வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (22/02/2018)

கடைசி தொடர்பு:12:11 (22/02/2018)

எவ்ளோ இறுக்கமா கட்டினாலும் ஷூ லேஸ் அவிழ்வது ஏன்? விடை சொல்லும் விஞ்ஞானம்! #SimpleScience

றிவியல் என்பது எங்கிருக்கிறது எனக் கேட்டால், அது தூணிலும் இருக்கிறது துரும்பிலும் இருக்கிறது என்றுதான் பதில் சொல்ல வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் எந்தவொரு செய்கைக்கும் அறிவியலில் தெளிவான விளக்கம் உண்டு. இந்த உலகின் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்க அது பெரிதும் உதவியிருக்கிறது. மர்மம் என்பது பெரிய விஷயங்களில் மட்டும்தான் இருக்க வேண்டுமா? சிறிய விஷயங்களில் இருக்கக்கூடாதா? நாம் தினமும் காலை, அலுவலகத்திற்கோ அல்லது பள்ளி, கல்லூரிக்கோ செல்லும்போது ஷூ அணிந்து செல்வோம், அதில் இருக்கும் ஷூ லேஸை முடிந்த அளவுக்கு நமக்குத் தெரிந்த முறையில் அவிழாத அளவுக்குச் சிறப்பான முறையில்தான் கட்டுவோம். இருந்தும் சில சமயங்களில் அது அவிழ்ந்து நம்மை தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாக்கும். நடுரோட்டில் கீழே குனிந்து அதைச் சரி செய்வது எல்லாம் தினமும் நடக்கும் கூத்து. எந்தக் காரணியும் இல்லாமல் ஏன் அது அவிழ்கிறது என என்றாவது நீங்கள் யோசித்ததுண்டா?

ஷூ லேஸ்

ஆலிவர் ஒ ரெய்லி (Oliver O'reilly), அமெரிக்காவின், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர். ஒருநாள் தன் மகளுக்கு ஷூ லேஸ் எப்படிக் கட்ட வேண்டும் என சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஏன் இந்த முடிச்சுகள் காரணமே இல்லாமல் அவிழ்கின்றன என்ற கேள்வி அவருள் எழ, தீவிரமாக யோசித்துப் பார்த்திருக்கிறார். ஆனால், பதில்தான் கிடைக்கவில்லை. இப்படி ஒரு நிகழ்வு ஏன் நிகழ்கிறது என ஒருவரும் யோசித்திருக்கக்கூட வாய்ப்பில்லை. 

ஆலிவர், தன் இரு மாணவர்கள் கிரிஸ்டி இ. கிரெக் (Christine Gregg) மற்றும் கிரிஸ்டோஃபர் டெய்லி டைமண்ட் (Christopher Daily-Diamond) ஆகியோருடன் இணைந்து இந்த மர்மத்தைக் கண்டறிய புறப்படுகிறார். முதலில் எப்படி இதைக் கண்டறிவது எனக் குழப்பமான மனநிலையே நீடித்திருந்திருக்கிறது. கிரிஸ்டி தன் காலில் ஷூவை மாட்டிக்கொண்டு பல கோணங்களில் அசைத்துப் பார்க்கிறார், நடந்து பார்க்கிறார், ம்ஹூம் எந்த முன்னேற்றமும் இல்லை, பதிலும் இல்லை. பிறகு ஒருநாள் ட்ரெட்மில்லில் ஓடும்போது திடீரென ஒரு பொறிதட்டியது. ஒரு ஸ்லோமோஷன் கேமராவை ட்ரெட்மில்லில் ஓடுவதைக் காட்சிப்படுத்துவதற்காக அமைக்கிறார்கள். பின்னர் ஷூவில் ஒரு முடுக்க அளவியையும் (accelerometer) பொருத்துகிறார்கள். அதனைக் காட்சிப்படுத்திய பின் கிடைத்த முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்ததிற்கு எதிர்மறையாக இருந்தது. அதாவது ஷூ லேஸ் மெதுவாக அவிழ்வது இல்லை. அது ஒரு பேரழிவுபோல் கண நொடி நேரத்தில் நிகழ்கின்ற நிகழ்வாக இருக்கிறது. 

நாம் ஓடும்போது நமது கால்களானது பூமியின் ஈர்ப்புவிசையைவிட ஏழு மடங்கு அதிக விசையுடன் தரையில் மோதுகிறது. இந்த விசை அப்படியே அந்த முடிச்சுகளுக்குக் கடத்தப்படுகிறது. இதன் காரணமாக முடிச்சு கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழக்கத் தொடங்குகிறது. நம் கால்கள் முன்னும் பின்னும் நகரும்போது ஓர் உறுதியற்ற விசை (inertial force) லேஸின் முனையில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி ஏற்கெனவே பலமிழந்த நிலையில் இருக்கும் முடிச்சுகளைக் கன நேரத்தில் அவிழச் செய்கிறது என்கின்றனர் இந்த ஆராய்ச்சியாளர்கள். 

ஷூ லேஸ்

இந்தச் சின்ன விஷயத்திற்கு இவ்வளவு அறிவியல் மற்றும் இவ்வளவு நேரத்தைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி தேவைதானா? யோசித்துப் பாருங்கள். தினமும் நம் வாழ்வில் எத்தனைச் செயல்கள் முடிச்சுகளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று. அறுவை சிகிச்சையில் போடப்படும் தையல்கள்கூட முடிச்சுகளோடு தொடர்புடையவைதானே. இந்த சாதாரண ஷூ லேஸ்கள் எப்படிச் செயல்படுகின்றன என அறிந்துகொண்டால், அதைவிட நுணுக்கமான அதோடு தொடர்புடைய பல அறிவியல் விளக்கங்களை நீங்கள் சிரமமில்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 

 


டிரெண்டிங் @ விகடன்