ஏர் டாக்ஸி Vs ஹைப்பர்லூப்... எது பெருசு? இரு CEO-க்களிடையே நடக்கும் மல்லுக்கட்டு! | Uber CEO accepts Elon musk challenge

வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (24/02/2018)

கடைசி தொடர்பு:19:53 (24/02/2018)

ஏர் டாக்ஸி Vs ஹைப்பர்லூப்... எது பெருசு? இரு CEO-க்களிடையே நடக்கும் மல்லுக்கட்டு!

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் சினிமாவில் உலகைக் காக்க போராடுவது போல, உலகின் எதிர்கால சிக்கல்களைத் தீர்ப்பதற்காக போராடிக்கொண்டிருக்கின்றனர் (அல்லது வாய்ப்பைப் பயன்படுத்தி வருமானம் பார்க்க காத்திருக்கின்றனர்) டெக் சி.இ.ஓ.க்கள். இவர்களுள் பெரும்பாலானோரின் தேர்வாக இருப்பது போக்குவரத்துத் துறைதான். எதிர்காலத்தில் அதிகரிக்கவிருக்கும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசலால் நேரவிரயம், வாகனங்கள் ஏற்படுத்தும் சூழலியல் கேடுகள், விபத்துகள் போன்ற சிக்கல்களைக் கையில் எடுத்து அவற்றிற்குத் தீர்வு காண்பதற்காகப் பல டெக் நிறுவனங்களும் தீவிரமாக இயங்கிவருகின்றன. தானியங்கி கார்கள், பறக்கும் கார்கள், ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் போன்றவை அவற்றுள் சில. இதில் உபெர் நிறுவனம் தயாரித்துவரும் ஏர் டாக்ஸியும், எலான் மஸ்க்கின் போரிங் நிறுவனத்தின் பாதாள சாலைகளும் முக்கியமானவை. காரணம், இந்த இரண்டுமே நடைமுறையில் சாத்தியமாவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 2020-ம் ஆண்டு ஏர் டாக்ஸியை வெற்றிகரமாக செயல்படுத்த உபெர் நிறுவனமும், இன்னும் சில ஆண்டுகளுக்குள் சுரங்கங்கள் அமைக்கும் பணியை முடிப்பதற்கு போரிங் நிறுவனமும் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களும் ட்விட்டரில் பேசிக்கொண்ட கான்வோதான் டெக் மீடியாக்களின் சுடசுட செய்தி. விஷயம் என்ன?

உபெர் சி.இ.ஓ.வின் பேச்சு

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உபெர் சி.இ.ஓ. கோஸ்ரோவ்ஷாஹி "உங்களால் வானில் பறக்க முடியுமென்றால் பின்னர் எதற்கு ஹைப்பர்லூப்? அதற்காகச் சுரங்கம் தோண்ட வேண்டிய அவசியம் என்ன?" எனக் குறிப்பிட்டார். இதனை நெட்டிசன் ஒருவர் எலான் மஸ்க்கிடம் ட்விட்டரில் தெரிவித்தார். அதற்கு அவர் அளித்த ரிப்ளை இதுதான்.

"உங்கள் வீட்டுக் கூரைக்கு மேல் இந்த கார்கள் பறந்து சென்றால் இன்னும் 1000 மடங்கு இரைச்சல்தான் ஏற்படும். அந்த கார்கள் கீழிறங்கும்போது அருகில் ஏதேனும் இருந்தால் அவையெல்லாம் பறந்தேபோய்விடும்"

உபெரின் டெக்னாலஜியை மஸ்க் இப்படிக் கலாய்த்தால் கோஸ்ரோவ்ஷாஹி மட்டும் சும்மா இருப்பாரா என்ன? உடனே, "சவாலை ஏற்றுக்கொள்கிறேன் மஸ்க். ஆனால் திறன்வாய்ந்த பேட்டரிகள் மற்றும் சின்னஞ்சிறிய ரோட்டர்கள், சத்தத்தையும் மாசுபாட்டையும் குறைத்துவிடும்" என மஸ்க்கிற்கு பதிலளித்திருக்கிறார்.

கோஸ்ரோவ்ஷாஹி இவ்வளவு நம்பிக்கையாக மஸ்க்கிடம் சவால்விடக் காரணம், இதில் உபெர் செய்துவரும் தீவிரமான ஆராய்ச்சிகள்தான். இந்த டாக்ஸிக்காக முதலில் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் மட்டுமே பேசிக்கொண்டிருந்த உபெர், பின்னர் திடீரென நாசாவுடன் கைகோத்தது. மேலும் தன்னுடைய முதல் ஏர் டாக்ஸியை 2020-ல் இயக்கிக் காட்டப்போவதாகவும் அறிவித்துவிட்டது. எலான் மஸ்க்கும் சும்மா இல்லை. போரிங் நிறுவனத்திற்கான சுரங்கம் தோண்டும் பணிகளை தொடங்கிவிட்டார். ஹைப்பர்லூப் தொழில்நுட்பமும் வேகமாகத் தயாராகிவருகிறது. இதுதவிர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பிக் ஃபால்கன் ராக்கெட் மூலம் பூமிக்குள்ளேயே ராக்கெட் மூலம் பயணம் செய்யும் திட்டமும் மஸ்க்கிடம் இருக்கிறது. எனவே, இருவருமே இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் அல்ல. இப்படி, எலான் மஸ்க் தொழில்நுட்பத்தின் மூலம் மட்டுமல்ல; சின்ன சின்ன நையாண்டி ட்வீட்களின் மூலமாகவும் 'சாட்டையடி பதிவு தோழி' என அசர வைப்பார்.

போயிங் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸிற்கு முன்பாகவே செவ்வாய் கிரகத்தை அடைந்துவிடும் என அந்நிறுவன சி.இ.ஓ கூறியதற்கு, மஸ்க் இரண்டே வார்த்தைகளில் பதிலளித்தார். அது, "Do it"

எலான் மஸ்க் ட்வீட்

AI மற்றும் ஃபேஸ்புக் தொடர்பான விவாதம் ஓடிக்கொண்டிருந்தபோது, ட்விட்டர்வாசி ஒருவர் மஸ்க்கிடம் இதேபோல கருத்துகேட்டார். அப்போது கொஞ்சமும் தயங்காமல், "AI பற்றி மார்க்கிற்கு தெரிஞ்சது அவ்ளோதான். அதுபத்தி ஒரு படம் வரப்போகுதாம். அவர் வேணா அத பார்க்கட்டும்" என கருத்து தட்டிவிட்டார். இதுபோன்ற அதிரடிகளால் மற்ற சி.இ.ஓ.க்களை விடவும் ட்விட்டரில் எலான் மஸ்க்கிற்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்