வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (23/02/2018)

கடைசி தொடர்பு:19:12 (23/02/2018)

ரயில்களில் இனிமேல் "சார்ட்" ஒட்டப்படாது... காரணத்தைக் கூறும் ரயில்வே நிர்வாகம்

யிலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு பெட்டியிலும் சார்ட் பேப்பர் ஒன்று ஒட்டப்படும். ரயில் பெட்டியின் வாசல் அருகில் இருக்கும் அந்த சார்ட் பேப்பரில், ரயிலில் பயணம் செய்யப்போகும் பயணிகளின் இருக்கை தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். ரயில் புறப்படுவதற்கு  ஒரு சில மணி நேரங்களுக்கு முன்புதான் இது தயார் செய்யப்பட்டு ஒட்டப்படும். பயணிகள் அதைப்பார்த்து அவர்களின் இருக்கையைத் தெரிந்துகொள்வார்கள். இதுதான் காலங்காலமாக இந்திய ரயில்வே கடைப்பிடித்து வரும் நடைமுறை. ஆனால், வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ரயில் பெட்டிகளில், இந்த முன்பதிவு சார்ட் ஒட்டுவது நிறுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது இந்தியன் ரயில்வே.

ரயில்வே

இது முதல் முறையல்ல

இது போன்ற அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிடுவது முதல் முறையல்ல. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே புதுடில்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், மும்பை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல், ஹௌரா மற்றும் சீல்டா ஆகிய ஆறு ரயில் நிலையங்களில் பரிசோதனை முயற்சியாக இது செயல்படுத்தப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து தற்பொழுது அந்த முயற்சியை இதர ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ரயில் நிலையங்கள் A1, A, B, C, D, E மற்றும் F என மொத்தம் ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் முன்பதிவு செய்யும் வசதி இருக்கும் ரயில்கள் A1, A, மற்றும் B வகை ரயில் நிலையங்களிலிருந்துதான் புறப்படுகின்றன. எனவே, குறிப்பிட்ட இந்த நிலையங்களிலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களிலும் மார்ச் 1-ம் தேதி முதல் சார்ட் ஒட்டுவது நிறுத்தப்படும். முதலில் சோதனை அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் அதற்குப் பிறகு இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இதை நீடிக்கலாமா என்பதை ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும். இது தொடர்பான அறிக்கை அந்தந்த ரயில்வே அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ரயில்வே சார்ட்

எதற்காக இந்தப் புதிய நடைமுறை

கடந்த முறையும் சரி, இந்த முறையும் சரி இந்தப் புதிய முயற்சியை மேற்கொள்வதற்கு இந்திய ரயில்வே கூறும் காரணம் இது காகிதப் பயன்பாட்டை பெருமளவு குறைக்கும் என்பதுதான். சார்ட்டை தயாரிக்க காகிதம் வாங்கவும், பிரின்ட் செய்வதற்காகவும் அதிகம் செலவாகிறது, தேவையில்லாத நேர விரயமும் ஏற்படுகிறது. இந்தப் புதிய முயற்சியின் மூலமாக செலவு குறைவதுடன், டன் கணக்கில் காகிதம் மிச்சப்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் பங்களிக்க முடியும் என நினைக்கிறது இந்தியன் ரயில்வே.

பயணிகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா

பயணிகள்

இன்றைக்குப் பயணிகள் பலர் டிஜிட்டலுக்கு மாறி விட்டார்கள். யாருமே வரிசையில் நின்று முன்பதிவு செய்வதை விரும்புவதில்லை. அனைத்தையுமே மொபைல் ஆப்பின் மூலமாகவே செய்து விடுகிறார்கள். இது தவிர முன்பதிவு செய்தது முதல் இருக்கை உறுதி செய்யப்பட்டது வரை அனைத்துத் தகவல்களையும் குறுஞ்செய்தியின் மூலமாகத் தெரிவிக்கிறது ரயில்வே. எனவே, பலருக்கு சார்ட் தேவைப்படுவதில்லை. இதனாலே, இது போன்ற பரிசோதனையை முயன்று பார்ப்பதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்திருக்கக்கூடும். ரயில் பெட்டிகளில்தான் சார்ட் ஒட்டப்பட்டதே தவிர நடைமேடையில் வைக்கப்படும் சார்ட்டும், டிஜிட்டல் அட்டவணைகளும் வழக்கம் போல பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மொபைல் பயன்படுத்தத் தெரியாதவர்களும் குறுஞ்செய்தி வரவில்லை என்பவர்களும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். டிக்கெட் பரிசோதகரிடமும்  இருக்கை தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.  இந்தப் புதிய முயற்சியின் மூலமாக வருடத்திற்கு 28 டன் காகிதத்தையும், ரூ. 1.70 லட்சம் செலவையும் குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது தென்னக ரயில்வே நிர்வாகம். பரிசோதனை முயற்சியாக ஆறு மாதங்கள் மட்டும் என்று கூறினாலும், இதை நிரந்தரமாகச் செயல்படுத்தவே ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்யும். இதிலிருக்கும் குறைகளை மட்டும் கண்டறிந்து களைந்துவிட்டால் இது ஒரு சிறந்த திட்டம் என்பதில் சந்தேகமில்லை.