ஓர் ஆணி... ஒரு கார்... ஒரு கோபம் - தந்தையைக் கதறவைத்த மகனின் கதை! #FeelGoodStory | This feel good story explains the effects of anger

வெளியிடப்பட்ட நேரம்: 06:35 (23/02/2018)

கடைசி தொடர்பு:06:35 (23/02/2018)

ஓர் ஆணி... ஒரு கார்... ஒரு கோபம் - தந்தையைக் கதறவைத்த மகனின் கதை! #FeelGoodStory

Feel good story

 

`ஒருவரைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு எதிரியாக இருப்பவை கோபமும் வெறுப்பும்தான்’ - மகாத்மா காந்தியின் பொன்மொழி இது. கோபம் ஏற்படுத்தும் இழப்பு சாதாரணமானதல்ல.  கோபத்தில், நேசத்துக்குரியவர்களையே பழிக்கிறோம்; நெருங்கியவர்கள் மேல் வெறுப்பை உமிழ்கிறோம். `செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற’ என்கிறார் திருவள்ளுவர். அதாவது, `தன்னைவிட வலிமையானவரிடம் (செல்லுபடியாகாத இடத்தில்) கோபம் கொள்வது தீங்கு; தன்னைவிட வலிமை குறைந்தவர்களிடம் (செல்லுபடியாகும் இடத்தில்) கோபம் கொள்வதுபோலத் தீங்கு வேறு எதுவுமில்லை’ என்பது இதன் பொருள். கண்ணை மறைக்கும் கோபம், இதையெல்லாம் மனிதர்களை யோசிக்கவிடுவதில்லை. அதன் விளைவு நம்மை எப்படிப் பாடாகப்படுத்தும் என்பதை உணர்த்தும் கதை இது!

அமெரிக்காவின் தெற்குக் கரோலினாவிலிருக்கும் சார்லஸ்டோன் (Charleston), சிறு நகரம். அந்த நகரத்தில் வசிப்பவன் ஜேம்ஸ். ஒரு ரெஸ்ட்டாரன்ட்டில் வேலை. மனைவி, ஒரே மகன். மகன் டேவிட்டுக்கு ஏழு வயது. துறுதுறு குழந்தை. ஒரு கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பலவிதங்களில் பணம் சேர்த்து ஒரு வாரத்துக்கு முன்னர்தான் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தான். அதற்குக்கூட அப்பா அவனுக்காக விட்டுவிட்டுப் போயிருந்த பழைய காரை விற்கவேண்டியிருந்தது.

ஜேம்ஸுக்கு அந்த காரைப் பார்க்கப் பார்க்கப் பெருமையாக இருந்தது. மாலையோ, காலையோ மனைவி, மகனுடன் தினமும் அதிலேறி ஒரு ரைடு போய்விட்டு வருவது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

அது ஒரு காலை நேரம். ஜேம்ஸ் தன்னுடைய காரைத் துடைத்துக்கொண்டிருந்தான். மும்முரமாக காரை க்ளீன் செய்யும் வேலையில் அவன் இருந்ததால், டேவிட் அங்கே வந்ததை அவன் கவனிக்கவில்லை. ஜேம்ஸ் ஒரு பக்கம் காரைத் துடைத்துக்கொண்டிருக்க, குழந்தை டேவிட் மறுபக்கம் போனான்.  

கதை - நெகிழ்ச்சிக் கதை

 

கொஞ்சம் நேரம் கழித்து, சின்னதாகக் கீறுவதுபோல ஒரு சத்தம் வருவதை ஜேம்ஸ் உணர்ந்தான். எழுந்து பார்த்தபோது, மறுபக்கம் டேவிட்டின் தலை தெரிந்தது. பதறிப்போய் மறுபக்கம் ஓடினான். அங்கே டேவிட் ஓர் ஆணியால், காரில் எதையோ கீறிக்கொண்டிருந்தான். அவ்வளவுதான். பார்த்துப் பார்த்துப் பராமரிக்கும் கார் ஆயிற்றே! ஜேம்ஸுக்கு ஆத்திரமும் கோபமும் பொங்கிக்கொண்டு வந்தது. சுற்று முற்றும் பார்த்தவன், கையில் கிடைத்த ஒன்றை எடுத்துக்கொண்டு வேகமாக டேவிட்டின் அருகே போனான். தான் கையில் வைத்திருந்ததைக்கொண்டு, குழந்தையின் கையிலேயே அடித்தான்... ``செய்வியா... செய்வியா... இனிமே கார்கிட்ட வருவியா?’’

டேவிட்... `இல்லைப்பா... வர மாட்டேன்பா... சாரிப்பா...’’ என்று அரற்றி, அழ ஆரம்பித்தான். ஆத்திரம் தணிந்து, தன் நிலைக்கு வந்ததும்தான் ஜேம்ஸுக்குத் தன் கையிலிருந்தது ஓர் இரும்புக்கம்பி என்பது தெரிந்தது. அதற்குள் ஜேம்ஸின் மனைவி ஓடிவந்திருந்தாள். டேவிட்டின் கைகளில் ரத்தம்... ஜேம்ஸும் பதறிப் போனான். `ஐயோ... குழந்தையைப்போய் இப்படி அடித்துவிட்டோமே...’ எனத் துடித்துப்போனான். குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். 

கதை - நெகிழ்ச்சிக் கதை

 

டேவிட் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டான். ஜேம்ஸ் அடித்ததில், டேவிட்டின் ஒரு விரல் ஒடிந்துபோயிருந்தது. ஜேம்ஸும் அவன் மனைவியும் அழுதபடி வெளியே காத்துக்கிடந்தார்கள். பல மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை டேவிட் கண்விழித்துவிட்டதாக நர்ஸ் தகவல் கொடுத்ததும், உள்ளே ஓடினார்கள். அப்பாவைப் பார்த்ததும் டேவிட் கேட்டான்... ``ஏம்ப்பா... என் இடது கை விரல் ஒண்ணு ஒடிஞ்சிருச்சுனு நர்ஸக்கா சொன்னாங்க... அது திரும்ப வளர்ந்துடுமாப்பா?’’

ஜேம்ஸ் இதைக் கேட்டதும் துடித்து அழுதான். சிறிது நேரம் குழந்தையின் அருகே இருந்துவிட்டு, மனைவியை துணைக்கு விட்டுவிட்டு வீடு திரும்பினான். வாசலில் அந்தப் புதிய கார் நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆத்திரமாக வந்தது. ``உன்னாலதானே என் குழந்தைக்கு விரல் போச்சு...’’ என்று அரற்றியவன், ஒரு கட்டையை எடுத்து காரை அடித்து நொறுக்கினான். அடுத்த பக்கம் போனவன், குழந்தை டேவிட் ஆணியால் கீறிய இடத்தைத் தற்செயலாகப் பார்த்தான். அங்கே, இப்படிக் கிறுக்கப்பட்டிருந்தது... `டாடி... ஐ லவ் யூ...’

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close