Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``உதாசீனப்படுத்தும் கண்களில் உள்ளது ஊனம்!'' – ஐ.நா-வின் பாலின சமத்துவக் குழு உறுப்பினர் மாள்விகா

2002-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் பிக்கனேரில் இருந்த தனது வீட்டில் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவுகூர்கிறார் மாள்விகா. ``கும்பகோணம்தான் எனக்கு சொந்த ஊர். அப்பாவுக்கு ராஜஸ்தான்ல வேலை. அப்பா, அக்கா, அம்மான்னு எங்க எல்லோருக்குமே ராஜஸ்தான் பழகிடுச்சு. 8-ம் வகுப்புக்குப் பிறகான சம்மர் வெக்கேஷன் அது. நேற்று நடந்த மாதிரி இப்பவும் நினைவிருக்கு. எனக்குப் பிடிச்ச ஒரு ஜீன்ஸ் பேன்ட்ல ஓட்டை இருந்ததைப் பார்த்துட்டு, `கொஞ்சம் ஃபெவிகால் அப்ளை பண்ணி ஒட்டிடலாம்'னு நினைச்சேன்” சிரிக்கிறார். ``ஏதாவது கனமான ஒரு பொருளை எடுத்து ஜீன்ஸ் மேல வெச்சு அழுத்தி ஒட்டலாம்னு ஒரு ஐடியா. வீட்டுக்குப் பின்னாடி இருந்த வித்தியாசமா கட்டியான ஒரு பொருளை எடுத்துட்டுவந்து, ஜீன்ஸை ஒட்டவைக்கிறதுக்காக வேகமா பலமுறை அடிச்சேன். குண்டுவெடிச்சிடுச்சு. நினைவும் இழக்கல, வலியும் இல்ல. நரம்பு மண்டலமே வேலையை நிறுத்திக்கிட்ட மாதிரி, என் வீடே அழுது பதறின நிமிஷத்தை வேடிக்கை பார்த்தேன்.” 

மாள்விகா

மாள்விகாவின் வீட்டின் அருகில் இருந்த வெடிபொருள் கிடங்கில், அந்தச் சம்பவத்துக்குச் சிறிது நாள்களுக்கு முன் நிகழ்ந்த வெடிவிபத்து, சிறுமியான அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அதன் விளைவாக, சில கிலோமீட்டர் தூரத்துக்குச் சிதறிய கிரெனேடைத்தான் அவர் விளையாட்டாகக் கையாண்டிருக்கிறார்.

``ரத்தக்குளியல் அது. ரெண்டு கைகளும் காணாமப்போயிருந்தன. கீழே இருந்த சதைத்துண்டுகளைச் சேகரிச்சு, என்னையும் தூக்கிக்கிட்டு அப்பாவும் அவருடைய நண்பரும் ஜீப்ல ஏறிட்டாங்க. அப்பாவுடைய ஃப்ரெண்ட்கிட்ட சொன்னேன், `அங்கிள் என்னோட கால் கீழே விழப்போகுது. அதையும் பிடிங்க'னு' நினைக்கவே நடுக்கம் தரும் அந்த விபத்து, தனக்கான பாடம்'' என்கிறார் மாள்விகா. விபத்தின் வலியையே நான்கு நாள்களுக்குப் பிறகே உணர்ந்த மாள்விகா, 18 மாதங்கள் படுக்கையில் கழித்துவிட்டு, பல அறுவைசிகிச்சைகளுக்குப் பிறகே இரு கைகள் இல்லாமல், கால்களில் 80 சதவிகித நரம்புகள் சேதமடைந்தபடி வீடு திரும்பியிருக்கிறார். அடுத்த மூன்று மாதங்களில் வந்த 10-ம் வகுப்பு தனித்தேர்வில், ஸ்டேட் ரேங்க் வாங்கிய இவர்தான், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். மொழிப்பாடமான இந்தியில் முதல் இடம்.

விபத்துக்கு முன்னர் வரை சுமாராகத்தான் படித்ததாகச் சொன்ன மாள்விகாவிடம், ``ஏன் இந்தப் படிப்பு வெறி?'' என்று கேட்டதும், ``சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய எனக்கு, சிலரின் பரிதாபம் சிந்தும் கண்கள் பிடிக்கவில்லை. என் குடும்பம்தான் என்னுடைய தூண். அன்பு மட்டும்தான் அதன் அஸ்திவாரம். ஒரு டைவர்ஷனுக்காகப் படிச்சேன். ஸ்டேட் ரேங்க் மூலமா கிடைச்ச மீடியா கவனத்தினால், அப்துல் கலாம் ஐயாவைப் பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. நான் யாருன்னு எனக்குப் புரியவைக்க, அந்த வெற்றி உதவுச்சு” என்றார்.

அப்துல் கலாமுடன் மாள்விகா

`தடைகளை எதிர்த்து யுத்தம் செய்யும்போது, நீங்கள் ஜெயிக்கிறீர்கள்’ என்று தொடர்ந்து பேசும் மாள்விகாவின் நம்பிக்கை, TEDtalk யூ டியூபில் பிரசித்தம். ``மாற்றுத்திறனாளிகளுக்காகவும் உலகம் வடிவமைக்கப்பட வேண்டும். எஸ்கலேட்டர்கள் தொடங்கி பயண வசதிகள், பொழுதுபோக்கு, வேலைவாய்ப்பு, மனநல ஆலோசனை என அரசும் சமூகமும் எங்களுக்கான வசதிகளைச் செய்ய வேண்டும். இது கருணைச் சேவையல்ல. மொத்த சமூகத்தின் பொறுப்பு” என்று சொல்லும் முனைவர் மாள்விகா, தற்போது அமெரிக்காவில் அறியப்பட்ட தன்னம்பிக்கைப் பேச்சாளர். ஐ.நா-வின் இளைஞர் மற்றும் பாலினச் சமத்துவக் குழுவின் உறுப்பினராகவும், உலகப் பொருளாதார மையத்தில் குளோபல் ஷேப்பராகவும், ஆக்சசிபிள் ஃபேஷன் அமைப்பின் பிரபல மாடலாகவும் ஜொலிக்கிறார்.

``எங்களை நோக்கிய மோசமான அணுகுமுறைதான் ஊனம். நான் இந்த நாட்டின் ஜனாதிபதியானாலும் என் மீது பரிதாபம் காட்டும் உதாசீனப்படுத்தும் கண்கள் இருக்கவே செய்யும்” `உங்களில் ஒருவராக’ எங்களை முன்னோக்கி நடத்தவைக்கும் கனவுக்கான அமைப்பை உருவாக்கும் வேலைகளில் இருக்கிறேன்'' என்கிறார் தன் திடக்குரலில். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement