாதவன். அவன், 18 சக்கரங்களைக்கொண்ட ட்ரக்கை ஓட்டும் பயிற்சிக்கு வந்திருந்தான்.

சார்லஸ், அந்த இளைஞனைப் பற்றி விசாரித்தார். இருவரும் ட்ரக்கில் ஏறினார்கள். அவர் ட்ர்க்கை ஓட்டுவதிலுள்ள சில நெளிவு சுளிவுகளை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். நகர சந்தடி அடங்கி வெட்டவெளியான ஒரு பகுதிக்கு வந்ததும், இளைஞனை ட்ரக்கை ஓட்டச் சொன்னார். அவன் ஓட்ட ஆரம்பித்தான். அவர் சொன்னபடி ஓட்டினான். தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஓட்டினான். வெகுவாகக் களைத்துப் போனான்.

``நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமா?’’ என்று கேட்டான். சார்லஸ் அதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் சாலையோரமிருந்த ஒரு சிறு ஹோட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டார்கள். பிறகு ட்ரக்கில் ஏறினார்கள். இப்போது சார்லஸ் ட்ரக்கை ஓட்ட ஆரம்பித்தார்.

10 மணி நேரம் ட்ரக்கை ஓட்டினார் சார்லஸ். இளைஞனுக்குப் புல்லரித்துவிட்டது. திகைப்பு அடங்காமல் அவன் கேட்டான்... ``அது எப்பிடி கொஞ்சம்கூட டயர்டாகாம இவ்வளவு நேரம் ட்ரக் ஓட்டுனீங்க?’’

``சொல்றேன்... அதுக்கு முன்னாடி நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு... காலையில வீட்டைவிட்டுக் கிளம்புறப்போ என்ன செஞ்சே?’’

``என் மனைவிக்கு ஒரு முத்தம் குடுத்துட்டு, `வேலைக்குப் போறேன்... பை’னு சொல்லிட்டு வந்தேன்.’’

நேர்மறை எண்ணங்கள்

``அதுதான் உன் பிரச்னை.’’

``இதுல என்ன பிரச்னை?’’

``நானும் இன்னிக்கிக் காலையில வீட்டைவிட்டுக் கிளம்பும்போது என் மனைவிக்கு ஒரு முத்தம் குடுத்தேன். ஆனா, `வேலைக்குப் போறேன்’னு அவகிட்ட சொல்லலை. `நம்ம ஊரை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வர்றேன்’னு சொல்லிட்டு வந்தேன்.’’

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close