வெளியிடப்பட்ட நேரம்: 09:19 (26/02/2018)

கடைசி தொடர்பு:09:19 (26/02/2018)

நீங்க உருவாக்கிய ஆண்ட்ராய்டு செம பாஸ்... ஆனா உங்க ஃபோன்?! #EssentialPH1

ஆண்ட்ராய்டு என்ற பெயர் நமக்குப் பரிச்சயமான அளவுக்கு  ஆண்டி ரூபின் (Andy Rubin) என்ற பெயர் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு ஸ்மார்ட்போன் சந்தையை ஆட்சி செய்யும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கியவர்களில் ஆண்டி ரூபினும் ஒருவர். எனவே இவருக்கு ஆண்ட்ராய்டின் தந்தை என்ற செல்லப்பெயரும் உண்டு. 2003-ம் ஆண்டு ஆண்ட்ராய்டு நிறுவனத்தை ரூபின் தொடங்கினார். அதன் எதிர்காலத்தைக் கணித்த கூகுள் 2005-ம் ஆண்டு ஆண்ட்ராய்டை வாங்கிக்கொண்டது. கூகுள் நிறுவனத்தோடு இணைந்த பின்னர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை மேம்படுத்தும் திட்டத்தில் பங்காற்றினார். 2008-ல் ஆண்ட்ராய்டு இயங்குதளம் வெளியான பிறகு சந்தையில் இருந்த மற்ற இயங்குதளங்களை ஓரம் கட்ட ஆரம்பித்தது. அப்படிப்பட்ட நிலையில்தான் 2013-ம் ஆண்டு ரூபின் கவனித்து வந்த பொறுப்புகள் சுந்தர் பிச்சையிடம் மாற்றப்பட்டது.

ஆண்டி ரூபினின் ஆசை 

ஆண்டி ரூபின்

ஆண்ட்ராய்டின் வளர்ச்சியைப் பார்த்ததும் ஆண்டி ரூபினுக்கும் ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கும் ஆசை வந்ததோ என்னவோ 2014-ம் ஆண்டில் கூகுளை விட்டு வெளியேறினார். எஸ்சென்ஷியல் புராடக்ட்ஸ் என்ற பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். சந்தையில் முன்னணியில் இருக்கும் மற்ற நிறுவங்களுக்குச் சவால் விடும் வகையில் ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அடுத்த சில வருடங்களில் அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.  இவர் சொந்தமாக உருவாக்கும் மொபைல் என்பதால் அதற்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. எப்படியோ ஒரு வழியாகக் கடந்த வருடம் மே மாதத்தில் Essential PH-1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி விட்டார்.

ஆண்ட்ராய்டு எஸ்சென்ஷியல் ஸ்மார்ட்போன்

முதல் மொபைலை பார்த்துப் பார்த்து மிகக் கவனமாக வடிவமைத்திருந்தார் ஆண்டி ரூபின். கூகுளுக்கு முன்னால் ஆப்பிளில் சில வருடங்கள் வேலை பார்த்திருந்தார். ஆப்பிள் அனுபவம் கொஞ்சம், கூகுள் அனுபவம் கொஞ்சம் என அதுவரைக்கும் கத்துக்கொண்ட மொத்த வித்தையையும் அந்த ஸ்மார்ட்போனில் காட்டியிருந்தார். சந்தையில் இருந்த மற்ற மொபைல்களோடு ஒப்பிடும் பொழுது Essential PH-1 சிறந்த வடிவமைப்பைக் கொண்டிருந்தது. மற்ற மொபைல்களில் அலுமினியம் ஃபிரேம் இருக்க இவர் ஒருபடி மேலே போய் டைட்டானியம் உலோகத்தைப் பயன்படுத்தியிருந்தார். டூயல் கேமரா, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, வயர்லெஸ் சார்ஜிங் என இந்த ஸ்மார்ட்போனில் வசதிகளுக்குக்  குறைவே கிடையாது.

இந்தியாவில் மேஜிக் நடக்குமா

ஸ்மார்ட்போன்

மொபைல் வெளியானவுடன் முன்பதிவுகள் குவியப்போகின்றன, அனைத்து மொபைல்களுமே விற்றுத் தீரப்போகின்றன என்று அவர் எதிர்பார்த்துக் காத்திருக்க நிலைமை தலைகீழாக மாறியது. எஸ்சென்ஷியல் போன் ஏதோ ஒரு இடத்தில் சறுக்கியது. மக்கள் இதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. மொத்தமே 5000 மொபைல்கள் மட்டுமே விற்பனையானதாகத் தகவல்கள் வெளியாயின. சரியான மார்க்கெட்டிங்கும் இல்லாமல் விற்பனை மிகவும் குறைந்திருந்தது. அறிமுகப்படுத்தும்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை 45,000 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு விற்பனையை அதிகரிப்பதற்காக அதன் விலை படிப்படியாக குறைக்கப்பட்டு விற்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட அதை வாங்குவதற்கு யாருமே தயாராக இல்லை. இந்நிலையில்தான்  எஸ்சென்ஷியல் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன. (ஏற்கெனவே அமேஸானில் இருக்கும் வெர்சன் USசந்தையில் இருந்து இம்போர்ட் செய்யப்பட்டது. ) மார்ச் அல்லது ஏப்ரலில் அமேஸான் இணையதளத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை முப்பதாயிரம் ரூபாய்க்குக் கீழ் அல்லது 24,999 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆண்டி ரூபின் அடுத்து ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் என்றும், அதன் காரணமாகவே விற்பனையாகாமல் இருக்கக்கூடிய மொபைல்களை சீக்கிரமாக விற்பனை செய்வதற்காகவே இந்தியாவில் மொபைல் அறிமுகப்படுத்தப்படுகிறது என்ற தகவலும் இணையத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலாவது ஆண்டி ரூபினின் மேஜிக் வேலை செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 


டிரெண்டிங் @ விகடன்