இணையத்தில் 'மய்யம்' கொண்டதா கமல் புயல்?! #GoogleTrends

கமல்

''நீங்க வலதுசாரியா இல்ல இடது சாரியானு கேக்குறாங்க.. நாங்க மையமா இருக்கோம்னு சொல்றேன்'' 

''எனக்கு வயசு 63, நா 40 வருஷம் ஆட்சி செய்யணும்னு அரசியலுக்கு வரல''

''எனக்கு அம்பேத்கர் பிடிக்கும், ஒபாமா பிடிக்கும், பினராய் விஜயனைப் பிடிக்கும்'' இப்படி பன்ச் டயலாக்குகளால் மதுரையில் நடந்த கட்சி அறிவிப்புக் கூட்டத்தில், தனது கட்சியின் பெயரை ''மக்கள் நீதி மய்யம்'' என்று அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். எப்போதும் டிவிட்டரில் ட்விட் செய்து பரபரப்புச் செய்திகளில் இடம் பெறும் கமல்ஹாசன், இந்த முறை தன் பொதுக்கூட்டத்தைத் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலேயே லைவ் செய்தார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அதிகம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கமல்ஹாசனின் கட்சி அறிவிப்பை இணையம் எப்படிப் பார்த்துள்ளது என்று தேடினால் கிடைக்கும் தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானதாக உள்ளன. 

1. நேற்று 'கமல்ஹாசன்' என்ற வார்த்தையைக் கூகுள் தேடலில் உலகம் முழுவதும் 80 நாடுகள் தேடியுள்ளன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக கமல்ஹாசனை மத்தியக் கிழக்கு நாடுகள் அதிகமாகத் தேடியுள்ளன. 

2. கமல்ஹாசனின் அரசியல் கட்சி அறிவிப்புத் தொடர்பான தேடல்களில், அவரது இக்கட்சியின் பெயரான ''மக்கள் நீதி மய்யம்'' தான் அதிகமாகத் தேடப்பட்டுள்ளது. ஆனால், 'மய்யம்' என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் பல்வேறு வடிவங்களில் Maiyam, Maiam, mayyam என்றெல்லாம் தேடியிருக்கிறார்கள்.

3. ரஜினியோடு இணைவீர்களா என்று கமலிடமும், கமலோடு இணைவீர்களா என்று ரஜினியிடமும் தொடர்ந்து கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. இருவரும் இந்தக் கேள்விக்கு மழுப்பலாகவே பதில் கூறி வருகிறார்கள். ஆனால், இணையம் இந்தப் பிரச்னைக்கும் நேற்றைய கூகுள் தேடலில் பதில் கூறியுள்ளது. உலக அளவில் அதிகபட்ச தேடலில் ''மக்கள் நீதி மன்றம்'' என்பது நான்காம் இடம் பிடித்துள்ளது. கமலின் மக்கள் நீதியும், ரஜினியின் மன்றத்தையும் இணைத்துத் தேடியதெல்லாம் வேற லெவல்.

kamal

4. தமிழில் ''மக்கள் நீதி மய்யம்'' தேடப்பட்டதற்கு இணையாக ''மய்யம் அர்த்தம்'' என்பதும், ஆங்கிலத்தில் ''Maiyam Meaning'' என்பதும் அதிகமாகத் தேடப்பட்டுள்ளன. கமலின் ட்விட்களுக்கு விளக்கம் தேடுவதுபோலக் கட்சியின் பேருக்கும் மக்கள் விளக்கம் தேடியுள்ளனர். கொள்கைகள் பற்றி தோண்டித் தோண்டி கேட்பவர்களுக்குப் புத்தகம் அச்சிட்டுத் தருவோம் என்று கூறிய கமலை, கட்சியின் பெயருக்கும் விளக்கம் அடித்துத் தரக் கேட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். 

5. கமல் கட்சி அறிவிப்புத் தொடர்பாக அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில் மக்கள், தமிழ், கமல்ஹாசன், கொடி, அரசியல் ஆகியவை டாப் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

6. கமலின் மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்தில் அதனை 27,000 பேர் ஃபாலோ செய்துள்ளனர். அந்தக் கணக்கு கமல்ஹாசனின் ட்விட்டர் கணக்கை மட்டும் ஃபாலோ செய்கிறது.

7. மக்கள் நீதி மய்யம் என்ற வார்த்தையைத் தமிழக நகரங்கள் அல்லாமல் அதிகம் தேடிய நகரமாக பெங்களூரு உள்ளது. நேற்றைய கூட்டத்தில் கமல் பெங்களூருவை மையப்படுத்திப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!