வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (26/02/2018)

கடைசி தொடர்பு:17:47 (26/02/2018)

திடீரென சூரியன் காணாமல் போய்விட்டால் என்னவெல்லாம் நடக்கும்? #FunToKnow

சூரியன்

தினமும் காலையில் எழுந்ததும் என்ன செய்வீர்கள்? கண்களைத் தேய்த்தபடியே வெளியே சென்று வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு உள்ளே வந்து நமது வேலையைத் தொடங்குவோம். இருட்டிலே இருந்து விட்டு வெளிச்சத்தைப் பார்ப்பது நமக்கு ஒருவித புத்துணர்ச்சியை அளிக்கும். தினமும் அந்த வெளிச்சத்தைத் தரக்கூடியது சூரியன். திடீரென சூரியன் காணாமல் போய் விட்டால் என்ன நடக்கும்? என்ன... வெளிச்சம் இருக்காது? அவ்வளவுதானே என்றுதான் உடனே தோன்றும். கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். வேண்டாம் நானே சொல்கிறேன் ( உங்களை ஏன் சிந்திக்க வேண்டாம் என்று சொன்னேன் என்று முடிவில் சொல்கிறேன்).

சூரியன் திடீரென காணாமல் போனாலும் நீங்கள் கவலைப்படத் தேவை இல்லை, முதல் எட்டரை நிமிடங்களுக்கு. ஏனெனில் ஒளி சூரியனிலிருந்து பூமியை வந்தடைய எட்டரை நிமிடங்கள் ஆகும். சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களையும் தன்னுடைய புவியீர்ப்பு விசையினால் தன்வசம் வைத்திருக்கிறது சூரியன். புவியீர்ப்பு விசையும் ஒளியின் வேகத்திலேயே (ஒளியை விட வேறு எதுவும் வேகமாகப் பயணிக்க முடியாது. எனவே, அதைவிடச் சிறிது குறைவாய் வைத்துக்கொள்வோம்) பயணிக்கக் கூடியது என்பதால் அதுவும் பூமியை வந்தடைய எட்டரை நிமிடங்கள் ஆகும். எனவே, முதல் எட்டரை நிமிடங்கள் நீங்கள் சூரியனைப் பார்க்க முடியும் வழக்கம்போல. அதன் பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் குழப்பங்கள் அதிகரிக்கத் தொடங்கும். சட்டென பூமியை இருள் சூழ்ந்து கொள்ளும். ஏற்கெனவே உங்களுக்கு இரவாக இருந்தால் நிலவின் தோற்றம் மறைந்து விடும். நிலவின் தோற்றம் மட்டுமல்ல; சூரியனின் ஒளியை பிரதிபலிக்கக் கூடிய மற்ற கோள்கள், சூரியக் குடும்பத்தில் உள்ள எந்த ஒரு பொருளும் கண்ணுக்குத் தெரியாது. 

புவியீர்ப்பு விசை இழப்பினால் கோள்கள்தான் சென்றுகொண்டிருக்கும் பாதையிலேயே இவ்வண்டத்தில் நேர்கோட்டில் நொடிக்கு பதினெட்டு மைல் வேகத்தில் பயணிக்கத் தொடங்கும். ஒரு வேளை இரு கோள்கள் அருகருகே வந்து ஒன்று மற்றொன்றின் ஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு மோதிக்கொள்ளலாம். இல்லையெனில் நேர்கோட்டில் அதன் பயணத்தை மேற்கொள்ளலாம். 

சூரியனின் முக்கிய அம்சமே உஷ்ணம்தான். பூமியின் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உறையத் தொடங்கும். பூமி முழுவதுமாக உறைய பல மில்லியன் வருடங்கள் ஆகலாம், ஆனால், பூமியின் மேற்பரப்பில் முதல் ஒரு வாரத்திலேயே ஜீரோ டிகிரி செல்சியஸுக்கும் கீழே சென்றுவிடும். ஒரு வருடத்தில் மைனஸ் நூறு டிகிரி செல்சியஸுக்குச் சென்று விடும். ஆனால், பூமியின் உட்கருவில் உள்ள உஷ்ணம் காரணமாக சில மில்லியன் வருடங்களுக்கு மைனஸ் இருநூற்று நாற்பது டிகிரி செல்சியஸிலேயே நிலை கொண்டிருக்கும். கடும் குளிர் காரணமாக வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்களும் உறைந்து திடமாகி பூமியில் விழக்கூடும்.
ஒளி இருந்தால்தானே ஒளிச்சேர்க்கை (photosynhesis) நடைபெறும்? ஒளிச்சேர்க்கை நடைபெற்றால்தான் தாவரங்கள் உயிர்வாழ முடியும். பூமியில் உள்ள 90 சதவிகித தாவரங்கள் சில மணித்துளிகளில் இறந்துவிடும். அண்டத்திலுள்ள காஸ்மிக் கதிர்கள் நேரடியாக வந்து பூமியைத் தாக்கும். எனவே, மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் பல வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான எந்த அடிப்படை ஆதாரங்களும் இருக்காது.

இவை எல்லாம் நடந்தபின் பூமியும் இவ்வண்டத்தில் இலக்கின்றி சுற்றித் திரியும் ஒரு பாறை மட்டுமே. இவ்வளவையும் சிந்தித்தால் உங்கள் மனம் என்னாவது அதனால்தான் வேண்டாமென்றேன். ஆனால், கவலைப்படத் தேவை இல்லை இவை எதுவும் இன்னும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு நடக்காது. தைரிமாய் இருங்கள் நாளை காலை சூரியன் வந்து விடும்.


டிரெண்டிங் @ விகடன்