வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (23/02/2018)

கடைசி தொடர்பு:11:18 (23/02/2018)

``கட்சியில் சேரவில்லை; ஆனால், என் குருநாதர் கமல் திட்டங்களைப் பிரசாரம் செய்பவன் நான்!"- 'பிக் பாஸ்' வையாபுரி

``சினிமா வாழ்க்கையில், கமல்தான் என் குருநாதர். அவரது நல்ல திட்டங்கள் பற்றி மக்களிடையே எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்வேன்" என அதிரடியாகப் பேச ஆரம்பித்தார் நடிகர் வையாபுரி. கமல்ஹாசனுடன் மும்பை எக்ஸ்பிரஸ், பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார் வையாபுரி. பல இடங்களில் 'கமல்தான் என் ஆசான்' எனக் கூறியுள்ளார்.சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டபோதுகூட, கமல்ஹாசன் குறித்து சிலாகித்தார். 

வையாபுரி

நேற்று மதுரை ஒத்தக்கடையில் தனது முதல் அரசியல் அறிமுகக் கூட்டத்தைக் கூட்டினார் கமல்ஹாசன். இந்தக் கூட்டத்தில் அவருடைய ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.   கூட்டத்தில் தன் ரசிகர்களைச் சந்தித்த கமல், தனது புதுக் கட்சியின் பெயரை அறிவித்தார். `மக்கள் நீதி மய்யம்' என்று பெயரை அறிவித்ததோடு, கட்சியின் சின்னத்தையும் கொடியையும் அறிமுகம் செய்தார். அந்தக் கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டு கமல்ஹாசனை வாழ்த்திப் பேசினார். தனது கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களை அந்தக் கூட்டத்தில் அறிமுகம் செய்துவைத்தார் கமல்ஹாசன். அங்கு தனது கட்சியின் கொள்கைகள் குறித்தும் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார். கமல் அரசியல் பயணம் தொடங்கியவுடன் அவர் நடத்திய முதல் கூட்டமென்பதாலும், கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவை குறித்த தகவல் வெளிவருவதாலும்  இந்தக் கூட்டத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

 நடிகர் வையாபுரி, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கமல்ஹாசனின் புதிய கட்சி குறித்தும், நேற்று நடைபெற்ற கூட்டம் குறித்தும் நடிகர் வையாபுரியுடன் பேசினோம்... 

வையாபுரி

 

``முதல்ல நான் தெளிவா ஒண்ணு சொல்லிடுறேன். நான் அந்தக் கூட்டத்துக்குப் போனது, பதவிக்காக அல்ல; கமல் மீதான பாசத்துக்காக. என் குருநாதர், கமல்தான். சினிமாவுல எனக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அவர்தான். அவரைப் பற்றிச் சொல்லணும்னா, அவ்வளவு நல்ல விஷயங்களைச் சொல்லலாம். அவர்கிட்ட நான் இன்னைக்கு வரைக்கும் பார்த்து வியக்குற விஷயம் அவரோட நேர்மை. அதை மக்களும் தெரிஞ்சுக்க வேண்டிய நேரம் வந்திருச்சு. அவர் மட்டுமல்ல, அவரோட ரசிகர்களும் ரொம்ப ஒழுக்கமானவங்கனு நேற்றுதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். சின்னக் கூட்டம் நடத்தினாலே அவ்வளவு பிரச்னைகள் வரும். ஆனா, நேத்து நடந்த அவ்வளவு பெரிய  கூட்டத்துல, ஒழுக்கத்தோடும் ஒற்றுமையோடும் கூட்டத்தை அரவணைச்சு, உதவி மனப்பான்மையோடு ரசிகர்கள் நடந்துக்கிட்டதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன். கமல் சார் பேசுறதை ரொம்ப அமைதியா  கவனிச்சாங்க" என்றவரிடம் ``கட்சியில் சேர்ந்துட்டீங்களா?'' எனக் கேட்டோம். 

``நான் அ.தி.மு.க-வுல பத்து வருஷம் இருந்திருக்கேன். ஜெயலலிதா அம்மா இறக்கிறதுக்கு முன்னாடி வரை, நான் மக்களைச் சந்திச்சு அவங்களோட திட்டங்களைப் பற்றிப் பிரசாரம் செஞ்சிருக்கேன். இன்னும் நான் கமல் சார் கட்சியில சேரலை. ஆனா, அவரோட நல்ல திட்டங்களை மக்கள்கிட்ட எடுத்துச் சொல்வேன். நாட்டுல, பசங்களைப் படிக்க வைக்கிறதுதான் இன்னைக்கு பெரிய பிரச்னை. கமல் சார் பிரச்னையை மாத்துறேன்னு சொல்லியிருக்கார். என் பையன் ப்ளஸ் ஒன் படிக்கிறான். நாளைக்கு அவனோட படிப்பு என்ன ஆகுமோங்கிற கேள்வி எனக்குள்ள இருக்கும். ஆனா, கமல் சார் வந்தார்னா இதுபோன்ற கேள்வி எல்லாம் மக்களுக்குத் தோன்றவே தோன்றாது. கமல் சார் நிச்சயமா நல்லதுதான் செய்வார்'' என மதுரை ஒத்தக்கடை கூட்டம் குறித்துக் கூறினார் வையாபுரி. 


டிரெண்டிங் @ விகடன்